தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 5 மே, 2014

ஆங்கிலேய அதிகாரி கொலை வழக்கில் பகத்சிங் பெயர் இடம்பெறவில்லை தூக்கில் போடப்பட்ட 83 ஆண்டுகள் கழித்து புதிய திருப்பம்:-


மரண தண்டனை

சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங், கடந்த 1931–ம் ஆண்டு லாகூரில் தூக்கில் போடப்பட்டார். அப்போது அவருக்கு வயது 23 தான். அவருடன், சுக்தேவ், ராஜகுரு ஆகிய சுதந்திர போராட்ட வீரர்களும் தூக்கிலிடப்பட்டனர்.

1928–ம் ஆண்டில் லாகூரில் வெள்ளைக்கார சிறப்பு போலீஸ் சூப்பிரண்டு சவுண்டர்சை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.

முதல் தகவல் அறிக்கை

அவர்கள் தூக்கிலிடப்பட்டு 83 ஆண்டுகள் கடந்த நிலையில், பகத்சிங் நினைவு அறக்கட்டளை தலைவர் இம்தியாஸ் ரஷித் குரேஷி, இந்த கொலை வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை நகலை அளிக்குமாறு கோரி, லாகூரில் உள்ள கூடுதல் மாவட்ட செசன்சு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

அதை ஏற்று கோர்ட்டு உத்தரவிட்டதன்பேரில், லாகூரில் உள்ள அனார்கலி போலீஸ் நிலைய ஆவணங்களில் லாகூர் போலீசார் தேடிப்பார்த்தனர். ஒருவழியாக, அந்த முதல் தகவல் அறிக்கையை கண்டுபிடித்தனர்.

பெயர் இல்லை

அனார்கலி போலீஸ் நிலைய அதிகாரி ஒருவர் நேரில் பார்த்து புகார் அளித்ததன்பேரில், 1928–ம் ஆண்டு டிசம்பர் 17–ந்தேதி மாலை 4.30 மணிக்கு அந்த முதல் தகவல் அறிக்கை உருது மொழியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், ‘துப்பாக்கி ஏந்திய அடையாளம் தெரியாத 2 பேருக்கு எதிராக’ என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. கொலையாளியின் அடையாளமும் கூறப்பட்டுள்ளது. ஆனால், பகத்சிங் உள்பட 3 பேரில் யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை.

இதனால், இக்கொலை வழக்கில் பகத்சிங் தூக்கிலிடப்பட்டு 83 ஆண்டுகளுக்கு பிறகு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கோர்ட்டில் ஒப்படைப்பு

முதல் தகவல் அறிக்கை நகல், மூடி சீல் வைக்கப்பட்டு, லாகூர் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. பகத்சிங் அறக்கட்டளை தலைவர் இம்தியாஸ் ரஷித் குரேஷிக்கும் அந்த நகல் அளிக்கப்பட்டது. இவ்வழக்கில், 450 சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய வாய்ப்பு அளிக்காமல், பகத்சிங்குக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

பகத்சிங் நிரபராதி என நிரூபிப்பதற்காக, இவ்வழக்கை மறுவிசாரணைக்கு உட்படுத்தக்கோரி, லாகூர் ஐகோர்ட்டில் அவர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதை அதிக நீதிபதிகளைக் கொண்ட பெஞ்ச் விசாரணைக்கு அனுப்ப ஐகோர்ட்டு முடிவு செய்துள்ளது.
 —

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக