தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 5 மே, 2014

மனிதப் பிறவியை வீணாக்காதீர் -2


மனிதப் பிறவி என்பது நமக்கு இப்போது புதிதாக வந்ததில்லை.தூர்வாச மஹரிஷி சக்தி மஹிம்ன ஸ்தோத்ரத்தில்
“எத்தனையோ ஆயிரக்கணக்கான யோனிகளில் ஜன்மம் எடுத்ததனால், எவ்வளவோ தாயார்கள் ஆகிவிட்டனர். எவ்வளவோ தந்தையர் ஆகிவிட்டனர். நமக்கு முன்னால் எவ்வளவோ பேர் போய்க்கொண்டிருக்கின்றனர். இவற்றிற்கெல்லாம் ஓர் எண்ணிக்கையே இல்லை" என்று கூறியுள்ளார். ஜன்மங்கள் ஏன் வந்தன என்று ஒரு கேள்வி கேட்கலாம். மனிதனுக்கு ஜன்மங்கள் வர வேண்டியது நியாயமா இல்லையா? மனிதன் என்றால், அவனுடைய உண்மையான ஸ்வரூபம் ஆத்மா என்றே எடுத்துக் கொள்ளுங்கள். ஆத்மா எப்படிப்பட்டவன்? உபநிஷத்துக்களில் ஆத்மாவைப்பற்றி
ஸத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம
என்று விவரிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆத்மா ஸத்ய ஸ்வரூபி, ஞான ஸ்வரூபி, அனந்த (அளவற்றது) ஸ்வரூபி; அவன் அளவற்ற சுக ஸ்வரூபி.
அந்தப் பரமானந்தத்தின் ஒரு துளியை அனுபவித்துவிட்டு இந்திரன் முதலானவர்கள் திருப்தியடைந்து விட்டனர். இதிலிருந்து அந்த ஆனந்த ஸாகரம் எப்பேர்ப்பட்டது என்று நாம் உணரலாம். இந்த ஆனந்த ஸாகரமே சைதன்யம். இந்த சைதன்யமே ஜீவரூபம் பெற்றுக்கொண்டு எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறது. இது சம்பந்தமாக ஓர் உதாரணத்தைப்பார்ப்போம்.
ஆகாசம் (வெளி) என்பது ஒரே விதமாகத்தான் இருக்கும். ஆனால் ஒரு குடத்தை நாம் வைத்தால், "குடத்தில் உள்ள ஆகாசம்" (கடாகாசம்) என்று பெயர் வந்துவிடுகிறது. அதே போல் ஒரு வீடு கட்டினால் "க்ருஹாகாசம்" (வீட்டிலுள்ள ஆகாசம்) என்று பெயர் வந்து விடுகிறது.
அதே போல் சைதன்யம், ஒன்றாக இருந்தாலும், அநாதியாயிருக்கும் ஸம்ஸார சக்கரத்தில் (பிறப்பு, இறப்பு எனும் சக்கரத்தில்) பிரவேசித்தது. அதனால் பந்தத்தில் மாட்டிக்கொண்டது போலாயிற்று. ஆகாசம் உண்மையில் ஒன்றானாலும், "கடாகாசம்" என்று நாம் சொல்வதைப் போல்தான் இயங்கும். ஆகவே ஜீவர்கள் அநாதியாக இருக்கப்பட்ட இந்த ஸம்ஸார சக்கரத்தில் உழன்று கொண்டிருக்கிறார்கள்.
ஸம்ஸார சக்கரம் ஏன் அநாதி (தொடக்கமற்றது) என்று சொல்லப்படுகிறது என்று சிலருக்கு கேள்வி எழும். ஸம்ஸாரத்திற்கு மூலம் (ஆரம்பம்) சொல்லவே முடியாது. மரத்தினால் பழம் வருகிறதா அல்லது பழத்தினால் மரமா என்று கேட்டால் "வந்து கொண்டிருக்கிறது" என்று சொல்ல முடியுமே தவிர அதற்கு மூலம் காட்ட முடியாது. அதே போல் கர்மாவினால் (செயல்களால்) ஜன்மா, ஜன்மத்தினால் சுக துக்கங்கள், பிறகு ருசி, பிறகு மீண்டும் கர்மா என்று இது தொடர்ந்து வந்து சக்கரம் போல் சுற்றிக்கொண்டிருக்கிறது. இச்சக்கரத்தில் விழுந்தவனுக்கு இதிலிருந்து விடுதலை ஏற்பட வேண்டுமென்று ஆசை வருவது ஸகஜம். எப்படி விடுதலையை சம்பாதிப்பது? எப்படிப்போய் அந்த சைதன்யத்தில் சேர்வது?
ஸமுத்திரத்தில் உள்ள நீரானது ஆவியாக மாறிப்பின் மேகமாகிறது. பிறகு மழையாகப் பொழிந்து நதியாக ஓடிக் கடலில் கலக்கிறது. நாம் ஸமுத்ர ஸ்தானீயமாய் (சமுத்திரம் போன்று இருக்கப்பட்ட) ப்ரஹ்மத்திலிருந்து பிரிந்தவர்கள். ஆனாலும் ப்ரஹ்மம்தான். வேறு வடிவம் பெற்ற பிறகு ப்ரஹ்மம் என்று பெயர் கிடையாது. ஸமுத்திரத்திலிருக்கும் தண்ணீருக்கு, அது ஸமுத்திரத்திலிருக்கும் வரை தண்ணீர் என்று பெயர். மேகமாய் விட்டால் அதற்கு ஸமுத்திரம் என்று பெயர் சொல்வதில்லை. அதேபோல் நதியாக இருக்கும்போதும் அதற்கு ஸமுத்திரம் என்று பெயர் கிடையாது. ஆனால் நதி ஸமுத்திரத்தைச் சென்றடைந்தவுடன்
ஸமுத்ர இத்யேவம் பரோச்சயதே நாமரூபே விஹாய
என்று ஆகிவிடுகிறது. நாமும் ப்ரஹ்மத்தில் சேரும்வரை சுற்றிக்கொண்டேதானிருக்கிறோம். நம்முடைய இலட்சியம் ப்ரஹ்மத்தை அடைவதேயாகும். அப்போதுதான் அமைதி கிட்டும். ஆனால் பலர், அதை விட்டுவிட்டு, "நாம் பரமசிவனுடைய லோகத்திற்கோ, விஷ்ணுவின் லோகத்திற்கோ, ப்ரஹ்மாவின் லோகத்திற்கோ போய் இருந்தால் அது மோக்ஷம்" என்பர். ஆனால் எப்போதும்
த்விதீயாத்வை பயம் பவதி
என்று கூறப்பட்டிருப்பதுபோல் இரண்டாவது பொருள் ஒன்று உண்டு என்றாலே அதனால் பயம்தான். உலகத்தில், எப்பேர்ப்பட்ட பலசாலியாயிருந்தாலும் அவனுக்கு இன்னொரு பலசாலியைக்கண்டால் பயம் ஏற்படுவதை நாம் பார்க்கிறோம். தன்னைப்போல் இன்னொரு பொருள் இல்லை என்ற தீர்மானம் எப்போது ஏற்படுகிறதோ அப்போதுதான் அவனுக்குப் பயம் ஏற்பட வழி இல்லை. தீர்மானம் ஏற்பட்டாலும் இரண்டாவது பொருள் இருந்தால், அது பிரயோஜனமில்லை. பந்தம் என்பது அஞ்ஞானத்தினால் (அறியாமையினால்) வந்தது. ஆகவே இந்த அஞ்ஞானத்தைப் போக்கடித்தால் பிறகு பந்தம் என்பதே இல்லை.
த்விதீயாத்வை பயம் பவதி
என்பதனால் வைகுண்டம் போன்ற லோகங்களில் சேர்ந்தாலும் கூட இரண்டாவது பொருளைப் பற்றிய அறிவு இருப்பதால் அப்போதும் பயம் இருக்கவே இருக்கும். ஜயவிஜயர்கள் வைகுண்ட லோகத்திலேயே இருந்தாலும் அவர்களுக்கும் பயம் வந்தது. மறுபடியும் அவர்கள் ஜன்மம் பெற்றுக்கொள்ளவேண்டியிருந்தது. ஆனால்
அத்ர ப்ரஹ்ம ஸமச்னுதே
என்பது போல் யார் இந்தப் பிறவியிலேயே ப்ரஹ்ம ஸாக்ஷாத்காரத்தைப் பெற்றுக் கொண்டாரோ அவருக்கு மறுபிறவி வந்தது என்று எந்த ஓர் உபநிஷத்தோ, புராணமோ, இதிகாஸமோ சொல்வதாக எங்குமே கிடையாது. யாருக்கு ப்ரஹ்ம ஸாக்ஷாத்காரம் ஏற்பட்டதோ அவருக்கு
ந தஸ்ய ப்ராணா உத்க்ராமந்தி
(அவருடைய ப்ராணன் உத்க்ரமணம் ஆவது (வெளிக்கிளம்புவது) கிடையாது.)
என்று சொல்லப்பட்டிருக்கிறது. மற்றவர்களுக்கு இது போல் இல்லை. மேலும் ஞானி விஷயத்தில்
அத்ரைவ ஸமவனீயந்தே
என்றும் சொல்லப்பட்டிருப்பதால் எந்தெந்தப் பூதங்களிலிருந்து இவ்வுடல் வந்ததோ, அந்தந்த பூதங்களிலேயே இது போய்ச் சேர்ந்து விடும் என்றும் தெரிகிறது. அதனால் ப்ரஹ்ம ஸாக்ஷாத்காரம் பெற்றுக்கொண்டால்தான் நமக்கு, பிறப்பு இறப்பென்னும் சக்கரத்திலிருந்து விடுதலை கிடைக்கும். இதை விடுத்து வேறு எந்தவிதமான உபாஸனை செய்தாலும், எந்தவித விசேஷமான கர்மாவைச் செய்தாலும் அதனால் கிடைக்கும் பலன் அழிபட்டுவிடும்.

- தொடரும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக