தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 21 செப்டம்பர், 2013

மகாளய பட்சம் !


இப்புண்ணிய பாரத கண்டத்தில் பிறந்து வேத ஆகம விதிப்படி நடக்கின்ற நாம், நமது பிதுர்களுக்குச் செய்யக்கூடிய சிரார்த்த காரியங்களை முறைப்படி செய்ய வேண்டியது முக்கியமான கடமை ஆகும். மகாளய பட்சத்தில் செய்வது சிறப்பானது. மகாளய பட்சம் என்பது, புரட்டாசி மாதப் பௌர்ணமிக்கு மறுநாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரை உள்ள காலமாகும்.

இதில் வரும் பரணிக்கு மகா பரணி என்று பெயர். திரயோதசி திதிக்கு கஜசாயை என்றும்; அஷ்டமி திதிக்கு மத்தியாஷ்டமி என்றும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மூன்று புண்ணிய காலங்களில் செய்யும் சிரார்த்த காரியங்கள் கயையில் செய்யும் சிரார்த்தத்திற்கு இணையானது. மேலும் அமாவாசை துதீய பாதம், பரணி துவாதசி, அஷ்டமி ஆகிய நாட்களில் திதி, நட்சத்திரம், வாரம் ஆகியவற்றால் ஏற்பட்ட தோஷங் களைக் கவனிக்கத் தேவையில்லை.

காருணிகர்கள் எனப்படுகின்ற பெற்றோர் அல்லாத சிறிய தகப்பனார், பெரிய தகப்பனார், தமையனார், தம்பி, அத்தை, அம்மான், பெரிய தாயார், சிறிய தாயாரின் சகோதரர்கள், அவர்களின் பிள்ளைகள், மனைவி, மாமனார், அக்காள் கணவன், மருமகள், மைத்துனர், குரு, எஜமான், நண்பர் மற்றும் நமக்குப் பிரியமான சகல ஜீவராசிகளுக்கும் மகாளய பட்சத்தில் சிரார்த்தம் செய்ய வேண்டும். மேலும் முறையாக குருவிடம் தீட்சை பெறாமல் சுயமாக சந்நியாசம் பெற்றுக் கொண்டு காலமானவர்களுக்கு துவாதசியில்தான் சிரார்த்தம் செய்ய வேண்டும்; மற்ற திதிகள் ஏற்றதல்ல.

காலம் வராமல் காலனைச் சென்றடைந்த வர்களுக்கு (துர்மரணம் அடைந்தவர்களுக்கு) சதுர்த்தசி திதியில்தான் சிரார்த்தம் செய்ய வேண்டும்; மற்ற திதிகள் ஏற்றதல்ல.

புரட்டாசி பௌர்ணமிக்குப்பின் பிரதமையிலிருந்து அமாவாசை வரை உள்ள 15 நாட்களும் புண்ணிய காலம்தான். ஆகவே காருண்ய பித்ருக்களுக்கும், வாரிசு அல்லாதவர்களும், நமது தாய்- தந்தைக்கும் மேல் குறிப்பிட்டபடி மகாபரணி, கஜசாயை, மத்தியாஷ் டமி, துதீய பாதம் ஆகிய காலங்களில் தர்ப்பணம் செய்தால் முன்சொன்னபடி கயையில் செய்த புண்ணியம் கிடைக்கும்.

மேலும் இந்த சிரார்த்த காரியம் செய்யும் பொழுது விஸ்வேஸ்வரனையும் விஷ்ணு வையும் காலபைரவரையும் ஆராதனை செய்தல் மிகவும் உத்தமம். நாம் நமது முன்னோர்களான மூன்று தலைமுறைக்கும் சேர்த்து சிரார்த்தம் செய்யும்பொழுது, பித்ரு தேவதைகளின் பரிபூரண ஆசிகளும் சகல விதமான சௌபாக்கியங்களும் கிட்டுவதோடு, துன்பம் அணுகாமல் இன்பமாக வாழ அருள்வார்கள். மேலும் காலபைரவரின் அஷ்டோத் திரம் கூறுவதால் சகல நன்மைகளும் அடைந்து நல்வாழ்வு கிட்டும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

தகுதி வாய்ந்த பிராமணர்களைக் கொண்டு சிரார்த்தத்தை சிரத்தையுடன் செவ்வனே செய்தல் வேண்டும்.

வஸ்திரம், அன்னம், உத்திராட்சம், துளசி மாலை, பஞ்ச பாத்திரம், உத்திரணி, கிண்டி, பசு, பூமி, குடை, பாதரட்சை போன்றவற்றை தானம் செய்தால் நன்மை உண்டாகும்.

இவற்றைச் செய்ய இயலாதவர்கள் வில்வத்தை கையில் ஏந்தி தியானம் செய்து ஆற்றில் விடுவதும் உத்தமாகும்.

உத்திரவாகினியாக ஓடும் நதிகளில் சிரார்த்தம் செய்வது சிறப்பானது. மேற்கே துவங்கி கிழக்கு முகமாக வந்து கடலில் சங்கம மாகும் நதிகள், இடையில் சில இடங்களில் வடக்கு முகமாகத் திரும்பி ஓடும். அதுவே உத்திரவாகினியாகும். கும்பகோணத்திலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மணஞ்சேரி என்கிற கிராமத் தையொட்டி, காவிரி நதி உத்திரவாகினியாக ஓடுகிறது. காஞ்சி மகா பெரியவர் தனது மடத்து பட்டத்து யானைக்கு இங்கேதான் சிரார்த்தம் செய்தார். ஆகவே இந்த ஸ்தலம் கஜேந்திர மோட்ச ஸ்தலம் எனப்படுகிறது. இங்கே தர்ப்பணம் செய்வதும் சிறப்பானது.

மகாளய பட்சத்தில் வரும் அமாவாசை தினம் சிரார்த்த காரியத்திற்கு மிகவும் உகந்த நாள்

மகாளய பட்சம்-விளக்கம்:

மகாளயம் என்றால் கூட்டமாக வருதல். மறைந்த நம் முன்னோர் மொத்தமாக கூடும் நேரமே மகாளய பட்சம். பட்சம் என்றால் 15 நாட்கள். மறைந்த முன்னோர் 15நாட்கள் (சில சமயங்களில் 16 ஆக மாறுபடும்) நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம். இது புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசியில் வரும் அந்த அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும். தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட உயர்ந்தது இது.

மகாளய பட்ச காலத்தில் என்ன செய்வது?

மற்ற மாதங்களில் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில், சிராத்தம் முதலியன செய்வோம். ஆனால், மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும். ஒட்டுமொத்த முன்னோரையும் அப்போது நினைவு கூர வேண்டும். தீர்த்தக்கரைகளுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்து வர வேண்டும். அந்தணர்களுக்கு ஆடைகள், ஏழைகளுக்கு உணவு, படிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என தானமளிக்க வேண்டும். நமது தேசத்தின் பல நூற்றாண்டுகளுக்கும் முந்தைய வரலாறைக் கூட தெரிந்து வைத்திருக்கும் பலர், தங்கள் மூதாதையரில் மூன்று தலைமுறைகளுக்கு முன்புள்ளவர்கள் பெயரை நினைவில் வைத்திருப்பதில்லை. அந்த பயிற்சியை இந்த காலத்தில் நமது குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். தற்போது நினைவில் உள்ள தலைமுறையினர் பெயரை டைரியில் குறிக்கச் சொல்ல வேண்டும். அப்படியானால் தான் எதிர்காலத்தில் தர்ப்பணம், சிராத்தம் குறித்த அறிவு நம்மிடையே நீடித்து நிலைத்திருக்கும்.

தலைமுறைக்கே லாபம்

மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள் தரப்பட்டுள்ளன.

முதல்நாள் பிரதமை பணம் சேரும்
2ம் நாள் துவிதியை ஒழுக்கமான குழந்தைகள் பிறத்தல்
3ம் நாள் திரிதியை நினைத்தது நிறைவேறுதல்
4ம் நாள் சதுர்த்தி பகைவர்களிடமிருந்து தப்பித்தல்
5ம் நாள் பஞ்சமி வீடு, நிலம் முதலான சொத்து வாங்குதல்
6ம் நாள் சஷ்டி புகழ் கிடைத்தல்
7ம்நாள் சப்தமி சிறந்த பதவிகளை அடைதல்
8ம் நாள் அஷ்டமி சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைத்தல்
9ம்நாள் நவமி சிறந்த வாழ்க்கைத்துணை, குடும்பத்திற்கேற்ற, மருமகள் அமைதல், பேத்தி, புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறத்தல்.
10ம் நாள் தசமி நீண்டநாள் ஆசை நிறைவேறுதல்
11ம்நாள் ஏகாதசி படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி
12ம் நாள் துவாதசி தங்கநகை சேர்தல்
13ம்நாள் திரயோதசி பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில்
14ம்நாள் சதுர்த்தசி பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை.
15ம் நாள் மகாளய முன் சொன்ன அத்தனை பலன்களும் அமாவாசை நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குதல்.

எனவே, மகாளய பட்சம் என்னும் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இருந்தால் லாபம் நமக்கு மட்டுமல்ல! நம் தலைமுறைக்கும் சேர்த்து தான்


அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம் மற்றும் இந்த நாளும் இனிய நாளாக வாழ்த்துக்கள் - சாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக