தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 14 ஜனவரி, 2014

பழம்பெரும் நடிகையான அஞ்சலி தேவி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்!!

சென்னையில் வசித்து வந்த அஞ்சலி தேவி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஒரு வாரமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிர் இழந்தார். அவருக்கு வயது 86.

இசையமைப்பாளர் ஆதிநாராயண ராவை மணந்த அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அஞ்சலி தேவியின் பேத்தி சைலா ராவ் ஒரு நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன், என்.டி.ராமராவ், ஏ.நாகேஸ்வரராவ் ஆகியோருடன் ஜோடியாக நடித்தவர், அஞ்சலிதேவி. உடல் நலக்குறைவுகாரணமாக சென்னையில் நேற்று பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவி மரணமடைந்தார்.

அஞ்சலிதேவியின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள பெத்தாபுரம். அவருக்கு 5 வயது ஆனபோது, குடும்பம் காக்கிநாடாவில், குடியேறியது. பள்ளியில் படித்து வந்தபோது, அங்கு நடைபெற்ற நாடகங்களில் பங்கு கொண்டார். காக்கிநாடாவில், இசை அமைப்பாளராகவும், நடன இயக்குனராகவும் இருந்த ஆதிநாராயணராவ் என்ற இளைஞர், நடன நாடகத்தைப் பார்த்தார். அஞ்சலிதேவியின் அழகும் நடனமும், அவரைக் கவர்ந்தன. தன் நாடகங்களில் நடிக்க வாய்ப்பளித்தார்.

அஞ்சலிதேவி நடித்த "தெருப்பாடகன்'', "லோபி'' ஆகிய நாடகங்கள், ரசிகர்களிடம் அமோக ஆதரவைப் பெற்றன. இந்த நிலையில், அஞ்சலிதேவிக்கும், ஆதிநாராயணராவுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 1945_ம் ஆண்டு ஆந்திராவைச் சேர்ந்த பிரபல திரைப்பட இயக்குனர் சி.புல்லய்யா, "தெருப்பாடகன்'' நாடகத்தைப் பார்த்தார். அஞ்சலிதேவி சிறப்பாக நடனம் ஆடியதை பார்த்து மகிழ்ந்து, தன்னுடைய "கொல்லபாமா'' என்ற தெலுங்கு படத்தில் மோகினி வேடத்தில் நடிக்க வைத்தார். அந்த படம் ஆந்திராவில் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் வெளியாகி வெற்றிவாகை சூடியது. அதனால் அஞ்சலிதேவிக்கு படவாய்ப்புகள் குவியத் தொடங்கின.

தெலுங்கில், ஏ.நாகேஸ்வரராவுடன் அஞ்சலிதேவி நடித்த "தீலுகுர்ரம்'' என்ற படம், "மாயக்குதிரை'' என்ற பெயரில் தமிழில் "டப்'' செய்யப்பட்டு திரையிடப்பட்டது. மாயா ஜாலங்கள் நிறைந்த இந்தப் படம், ஓகோ என்று ஓடியது. அஞ்சலிதேவி தமிழ்நாட்டிலும் புகழ் பெற்றார். தமிழ்ப்பட வாய்ப்புகள் வந்தன. "மகாத்மா உதங்கர்'' என்ற தமிழ்ப் படத்தில் நடித்தார். 1949_ல் நடிக மன்னன் பி.ஹி. சின்னப்பாவுடன் "மங்கையர்க்கரசி'' என்ற படத்தில் நடித்தார். 1949_ல் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "மாயாவதி'' என்ற படத்தில் டி.ஆர்.மகாலிங்கத்துடன் இணைந்து நடித்தார்.

1954_ல் ஏவி.எம். தயாரிப்பான பெண் படத்தில் ஜெமினி கணேசன், வைஜயந்திமாலா ஆகியோருடன் இணைந்து நடித்தார். தமிழ்ப்படங்களில், அவர் சொந்தக்குரலில் பேசி நடித்தது குறிப்பிடத்தக்கது. 1955_ல் நாராயணன் கம்பெனி தயாரித்த "கணவனே கண்கண்ட தெய்வம்'' என்ற மெகாஹிட் படத்தில், ஜெமினி கணேசனுக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படத்தில், அஞ்சலிதேவியின் நடிப்பு அற்புதமாக அமைந்தது. இந்தப்படம், அவர் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

ஆந்திராவில் ஏற்கவே பிரபலமாகியிருந்தவர், தமிழ்ப்பட உலகிலும் பானுமதி, பத்மினி வரிசையில் இடம் பெற்றார். ஏராளமான தமிழ்ப்படங்களில் நடித்தார். சிவாஜியுடன் "முதல் தேதி'', "நான் சொல்லும் ரகசியம்'' படங்களிலும், எம்.ஜி.ஆருடன் "சக்ரவர்த்தி திருமகள்'', "மன்னாதி மன்னன்'' ஆகிய படங்களிலும் நடித்தார். ஜெமினி கணேசனுடன் இவர் நடித்த "காலம் மாறிப்போச்சு'' சிறந்த படம் என்ற பெயருடன் வசூலையும் குவித்தது. மற்றும் "இல்லறமே நல்லறம்'', "பூலோக ரம்பை'', "வீரக்கனல்'' முதலான படங்களில் ஜெமினிகணேசனுடன் நடித்தார்.

தமிழில், ஜெமினி கணேசனுடன்தான் அதிக படங்களில் நடித்தார். அஞ்சலிதேவி, சொந்தப்படங்களைத் தயாரிப்பதிலும் வெற்றி பெற்றார். ஜெமினி கணேசனுடன் "மணாளனே மங்கையின் பாக்கியம்'' படத்திலும், நாகேஸ்வரராவுடன் "அனார்கலி''யிலும் நடித்தார். இந்தப் படங்களில் இடம் பெற்ற பாடல்கள், மிகவும் பிரபலமாயின. இசை அமைத்தவர் அஞ்சலிதேவியின் கணவர் ஆதிநாராயணராவ். அஞ்சலிதேவி தயாரித்த மற்றொரு படம் "அடுத்த வீட்டுப் பெண்''. இது நகைச்சுவைப் படம். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடி டி.ஆர்.ராமச்சந்திரன். தெலுங்கில், என்.டி.ராமராவுடன் பல படங்களில் அஞ்சலி தேவி நடித்துள்ளார். அவற்றில் முக்கியமானது "லவகுசா''. இப்படம் தமிழிலும் வெளிவந்தது. ராமராவ் ராமராகவும், அஞ்சலிதேவி சீதையாகவும் அற்புதமாக நடித்தனர். பிற்காலத்தில், அண்ணி, அம்மா வேடங்களிலும் அஞ்சலிதேவி நடித்தார்.

ஸ்ரீதர் தயாரித்த உரிமைக்குரல் படத்தில், எம்.ஜி.ஆருக்கு அண்ணியாக நடித்தது குறிப்பிடத்தக்கது. "அன்னை ஓர் ஆலயம்'' படத்தில், ரஜினிகாந்துக்கு அம்மாவாக நடித்தார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 150_க்கும் மேற்பட்ட படங்களில் அஞ்சலிதேவி நடித்துள்ளார்.

இவரது பேரன், பேத்திகள் அமெரிக்காவில் இருப்பதால் அவர்கள் வந்தவுடன்தான் இறுதி சடங்கு நடைபெறும். அதுவரை சென்னை ராமசந்திரா மருத்துவமனையில் பதனீட்டு அறையில் வைக்கப்பட்டுள்ளது.
#########################
(இவர் மூச்சு திணறல் காரணமாக கடந்த ஒரு வாரமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அவர் மாரடைப்பால் காலமானார்.

1927-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி ஆந்திராவில் அஞ்சனா குமாரியாக பிறந்தவர் நடிகை அஞ்சலி தேவி. சின்ன வயதில் இருந்தே நாடகங்களில் நடித்து வந்தவர் .1936ம் ஆண்டு ராஜா ஹரிஸ்சந்திரா என்ற மலையாள படத்தில் நடித்தார். பின்னர் டைரக்டர் சி.புல்லையா அஞ்சலியின் நடிப்பு திறமையை பார்த்து கொலாபாமா என்ற படத்தில் மோகினியாக நடிக்க வைத்தார். மேலும் அவரது பெயரை அஞ்சலி தேவி என்று மாற்றினார். தொடர்ந்து தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்தவர் லவா குசா படம் மூலம் மேலும் பிரபலமானார். இப்படம் தமிழிலும் வெளியானது. தெலுங்கில் மட்டும் சுமார் 350 படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில், மணாளனே மங்கையின் பாக்யம், கணவனே கண்கண்ட தெய்வம், லவகுசா, அடுத்த வீட்டுப் பெண், நிரபராதி, சர்வாதிகாரி, அன்னை ஓர் ஆலயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், ரஜினி ஆகியோரது படங்களில் நடித்துள்ளார். இதேப்போல் தெலுங்கு ஜாம்பவான் நடிகர்கள் என்.டி.ஆர்., அக்னி நாகேஸ்வரராவ் ஆகியோருடனும் நடித்துள்ளார். நடிகையாக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். அஞ்சலி பிக்சர்ஸ் எனும் பெயரில் சொந்தமாக அனார்கலி, பக்த துக்காராம், சந்திப்ரியா, உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார்.

அஞ்சலி தேவி 1940-ம் ஆண்டு ஆதிநாராயண ராவ் என்ற இசையமைப்பாளரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் அஞ்சலி பிக்சர்ஸ் நிறுவனத்தை நிர்வகித்து, சில படங்களை தயாரித்து வருகின்றனர்.

சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வந்த அஞ்சலி தேவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று(ஜனவரி 13ம் தேதி) மதியம் 2 மணியளவில் மாரடைப்பால் காலமானார். பொங்கல் பண்டிகை என்பதால் அஞ்சலி தேவியின் உடல் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை எல்லாம் முடிந்து ஜனவரி 16ம் தேதி, வியாழக்கிழமை அவரது உடல் அடக்கம் செய்யப்பட இருக்கிறது.)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக