தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 15 ஜனவரி, 2014

முல்லைப் பெரியாறு அணை. இந்த அணைக்கு சொந்தக்காரர் பென்னி குயிக்!!!


பென்னி குயிக் இனத்தால் வெள்ளையராக இருந்தாலும் பிறப்பால் இந்தியர்…..! அவர் ஆற்றிய தொண்டால் தமிழர்….! இன்று திருவாளர் பென்னி குயிக் அவர்களின் பிறந்த நாள்…! அவரை வணங்கி நினைவு கூறுவோம்…!

இறந்தவர்களை சாமிக்கு சமமாக வைத்துப் போற்றும் மதுரை மண், அந்த மண்ணுக்காகத் தன் சொத்து சுகம் எல்லாவற்றையும் இழந்து முல்லைப் பெரியாறு அணை கட்டிய ஒரு வெள்ளைக்காரரை குலம் தழைக்க வரம் கொடுத்த சாமியாகவே மதிப்பதில் வியப்பேதுமில்லை.

ஆங்கிலேயர்கள் நாட்டைவிட்டுப் போன கையோடு, அவர்களின் அடையாளங்கள் ஒவ்வொன்றையும் அடிமைத்தனத்தின் சின்னமாகத்தான் நாடு பார்த்தது. தமிழகத்தில் பல ஊர்களில் ஆங்கிலேயர் பெயரிலிருந்த தெருக்கள், சாலைகளுக்கு தமிழ்ப் பெயர்கள் சூட்டப்பட்டுவிட்டன. ஆனால், நூறு ஆண்டுகள் கடந்த நிலையில், ஒரு பிரிட்டிஷ்காரரின் பெயர் மட்டும் இன்னும் கிராமங்களில் பிறக்கும் பிள்ளைகளுக்கும், புதிதாக உருவாகும் குடியிருப்புகள், சாலைகளுக்கும் வைக்கப்படுகிறதென்றால் அது பென்னி குயிக்தான்!

இனத்தால் ஆங்கிலேயர் என்றாலும் பிறப்பால் இந்தியர்தான் கர்னல் பென்னி குயிக். 1841-ல் புனே நகரில் பிறந்த இவர், இங்கிலாந்து ராணுவத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார். சென்னை மாகாண சட்டசபை கவுன்சிலில் உறுப்பினராக இருந்தார். இந்தியாவின் பல பகுதிகளில் உருவான நீர்ப்பாசனத் திட்டங்களில் இவர் பங்கு பெரியது.

ஆனால் இவரே திட்டம் தீட்டி, முன்னின்று செயல்படுத்தியது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணைக்கு சொந்தக்காரர் என்று கூட சொல்லலாம்.

இந்த அணை உருவாவதற்கு முன்பு, தென் தமிழகத்தின் பெரிய மாவட்டங்களான மதுரை, ராமநாதபுரத்தில் தலைவிரித்தாடி பஞ்சம், பசியால் துடித்து இறந்த உயிர்கள் ஏராளம் என்பதை, பழைய பிரிட்டிஷ் ஆட்சிக்கால அரசிதழ்களில் பதிவு செய்துள்ளனர். அன்றைக்கு தென்மாவட்டங்களுக்கு பெரிய நதி என்றால் வைகைதான். ஆனால் வைகை பல முறை பொய்த்துப் போய் மக்களை பெரும் துயத்தில் தள்ளிவிட்டது.

அப்போதுதான் மேற்கு தொடர்ச்சி மலையில், நம் தமிழகப் பகுதிக்குள் பெய்யும் மழைநீர் பெரியாறு என்ற பெயரில் 56 கிமீ தூரம் தமிழகத்தில் ஆறாகப் பாய்ந்து, கேரளாவுக்குள் நுழைந்து முல்லையாற்றுடன் கலந்து அரபிக் கடலில் வீணாகச் சென்று கலப்பதைக் கவனித்த பென்னி குயிக் ஒரு திட்டம் தீட்டினார்.

இந்த ஆற்றை கிழக்குப் புறமாக திருப்பி விடுவதன் மூலம் வைகை நதி நீரை மட்டுமே நம்பியுள்ள பல லட்சம் ஏக்கர் வறண்ட நிலங்கள் விளை நிலங்களாக மாறும் என்பதை ஒரு ஆய்வு மூலம் தெரிந்து கொண்டவர், பெரியாற்றின் குறுக்கே அணை ஒன்றினை கட்ட திட்டமிட்டார்.

இதன் அடிப்படையில் பெரியாறு தேக்கடி நீர்தேக்கம் உருவாக்கப்பட்டு, பெரியாறு-முல்லையாறுகள் கிழக்கு முகமாக திருப்பி விடப்பட்டு, அங்கிருந்து ஒரு குகைப் பாதை வழியாக வைகை ஆற்றிற்குத் திருப்பி விடப்படுகிறது. இதற்காக திட்டம் ஒன்றினை தயாரித்து ஆங்கில அரசின் பார்வைக்கு அனுப்பி அனுமதியும் பெற்றார்.

அப்போதைய சென்னை மாகாண அரசின் கவர்னர் லார்டு கன்னிமாரா அவர்கள் முன்னிலையில் அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னிகுயிக் தலைமையில் பிரிட்டிஷ் பொறியாளர்கள் இந்த அணை கட்டுமானப் பணியினை மேற்கொண்டனர். காடு, விஷப்பூச்சிகள், காட்டு யானைகள், வன விலங்குகள், கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாற்று வெள்ளம் போன்றவைகளையும் பொருட்படுத்தாமல், மூன்று ஆண்டுகளில் அணை பாதி கட்டப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையினால் உருவான வெள்ளத்தினால், கட்டுமானப் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, இந்தத் திட்டத்தினை தொடர்வதற்கு ஆங்கிலேய அரசின் நிதி ஒதுக்கீடு குறிப்பிட்ட காலகட்டங்களில் கிடைக்காததால் பென்னிகுயிக் அவர்கள் இங்கிலாந்து சென்றார்.

தனது நாட்டில் இருந்த சொத்துக்களையெல்லாம் விற்றார். வீட்டில் இருந்த கட்டிலைக் கூட அவர் விடவில்லை, அதையும் விற்றார். தனது மனைவியின் நகைகளையெல்லாம் விற்றார். அந்தக் காலத்தில் இருந்த பல்வேறு பெரும்பணக்காரர்களிடம் கையேந்தி நிதி சேகரித்தார். தனக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாத பூமியில், தனக்கு சற்றும் தொடர்பே இல்லாதவர்களாக இருந்தாலும், மக்கள் வறட்சியில் வாடக் கூடாது, அவர்கள் தண்ணீரின்றி தவிக்கக் கூடாது, காய்ந்து கருகிப் போன தென் தமிழக வயல்களெல்லாம் பூத்துக் குலுங்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு இப்படி மெனக்கெட்டார் பென்னிகுயிக். முல்லைப் பெரியாறு அணையை 1895ம் ஆண்டில் அவர் கட்டி முடித்தார்.

அணை கட்டுமானப் பணியின்போது பலர் உயிரிழந்தனர். தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டும், காலரா வந்தும் பலர் பலியானார்கள். அவர்களில் தமிழர்கள் மட்டுமல்ல பல ஆங்கிலேயர்களும் கூட இருந்துள்ளனர். 20க்கும் மேற்பட்ட என்ஜீனியர்கள், உயிரிழ்நதுள்ளனர். இவர்களுக்கான கல்லறை கூட இன்றும் அங்குள்ளது.

நான்கு வருடமாக தனது தந்தையைப் பார்க்க முடியாமல் தவித்த ஒரு வெள்ளைக்கார சிறுமி தனது தாயாருடன் முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்கு வந்தபோது ஒரு பெரிய கல் அந்தச் சிறுமியின் தலை மீது விழுந்து சம்பவ இடத்திலேயே அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். அந்த சிறுமியின் கல்லறையும் கூட அணைப் பகுதியில்தான் இன்றும் உள்ளது.

இப்படி தமிழர்களின் ரத்தமும், ஆங்கிலேயர்களின் ரத்தமும் கலந்து உருவாகி மாபெரும் தியாகச் சின்னமாக, தென் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் ‘தெய்வ’மாக காட்சிதரும் முல்லைப் பெரியாறு அணையைத்தான் தண்ணீர் வெடிகுண்டு என்று சித்தரித்து படமெடுத்தார் அந்த மலையாள இயக்குநர்.

தென் தமிழக மக்களின் வாடிய வயிறுகளையும், சுருண்டு விழுந்து அவர்கள் செத்த பரிதாபத்தையும், கருகிப் போன வயல்களையும் பார்த்து வேதனைப்பட்டு, இந்த அணையை தனது உழைப்பையும், சொத்தையும் கொட்டி உருவாக்கிய பென்னிகுயிக் தென் தமிழக மக்களின் தெய்வமாக பார்க்கப்படுகிறார். அவரது படங்களை வைத்து தென் தமிழகத்தின் பல்வேறு கிராமங்களிலும் விவசாயிகள் வணங்கி வருகின்றனர்.

அணை கட்டி முடிக்கப்பட்டவுடன் தனது மனைவியோடு அங்கு சென்று பொங்கிப் பெருகி அணை வழியாக ஓடி வந்த தண்ணீரைப் பார்த்து பென்னிகுயிக் ஆனந்தக் கண்ணீர் வடித்தார் என்று செய்திகள் கூறுகின்றன. ஒரே ஒரு அரசு அதிகாரி, அதிகபட்ச நேர்மை, மக்கள் மீது கரிசனம் கொண்டு செயல்பட்டால்கூட எவ்வளவு பெரிய நன்மை விளையும் என்பதற்கு பென்னி குயிக் பெரிய உதாரணம்!

இந்த அணை அக்டோபர் 1895ம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாண கவர்னர் லார்டு வென்லாக் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 2.23 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியினை பெற்று வருகின்றன.

தேனி உள்ளிட்ட தென் மாவட்ட கிராமங்களில் இன்றும் கூட தங்களது வீட்டில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு முதல் பெயராக பென்னிகுயிக் என்று பெயர் சூட்டுவது பாரம்பரியமாக தொடர்கிறது.

தேனி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களிலும் பொங்கல் பண்டிகையின்போது பென்னிகுயிக்குக்கு படையலிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

பென்னிகுயிக் கோவில்களும் கூட தேனி மாவட்ட கிராமங்களில் ஏராளமாக உள்ளன.

நல்ல மனிதர்கள் அருகி விட்ட இந்தக் காலக் கட்டத்தில் தன்னலம் பாராது தனது சொத்துக்களை விற்றுத் தமிழர்களுக்கு அரும் தொண்டாற்றிய பென்னி குயிக் அவர்களை நாம் நினைவு கூறுவது எதிர்காலத்தில் சில பென்னி குயிக்கள் பிறக்க வழி வகுக்கும்.

நன்றி எனதருமை உறவுகளே…!

என்றென்றும் அன்புடன் உங்கள் நண்பன் அமராவதிபுதூர் பிரேம்நாத்.

நன்றி: என்வழி இணையத்தளம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக