தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 7 செப்டம்பர், 2013

அத்தனை மக்களுக்கு இல்லாத அந்த சமூக அக்கறை இந்த பெரியவருக்கு !!


வெளியூர் நண்பர் ஒருவர் இன்று கோவை அண்ணப்பூர்னா ஹோட்டலில் தங்கியிருந்தார். இன்று இரவு சென்னை திரும்புகிறார் என்பதால் ஒரு ஐந்து மணி சுமாருக்கு பக்கத்திலேயே எங்காவது பேசிக் கொண்டிருப்போம் என்று காந்தி பூங்கா சென்று காலாற நடந்தோம்.

ஆங்காங்கே, காதல் ஜோடிகள், நடைப்பயிற்சி செய்பவர்கள், பொழுது போக்குபவர்கள் என்று பூங்கா உயிரோட்டமாக இருந்தது. உட்கார இடமில்லாமல் பலர் இடத்தை பிடித்திருந்தனர். நெருக்கமாக இருக்கும் மரங்களின் மேலே கணக்கற்ற வௌவால்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. உட்காருவதற்காக போடப்பட்டிருந்த‌ க்ரானைட் மேஜைகளில் வௌவால்கள் மற்றும் காக்கைக‌ளின் எச்சங்கள் நிறைந்திருந்தன.

நாங்கள் பூங்காவை பெரிதாய் ஒரு வட்டம் அடித்து விட்டு திரும்புகையில், ஒரு பெரியவர் ஒரு க்ரானைட் மேஜையை துடைத்து கொண்டிருந்தார். பக்கத்தில் ஒரு தண்ணீர் பாட்டிலும் இருந்தது. ஒரு தகடை போல் ஒன்றை வைத்திருந்தார். நான் இவர் என்ன செய்கிறார் ? எனக் கேட்க, நண்பர் "உட்காருவதற்காக துடைக்கிறார் போலும்" என்றார். எனக்கு அப்படி தோன்றவில்லை. அவரை பார்த்தால் பூங்காவில் வேலை செய்பவர் போன்றும் இல்லை. என் கரபேசியில் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன். பின்னர் "ஐயா" என்று அழைத்ததும் திரும்பினார். என்ன செய்கிறீர்கள் ?என்று கேட்டதும். "இந்த பூங்காவிற்கு எத்தனையோ பேர் வருகிறார்கள், குடும்பத்தோடு வந்து உட்கார இடம் இல்லாமல் தவிக்கிறார்கள், அதனால், நான் இங்கு வரும்போதெல்லாம் இந்த சிறு வேலையை செய்கிறேன்" என்றார். மீண்டும் பேசிக் கொண்டே அந்த க்ராணைட் மேஜையில் உள்ள எச்சங்களில் கரைகளை சுத்தம் செய்தார்.

பூங்காவிற்கு வந்துள்ள அத்தனை மக்களுக்கு இல்லாத அந்த சமூக அக்கறை இந்த பெரியவருக்கு இருப்பதைக் கண்டு நான் திகைத்து போனேன். முழுவதுமாக துடைத்து முடித்துவிட்டு பெரியவர் நிறைய பேசினார். அவர் பெயர் "கண்ணையன்" என்றும் "கவுர" சமூகத்தை சேர்ந்தவர் என்றும், சொன்னார். அவரோடு பேச பேச அவரின் பல சமூக சேவைகள் தெரிய வந்தன.

வார்த்தைக்கு வார்த்தை "நாராயணா" என்கிறார். சிறு வயதில் அவர் வளையல் வியாபாரியாம். பிரிட்டீஷ் காலத்தில் திருச்சூரில் இருந்து வளையல் வாங்கி வந்து வியாபாரம் செய்வாராம். கோவையில் கவுரவ சமூகத்திற்காக, ஒவ்வொருவரிடமும் நாலணா வீதம் வசூல் செய்து கல்யான மண்டபம் கட்டியுள்ளாராம். வலையல் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் அடைந்து இருந்தாராம். இப்போது கடைசியாக‌ பண்ணிரெண்டு வருடம் தாராபுரம் பக்கத்தில் உள்ள ஒரு காட்டில் தன் குல தெய்வமான "கருப்பராயன் மற்றும் கண்ணிமார்" கோவிலில் தங்கி விட்டாராம். அங்கு இறைவனுக்கு தொண்டு செய்த போது கிடைத்த திருப்தி, தன் வாழ்வில் வேறு எதுவும் தரவில்லை என்றார். இப்போது கோவையில் உள்ள மகன் வீட்டுக்கு வந்து ஐந்து மாதம் ஆகியுள்ளதாம்.

இப்போது எல்லாவற்றையும் இழந்து விட்டிருப்பாரோ ? அவருக்கு ஏதேனும் சிறு பன உதவி செய்யலாமா என்று நான் மனதில் யோசித்து கொண்டிருந்தேன். அவர் தவறாக நினைத்துவிடப் போகிறார் என்று, "உங்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் உள்ளதா" என்று கேட்டேன் ? "எனக்கு ஒரு குறையும் இல்லை" என்றார். வளையல் வியாபாரத்தில் பல சொத்துக்களை வாங்கி போட்டிருப்பதை யதார்தமாய் சொன்னார். வணிக வளாகங்கள் கூட நகரின் மைய பகுதியில் உள்ளதாம். எல்லாவற்றையும் மகனிடம் ஓப்படைத்து விட்டு, நிம்மதியாய் உள்ளாராம்.

எனக்கு ஒரு சத்தியமான துறவியை கண்ட திருப்தி ஏற்பட்டது. இப்படிப்பட்டவர்கள் வாழ்வதால் இன்னும் இந்த பூமி நிலைப்பெற்றிருப்பதை உணர்ந்தேன். இறைவன் இப்படி பட்டவர்களின் உருவத்தில் தான் வந்துக் கொண்டிருக்கின்றான் வாழ்க்கையில் தோல்வி அடைந்த பலர் துறவரம் நோக்கி செல்வதை பார்க்கலாம். அது நிலைக்காது. வாழ்க்கையை முழுமையாய் வென்றுவிட்டு துறவரம் செல்பவனே நிலைத்திருப்பான்.

உங்கள் வயதென்ன என்று கேட்கையில் "பயப்படாதீங்க தொன்னூற்றி ஐந்து" என்று சொல்லி, வெள்ளைக்காரன் காலத்திலிருந்து, பல‌ கதைகளை சொன்னார். உட்காராமல் நின்றுக் கொண்டே பேசினார். விடை பெறுகிறேன் என்றதும், ஒரு சிறுவனைப் போல‌ கையை கூப்பிக் கொண்டு "ஓம் நமோ நாராயனாய நமஹ" என்றார்.

நான் அவரிடம் சொன்னேன் "ஐயா இந்த மந்திரத்தை 18 முறை தன் குருவிடம் சென்று அறிந்துக் கொண்ட இராமானுஜர், சமூக நலமே முக்கியம் என்பதற்காக, தான் நரகத்திற்கு போனாலும் பரவாயில்லை, அனைவரும் சுவர்கம் செல்ல வேண்டும் என்று இதை அனைவருக்கும் உபதேசித்தார். அதே சமூக அக்கறையை உங்களிடமும் காண்கிறேன். நீங்களும் ஒரு இராமானுஜர்தான்" என்றேன். பெரியவர் நெகிழ்வோடு சிரித்துவிட்டு, வேறொரு மேஜையை துடைக்கச் சென்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக