பழைய வீடுகள் முதல் புதிதாக கட்டிய வீடுகள் வரை அழையா விருந்தாளியாக சில சமயம் குடியேறிவிடுபவை விரிசல்கள். வீட்டின் சுவர்கள், மூலைமுடுக்கு என அனைத்து பகுதிகளிலும் விரிசல்களால் எளிதில் நுழைந்திட முடியும். சுவர்களில் சிறிய கோடாக உருவாகும் விரிசல்கள் பிற்காலத்தில் கட்டிடத்திற்கு பெரிய கேடாக மாறக்கூடியவை. விரிசல்கள் சுவர்களில் ஏற்படுவதால் வீட்டின் பாதுகாப்பு தன்மை குறைகிறது.
அடுக்கு மாடி குடியிருப்புகளில் ஏற்படும் விரிசல்களால் கட்டிடத்தின் தாங்கும் தன்மை குறைகிறது. அதனால் பூகம்பம் போன்ற இயற்கை சீற்றத்தினால் கட்டிடங்கள் சேதமடைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. மழை காலங் களில் விரிசல் வழியாக தண்ணீர் எளிதில் உட்புகுந்துவிடும். மேலும் விரிசல் வழியாக ‘‘கதிரியக்க தனிம வாயுக்கள்’’ வீட்டில் நுழைய நிறைய வாய்ப்புகள் உள்ளன. எனவே நாம் கட்டும் வீட்டில் பிற்காலத்தில் விரிசல் ஏற்படாதவாறு பார்த்து வடிவமைத்தல் அவசியம்.
கட்டிடங்களில் விரிசல் ஏற்படுவதற்கான காரணங்களையும், அதை தடுக்கும் முறைகளையும் பற்றி பார்ப்போம்.
தண்ணீர் தான் விரிசல் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணியாக அமைகிறது. அதனால் ஈரபதத்தை அதிகமாக தக்கவைக்கும் பகுதியில் வீடு கட்டுவதை தவிர்ப்பதினால் விரிசல்களை தவிர்க்கலாம்.
குளம், குட்டை, குழாய்கள் பதிக்கப்பட்ட பகுதிகளின் அருகில் வீடுகளை அமைப்பதினால் எளிதில் விரிசல் ஏற்படும். ஏனெனில் இவை அனைத்துமே தண்ணீரை கசிய வைக்க கூடியவை. இதனால் வீட்டின் அஸ்திவாரத்தையும், அதனுள் நிரப்பப்பட்ட மணல், ரப்பீஸ் (உடைந்த செங்கல், கான்கிரீட்) போன்ற பொருட்களை எளிதில் ஈரப்பதமாக்கி அஸ்திவாரத்தை விரிவடைய செய்கின்றது. இவ்வாறு விரிவடையும் அஸ்திவார பகுதியை அதன் மீது கட்டப்பட்ட கான்கிரீட் மேல் தளத்தின் கனம் மேலிருந்து கீழாக அழுத்துவதினால் சுவரில் வளைவுகள் மற்றும் விரிசல்கள் ஏற்படுகின்றன. பெரும்பாலும் இவை அஸ்திவாரங்களில் விரிசல்களையே உருவாக்குகின்றன.
அடர்ந்த மரங்களின் நடுவிலும், பெரிய மரத்தின் அருகிலும் வீடு கட்டுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பெரிய மரங்களின் வேர்கள் வீட்டின் அடிப்பகுதியில் படர்ந்து வளர்வதினால் அஸ்திவாரத்திலும், சுவர்களிலும் விரிசல்கள் ஏற்படுகின்றன. இவ்வகையில் ஏற்படும் விரிசல்கள் பெரிதாக கூடியவை. வேர்களின் வளர்ச்சிக்கு ஏற்ப விரிசலின் அளவும் பெரியதாகும்.
தரம் குறைந்த கட்டுமான பொருட்களினாலும் சுவரில் விரிசல்கள் உண்டாக்கும். கட்டுமான கலவையில் மணல், சிமெண்டை சரியான விகிதத்தில் சேர்க்காதது, குறைந்த திறன் கொண்ட கம்பிகள், தகுந்த நேரத்தில் கட்டிடத்திற்கு தண்ணீர் ஊற்றி வலுபடுத்த தவறியது, கட்டிடத்திற்கு தாமதமாக பூச்சுவேலை செய்வது போன்ற வற்றால் கட்டிடத்தின் வலிமை குறைவதோடு விரைவில் விரிசலும் ஏற்படும்.
தட்பவெட்ப சூழ்நிலைகள் சில நேரங்களில் சுவர்களில் விரிசலை ஏற்படுத்துகின்றன. பருவமழை, புயல் காலங்களில் தொடர்ந்து பெய்யும் மழை சுவர்களை நனைப்பதினால் ஈரபதம் அதிலேயே தங்கி விடுகிறது. அதனாலும் சுவர்கள் விரிவடைந்து விரிசல் ஏற்படுகின்றன.
கோடை காலங்களில் அதிக வெப்பத்தினால் சுவர் களில் உள்ள ஈரபதம் ஆவியாக்கப்படுகிறது. இதனால் சுவர்கள் சுருங்க தொடங்கும். சுவர் விரிவடைவதையும், சுருங்குவதையும் நம்மால் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. சுவர்களில் உள்ள கட்டுமான பொருட்களின் சுருக்கத்தால் விரிசல்கள் ஏற்படும். இவ்வாறு சுருக்கத்தினால் ஏற்படும் விரிசல்கள் வீட்டை பெரிய அளவில் பாதிப்பதில்லை.
சமையலறையில் புகைகளை வெளியேற்றும் சிம்மினியை பொருத்த பக்கவாட்டு சுவரை உடைப்பதால் விரிசல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதனால் வீட்டை கட்டும்போதே சமையலறையில் துவாரம் அமைப்பதினால் விரிசல் ஏற்படுவதை தவிர்க்கலாம். மேலும் சிம்மினிக்காக அமைத்த துவாரத்தில், அதன் முழு கனமும் சுவற்றில் அழுத்தம் கொடுக்காதவாறு சிம்மினியை பொருத்துவதினால் விரிசல்கள் விழுகாமல் தவிர்க்கலாம்.
விரிசலை சரி செய்யும் தொழில்நுட்ப முறைகள்:–
வீடுகளில் ஏற்பட்ட விரிசல்களை அஸ்திவார தூண் பதிக்கும் முறை (foundation pinning) மூலம் சரி செய்யலாம். இந்த முறையில் கட்டிடத்தின் அஸ்திவார அடி பகுதியிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பள்ளம் தோண்டப்பட்டு இரும்பு தூண்கள் கட்டிடத்தை தாங்குமாறு முட்டு கொடுக்கப்படுகின்றன. இதனால் விரிசல்கள் இறுகுவதுடன் வீடும் சமநிலை படுத்தப்படுகின்றன. குறிப்பிட்ட காலங்களில் தூண்களை மாற்றுவது தாங்கும் திறனை அதிகரிக்கும். அஸ்திவார தூண் பதிக்கும் முறையால் விரிசல் இணைய சிறிது காலமாகும்.
விரிசல் நிரப்பு கம்பிகள் (crack injection method) முறையையும் பயன்படுத்தலாம். இந்த முறையில் சுவற்றில் ஏற்பட்ட விரிசல் பகுதி முழுவதிலும் விரிசலின் தடிமனுக்கேற்ற இரும்பு கம்பிகள் நுழைக்கப்படுகின்றன. பின்னர் விரிசலின் இடைப்பட்ட பகுதியில் இருக்கும் இடைவெளியில் பிரத்தியேக கலவைகளை கொண்டு நிபுணர்களால் அடைக்கப்படுகிறது. இந்த முறையினால் விரிசல்கள் இரண்டு நாட்களில் சரி செய்யப்படுகிறது.
அஸ்திவாரத்துடன் இணைந்த தரையில் விரிசல்கள் ஏற்படுவதற்கு மணல் சுருங்குதல், மணல் இறங்குதல், வெற்றிடங்கள் போன்றவை காரணமாக இருக்கின்றன. வெப்ப தாக்கத்தினால் அஸ்திவார மணல் சுருங்கி வெற்றிட பள்ளங்களாக மாறிய பகுதிகளை நிரப்பு கலவை முறையை கொண்டு நிரப்பிடலாம். இந்த முறைப்படி விரிசல் ஏற்பட்ட தரையில் சிறு துளையிட்டு அதன் வழியாக பிரத்தியேக கலவைகளை (special concrete filling) நிரப்பி வெற்றிடங்கள் சமதளங்களாக்கப்படுகின்றன. இவ்வாறு வெற்றிடங்களை நிரப்புவதினால் தரையில் ஏற்படும் விரிசல்கள் தவிர்க்கப்படுகின்றன. இந்த தொழில்நுட்ப முறைகள் மூலம் அனுபவம் மிகுந்த கட்டுமான பொறியாளர்களை கொண்டு விரிசல்களை சரிசெய்வது பலன் கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக