கி.மு.338 ஆம் ஆண்டில் கிரேக்கருடன் போரிட வைத்து அலெக்ஸாண்டரின் தந்தை இரண்டாம்· பிளிப் [Philip II] தனித்தனியாக ஆண்டுவந்த மாஸிடோனியன் குடிவாசிகளின் பகுதிகளையும், மற்ற நகரங்களையும் சேர்த்து ஓர் ஐக்கிய மாசிடோனியாவாக ஆக்கினார். ஆனால் அப்போது 20 வயதான அலெக்ஸாண்டருக்குத் தந்தை செய்த அவ்விணைப்புப் போதுமானதாகத் தெரிய வில்லை! கி.மு.336 ஆம் ஆண்டு அலெக்ஸாண்டர் அரசராக முடிசூடினார்.
மாபெரும் கிரேக்க இதிகாச வீரர்களான ஹெர்குலிஸ், அக்கிலிஸ் [Hercules, Achilles] பரம்பரையில் வந்ததாக அலெக்ஸாண்டர் தன்னைப் பீற்றிக்கொண்டார்! அவர்களைப் போன்று தானும் தன் தனது பராக்கிரமத்தை உலகில் காட்ட வேண்டும் என்று தீர்மானித்தார். கி.மு.334 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டர் திறமையுடன் 30,000 கிரேக்கப் படையினரை அணிவகுத்து, உணவு, உடை, வாகனம், வசதி அளித்து ஹெல்லெஸ்பாண்ட் [Hellespont (Gallipoli)] தளமுனையைக் கடந்து பெர்ஸியா [Persia] நாட்டின் உள்ளே நுழைந்தார்.
தனது போர்த் தந்திரத்தாலும், கனிவுக் கவர்ச்சியாலும் கிராகஸ் நதியைக் கடந்து போரிட்டு, லெபானின் டையரையும் [Granicus (Goneri) River to Tyre (Beirut Lebanon)] அடுத்துக் கைக்கொண்டு, எகிப்தைப் பிடித்தார். அதாவது முதல் மூச்சிலேயே தனது பராக்கிரமத்தில் கிழக்கு மத்தியதரைப் பகுதிகளைக் கைப்பற்றித் தன் வெற்றிகளை நிலைநாட்டினார். கி.மு.331 இல் பெர்ஸிய மன்னன் மூன்றாம் டாரியஸ் [Darius III] மூர்க்கப் படைகளை கௌகமேலா [Gaugamela (Tabriz, Iran)] என்னுமிடத்தில் முறியடித்து, பெர்ஸிபோலிஸ் அரண்மனைக்குத் [Persepolis] தீவைத்தார்.
150 ஆண்டுகளுக்கு முன்பு பெர்ஸியா மன்னன் கிரேக்கரின் அக்ரபோலிஸ் [Acropolis] நகரைத் தீவைத்து அழித்த கோரத்திற்குப் பழிவாங்கிக் கொண்டார். "ஆசிய அதிபதி" [Lord of Asia] என்று தன்னைப் பீற்றிக் கொண்டு, அலெக்ஸாண்டர் காடு, மலை, பாலைவனம் கடந்து, கடும் மழை, வெப்பம் தாங்கிக் கொண்டு ஆப்கானிஸ்தானில் உள்ள ஹிந்துகுஷ் மலைத் தொடர்களைத் தாண்டி, எதைப் பற்றியும் அறியாத பிரதேசங்களில் துணிவாகப் படைகளுடன் கால்வைத்தார்.
ஐந்து நதிகள் பாயும் சிந்து சமவெளிப் பரப்பில் அலெக்ஸாண்டர் நுழைந்து இந்திய மன்னன் புருஷோத்தமனைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். வென்ற நாடுகளில் எல்லாம் தன் பெயரில் 32 புதிய நகரங்களுக்கு அலெக்ஸாண்டிரியா எனப் பெயரிட்டார். இறுதியாக ஹைபஸிஸ் நதிக்கரையில் [Hyphasis (Sutlej River)] கிரேக்கப் படையினர் களைத்துப் போய் அடுத்துப் போரிட மறுத்தனர். பிறகு சிந்து நதித் தீரத்தில் தென்புறம் நடந்து படாலா [Patala] வழியாக அரபிக்கடலை அடைந்து படகுகளில் பெர்ஸின் வளைகுடா கடந்து பாபிலோனை [Babylon] வந்து சேர்ந்தார் என்று அறியப் படுகிறது. கி.மு.323 ஆம் ஆண்டு பாபிலோனில் அலெக்ஸாண்டர் தனது 32 ஆம் வயதில் நோய்வாய்ப் பட்டுக் காலமானார்.
அலெக்ஸாண்டடிரின் குரு மாமேதை அரிஸ்டாடில்.
++++++++++++++++++++++++++
கிரேக்க நாட்டின் மாமேதை அரிஸ்டாடில் பிளாடோவின் சீடர்; அலெக்ஸாண்டரின் குரு. அரிஸ்டாடில் கி.மு.384 இல் மாசிடோனியாவின் ஆன்ராஸ் குடியேற்றப் பகுதியில் பிறந்தார். அவரது தந்தை பெயர் நிகோமாசெஸ் [Nicomachus]. தந்தை மாசிடோனியா மன்னரின் அரசவை மருத்துவராகப் பணியாற்றினார். தந்தையாரே மகனுக்குக் கல்வி புகட்டியதாகத் தெரிகிறது. சிறுவயதிலே இறந்து விட்டதால், ·பெட்டிஸ் [Phaetis] என்னும் பெயர் கொண்ட தாயைப் பற்றி எதுவும் வரலாற்றில் தெரியவில்லை.
பத்து வயதில் தந்தையும் மரணம் அடைந்த பின், அரிஸ்டாடில் சித்தப்பாவுடன் வாழ்ந்து வந்தார். தந்தையின் மருத்துவ அறிவு அரிஸ்டாடிலின் சிந்தை விரியத் தூண்டு கோலாய்ப் புகட்டியது. அவர் 18 வயது முதல் 37 வயது வரை பிளாடோவின் பல்கலைக் கழகத்தில் [Plato's Academy] கல்விப் பயிற்சி பெற்றதாகத் தெரிகிறது. அவர் பல்வேறு தலைப்புகளில் [பௌதிகம், உயிரியல், விலங்கியல், அரசியல், தர்க்கவியல், கவிதைக் காவியம்] நூல்கள் எழுதினார்.
அரிஸ்டாடிலின் உரையாடல்கள் அவரது மாணவரால் எழுதப்பட்டு நூல்களாய் நிலவின. அவை பௌதிகம், கோட்பாடியல், அரசியல், கவித்துவம், நிக்கோமசென் நெறியியல், தி அனிமா (ஆத்மாவைப் பற்றி) [Physics, Metaphysics (Ontology), Politics, Poetics, Nicomachean Ethics, De Anima (On the Soul)].
அரிஸ்டாடில் தன் காலத்திய அனைத்துத் அறிவுத் தலைப்புகளைப் பற்றிக் கற்ற மிகச்சிலரில் ஒருவராகக் கருதப் படுகிறார். பிளாடோவின் மரணத்துக்குப் [கி.மு.347] பிறகு அவருக்குக் கிடைக்க வேண்டிய பதவி, பிளாடோவின் உறவினன் ஒருவனுக்கு அளிக்கப் பட்டதால் அவர் கழகத்தை விட்டு வெளியேற நேர்ந்தது. கி.மு. 342 இல் மாசிடோனியா மன்னர்· பிளிப்பால் அழைக்கப்பட்டு, அலெக்ஸாண்டருக்குக் குருவாக நியமனம் ஆனார். அப்போது அலெக்ஸாண்டருக்கு வயது 13.
கிரேக்க, ரோமானிய வரலாற்றை எழுதிய புளூடார்க் [Plutarch (A.D.46-127)] எழுதியிருப்பதின் மூலம், அரிஸ்டாடில் அலெக்ஸாண்டருக்கு நெறியியல், அரசியல் போதித்ததோடு ஆழ்ந்த வேதாந்த ஞானத்தையும் ஊட்டியதாக அறியப் படுகிறது. பின்னால் அலெக்ஸாண்டர் அரிஸ்டாடிலுக்கு அன்னிய நாட்டுக் கலைத்துவ, வேதாந்த, விஞ்ஞான, வானியல் நூல்களை அளித்ததாகத் தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக