உழவுத் தொழிலுக்கு உதவும் மாடுகளுக்கு நன்றி சொல்லும் விதமாகக் கொண்டாடுவதுதான் மாட்டுப்பொங்கல்னு சொல்லுவாங்க.அனைவருக்கும் என் இனிய மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள் -silvandu!
நேற்று மாதிரியேதான் இன்றும் கோலம் போடுவது, நல்ல நேரம் பார்ப்பது, பொங்கல் வைப்பது எல்லாம். ஆனால் இன்று ஒரு பெரிய பானையில் மட்டும் வெள்ளைப் பொங்கல். பொங்கல் வேகும்போதே அதிலிருந்து பொங்கல் தண்ணீர் என்று கொஞ்சம் தண்ணீரை ஒரு பெரிய சொம்பில் எடுத்து வைத்துக்கொள்வார்கள்.
வீட்டிலுள்ள கத்தி, கடப்பாறை, படி, அரிவாள்மனை போன்ற அதாவது உழவுக்கும், சமையலுக்கும் உதவும் எல்லா பொருள்களையும் கழுவிக் காயவைத்து பூசை, பொட்டிட்டு பொங்கல் மேடையில் கொண்டுவந்து வைப்பாங்க. மாலை 5 மணிக்கெல்லாம் படையல் செய்திடுவாங்க. ஞாயிறு என்றால் மட்டும் 6 மணிக்குமேல்.
அவரவர் வசதிக்கேற்ப அசைவ உணவு சமைக்கப்படும். இன்று எல்லோரும் நல்லெண்ணெய் தேய்த்து தலை குளிப்பாங்க.
இன்று மாலை 'மாடு மிரட்டுவது' என்று ஒன்று நடக்கும். அதற்காக காலையிலேயே மாடுகளின் கொம்புகளை சீவிவிட்டு, குளிப்பாட்டி, அவரவர் சார்ந்திருக்கும் கட்சி அல்லது பிடித்த வண்ணங்களை ( paint ) அவற்றின் கொம்புகளில் அடித்து விடுவர்.
கொம்புகளின் இடையில் பலவண்ண ரிப்பன்கள் பலூன்களை கட்டிவிடுவாங்க. நெற்றியில் மஞ்சள் குங்குமம் & சந்தனம், கழுத்தில் தோரணம், மாவிலை மாலை போடப்படும். அவை என்னமோ ஏதோ என மிரண்டுதான் போயிருக்கும்.
இதுதவிர வீட்டிலுள்ள வாகனங்களை கழுவி துடைத்து பூசை, பொட்டிட்டு, சந்தனம் தெளித்துவிட்டு, வாழைக்கன்றுகள், தோரணம், மாவிலை மாலைகள் போடப்பட்டு, பலூன்கள் கட்டப்பட்டு தயாராக இருக்கும்.
மாலை 5 க்குமேல் ஊர் முழுவதும் தமுக்கு அடித்து மாடுகளை மாடு மிரட்டும் இடத்திற்கு அனுப்ப தயாராக வைக்கச்சொல்லி சொல்லுவாங்க. உடனே தெருவில் தண்ணீர் தெளித்து கோலம் போடப்படும்.
(சில கிராம வீடுகளில் மாட்டுக்கொட்டகையின் பக்கத்தில் பெரிய இடம் இருக்கும் அதை சுத்தம் செய்து அதில் மாடுகளை கட்டி தனி தனி குடும்பமாக வழிப்படுவாங்க)
மீண்டும் ஒருமுறை அனுப்ப சொல்லி சொன்னதும் எல்லோரது வீட்டிலிருந்தும் தாம்பூலத்தட்டு, பழம், தேங்காய் எல்லாம் எடுத்துக்கொண்டு, மாடுகளை அழைத்துக் கொண்டுபோய் ஒரு இடத்தில் கூடுவார்கள். சில மாடுகள் முரண்டு பிடித்து எதிர் திசையில் ஓட ஆரம்பிக்கும். எங்கள் ஊரில் இரண்டு இடங்களில் மாடுகள் கூடும்.
கூட்டம்கூட்டமாக ஆண்கள், பெண்கள் எல்லோரும் அங்கு போவாங்க.அங்கு மாடுகளை வரிசையில் கட்டி அதுக்கு பல்வேறு விதமான .மாலைகள் போட்டு பொங்கல் சாதம் பழம் எல்லாம் கொடுத்து வழிப்படுவோம் பிறகு மாடுகளை சுத்தி திருஷ்டி கழித்து விட்டு பொங்கலோ பொங்கல்ன்னு.தமுக்கு அடிச்சிட்டே சத்தமாக கூறுவோம்
வழிபாடு முடிந்து அங்கிருந்து மாடுகள் மிரண்டுபோய் ஓடிவரும்.( இன்னைக்கு தான் மாடுகள் இப்படி ஒரு நிகழ்வை பார்க்கும் ஆகையால் எல்லாம் மிரண்டு போய் பாய்ந்து வரும்) அவை தானாகவே அவரவர் வீடுகளுக்குப் போய் சேர்ந்துவிடும். அல்லது சிலர் தேடிக்கொண்டிருப்பாங்க.
இது முடிந்த உடனே அவரவர் வீட்டிலுள்ள வாகனங்களை எடுத்துக்கொண்டு பொங்கலோ பொங்கல் என்று சொல்லிக்கொண்டு ஊர் முழுவதும் சுற்றி வருவாங்க.
இவற்றுடன் மாட்டு வண்டியும் பறக்கும். நானும்கூட இதில் போயிருக்கேன். ஆனால் வழியில் கொஞ்சம் பயமாத்தான் இருக்கும். சிலசமயங்களில் குடை சாய்ந்ததும் உண்டு. ஆனாலும் விடாமல் போய்விடுவதில் ஒரு இன்பம்.
வண்டி வந்து நின்ற பிறகு மாடுகளுக்கு தீபாராதணை காட்டி, சிதறு தேங்காய் உடைப்பாங்க. வீட்டில் எவ்வளவு தேங்காய் இருந்தாலும் சிதறு தேங்காயை எடுக்கும் யாராவது ஒருவர் அதிலிருந்து சிறிது கொடுத்து சாப்பிட்டால் அதன் ருஸியே தனிதான்.
கார், டிராக்டர், இரு சக்கர வாகனங்கள் என பலமணி நேரத்திற்கு ஊரை சுற்றுவாங்க. இதில் குட்டிப் பிள்ளைகள் வைத்திருப்பவர் பாடுதான் திண்டாட்டம். அவர்களும் ஊரைச் சுற்றிவரும் ஆசையில் இருப்பாங்க. வாகனங்களின் எண்ணிக்கை குறந்தபிறகு அவர்களை வைத்துக்கொண்டு வீட்டிலுள்ளோர் மெதுவாக சுற்றி வருவாங்க. இந்த ஊர்வலம் முடியவே நன்றாக இருட்டிவிடும்.
இது எல்லாம் முடிந்த பிறகு வீட்டில் படைப்பாங்க. மாடுகளுக்கும் சாதம், வாழைப்பழம் எல்லாம் சாப்பிடக் கொடுப்பாங்க. பிறகு எல்லோரும் சாப்பிடுவாங்க. தினமும் சாப்பிடும் கரும்புதான், ஆனாலும் இன்று யாருக்கும் பயப்படாமல் கரும்பை ஒருகை பார்க்கலாம்.
அதன்பிறகு அப்பா ஒரு தாம்பூலத் தட்டில் வெற்றிலை பாக்கு வைத்து அதில் காசு வைத்து அம்மாவுடன் சேர்ந்து நின்று வீட்டில் உள்ள எல்லோருக்கும் கொடுப்பாங்க. நாங்க ஒவ்வொருவரும் அவங்க காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு தட்டிலுள்ள தாம்பூலத்தை எடுத்துக்கொள்வோம்.
வெளியாட்களும், பிள்ளைகளும்கூட நிறையபேர் வருவாங்க. ஏற்கனவே சொன்னேனே, சில்லறையைப்பற்றி, அது இதுக்குத்தான். வருகின்ற எல்லோருக்கும் பணம் தாம்பூலம் வைத்து கொடுப்பாங்க. எல்லா வீட்டிலும் இது நடக்கும்.
2009 ல் நான் சிங்கப்பூர் வந்துவிட்டதால் இப்போது எப்படி என்னானு தெரியவில்லை . இந்த நிகழ்ச்சி எல்லாம் மனதிற்கு இதமானது. எங்கிருந்தாலும் வருடந்தோறும் மாட்டுப்பொங்கல் அன்று இந்த நிகழ்வுகள் மனதில் வந்து ஒரு சந்தோஷத்தையும், அதைத்தொடர்ந்து கண்கள் குளமாவதும் வாடிக்கையாகிவிட்டது.
அனைவருக்கும் என் இனிய மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்
- சாம்
silvandu!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக