அகத்திய சித்தர் தென்பாண்டி நாட்டில் தங்கியிருந்த சமயம் அது. பாண்டிய மன்னன் ஒருவன் அவரை வணங்க வந்தான். அவனுக்கு முதுகில் கூன் இருந்தது. தனது பரம்பரையே இப்படி கூன் விழுவதாக அவன் அகத்தியரிடம் சொல்லி வருத்தப்பட்டான். அகத்தியர் அவனுக்கு ஆறுதல் சொல்லி, பிறவிக்கூனை குணப்படுத்த தன்னிடம் மூலிகைகள் உள்ளதாகவும், சில நாட்கள் கழித்து ஆஸ்ரமத்திற்கு வரும்படியும் சொல்லி அனுப்பினார்.மன்னன் நம்பிக்கையுடன் சென்றான்.
தேரையரை அழைத்த அகத்தியர், சீடனே! கூனை நிமிர்த்தும் மூலிகை வகைகளின் பெயர்களைச் சொல்கிறேன் கேள். அவற்றை காட்டிற்குள் சென்று பறித்து வா, எனச்சொல்லி, மூலிகைகளின் அடையாளம் மற்றும் குணத்தையும் எடுத்துச் சொன்னார். தேரையரும், அகத்தியர் கூறியபடியே அவற்றை அடையாளம் கண்டு ஒரு பை நிறைய பறித்து வந்து விட்டார். அகத்தியர் அந்த மூலிகைகளைச் சாறெடுத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்தார். தேரையரிடம், தேரையா! நீ இந்தக் கரைசல் பக்குவமாக வரும் வரை கிளறிக்கொண்டிரு. எனக்கு காட்டிற்குள் சிறிது வேலையிருக் கிறது. நான் வந்ததும் இறக்கி வைத்துக் கொள்ளலாம், என சொல்லிவிட்டு சென்று விட்டார். தேரையரும் பக்குவமாக காய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது, அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு மேலுள்ள மேற்கூரையில் இருந்து டக் என சப்தம் வந்தது. இது கேட்டு நிமிர்ந்தார் தேரையர். என்ன ஆச்சரியம்! வளைந்திருந்த அந்த மூங்கில் நிமிர்ந்து நேராகி இருந்தது. தேரையரின் மூளையில் பளிச்சென ஒரு மின்னல் வெட்டியது. குரு என்னவோ, தான் வந்த பிறகு கரைசலை இறக்கி வைத்துக் கொள்ளலாம் என்று தான் சொல்லியிருக்கிறார்.
ஒருவேளை அவர் வர தாமதமானால், கரைசல் மேலும் சூடாகி, இந்த அற்புதமான மருத்துவக் குணத்தை இழந்து போகலாம். மூலிகையின் புகைபட்டே வளைந்த மூங்கில் நிமிர்கிறது என்றால், மூலிகை கரைசலைத் தடவினால் கூன் நிச்சயமாக குணமாகத்தானே செய்யும்! இது தான் சரியான பக்குவம். கரைசலை இறக்கி வைத்து விட வேண்டியது தான், என நினைத்தவர், அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கி வைத்துவிட்டார். களைப்பாக இருந்ததால், சற்று படுத்திருந்தார். வெளியே சென்றிருந்த அகத்தியர் வந்தார்.
அடேய்! உன்னை நம்பி எவ்வளவு முக்கியமான பொறுப்பை ஒப்படைத்து விட்டுப் போனேன். நீ என்னடாவென்றால், உறங்கிக் கொண்டிருக்கிறாயே! மூலிகை குழம்பு என்னாயிற்றோ! என்று கோபமாகப் பேசியவரிடம், மிகுந்த பணிவுடன் சென்ற தேரையர், நடந்ததைச் சொன்னார்.அகத்தியர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். சீடனே! எனக்கு கிடைத்தவர்களில் நீ மிகவும் உயர்ந்தவன். ஒவ்வொரு ஆசிரியருக்கும் இப்படி புத்திசாலி மாணவர்கள் கிடைக்கவும் கூட கொடுத்து வைக்க வேண்டும்! அன்றொரு நாள் ஒரு உயிரைக் காப்பாற்ற மூளையில் இருந்த தேரையையே குதிக்கச் செய்தாய்.இன்று, கூன் நிமிரும் பக்குவத்திற்கு கரைசலை தயார் செய்துள்ளாய். பெரியவர்கள் சொன்னதைக் கேட்க வேண்டும் தான்! அதே நேரம், சமயத்திற்கு தக்க முடிவுகளையும் எடுப்பதன் மூலம் அவர்களின் அபிமானத்தை மேலும் பெறலாம். மகனே! இனி நீ என்னுடன் இருக்கக் கூடாது. வெளியே செல், என்றார். தேரையர் அதிர்ச்சியானார். நல்லதைச் செய்ததாகச் சொல்லிவிட்டு, இப்போது வெளியே போகச் சொல்கிறாரே! என குழம்பி நின்றார்.ஒருவேளை நாம் செய்தது முட்டாள்தனமோ.. குரு நம்மைப் புகழ்வது போல பழிக்கிறாரோ, என கலங்கி நின்றார்.
குருதேவா! நான் ஏதும் தவறு செய்து விட்டேனா? தாங்கள் என்னை வெளியே போகச் சொல்லுமளவுக்கு நான் தங்கள் கவுரவத்துக்கு பங்கம் இழைத்து விட்டேனா? அவ்வாறு செய்திருந்தால், நான் உயிர் தரிக்க மாட்டேன்... தேரையர் கிட்டத் தட்ட அழும் நிலைக்கு வந்துவிட்டார்.அடடா... தவறாகப் புரிந்து கொண்டாயே! திறமையுள்ள இருவர் ஒரே இடத்தில் இருப்பதால் மக்களுக்கு லாபம் குறைகிறது. அவர்கள் வெவ்வேறு இடங்களில் இருந்தால் பயன்பெறும் மக்களின் அளவு கூடும். நீ தனித்தே வைத்தியம் செய் என்று அனுப்பிவைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக