வவுனியா பிரதேசத்தில் பழங்கால நாணயங்கள் அடங்கிய பானையொன்று நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
ஒரு பக்கத்தில் திரிசூலம் சின்னத்தைக் கொண்ட 120 நாணயங்கள் பானையொன்றில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வவுனியா தாண்டிக்குளத்தில் இருந்து சாஸ்திரிகூழாங்குளம் - கல்மடு செல்லும் வீதியில் மருக்காரம்பலை பாடசாலைக்கு எதிரில் வீதியோரத்தில் வாய்க்கால் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களே இந்த நாணயங்களைக் கொண்ட பானையைக் கண்டுள்ளனர்.
இந்தத் தகவல் வவுனியா பிரதேச செயலாளருக்கும் அரசாங்க அதிபருக்கும் அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற வவுனியா அரசாங்க அதிபர் அந்த நாணயங்களைப் பரிசீலனை செய்ததன் பின்னர் செய்தியாளர்களுக்கு இதுபற்றிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
முற்காலத்தைச் சேர்ந்தவையாகக் கருதப்படுகின்ற இந்த நாணயங்கள் இந்திய நாணயங்களாக இருக்கலாம் என்று அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இந்த நாணயங்கள் வவுனியாவில் உள்ள தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக