தாயார் பெருமைகள்:
1. அருள்மிகு திரிவிக்கிரமன் திருக்கோயில், சீர்காழி - பெருமாள் தன் மார்பில் மகாலட்சுமியை தாங்கியபடி இருப்பதைப்பார்த்திருப்போம் ஆனால் இத்தல தாயார் லோகநாயகி மார்பில் திரிவிக்கிரமரைத் தாங்கியபடி காட்சி தருகிறாள். மூலவர் திரிவிக்கிரமர் ஒரு கால் ஊன்றி மற்றொரு காலைத் தூக்கி நின்று கொண்டிருப்பதால் சுவாமியின் பாதம் வலித்து விடாமல் இருக்க அவரை இத்தலத்தில் மகாலட்சுமி தாங்குகிறாளாம். எனவே அவள் தன் மார்பில் சுவாமி பதக்கத்தை அணிந்திருக்கிறாள். இந்த தரிசனம் விசேஷமானது. பெண்கள் இவளை வணங்கினால் பிரிந்திருக்கும் கணவனுடன் மீண்டும் சேர்வர் என்பது நம்பிக்கை.
2. அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில், காஞ்சீபுரம் - வேதாந்த தேசிகர் இங்கு சுவாமியைத் தரிசிக்க வந்தபோது, ஒரு ஏழை அவரிடம் பொருள் வேண்டினான். அவர் அந்த ஏழைக்காக பொருள் கேட்டு, பெருந்தேவி தாயாரை வேண்டி பாடல் பாடினார். அவருக்கு இரங்கிய தாயார், தங்கமழையை பெய்வித்தாள்.
3. அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில், திருப்புட்குழி, காஞ்சிபுரம் - இங்குள்ள தாயார் வறுத்தபயிறை முளைக்க வைக்கும் மரகதவல்லித்தாயார் என அழைக்கப்படுகிறார். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்குள்ள ஜடாயு தீர்த்தத்தில் நீராடி மடப்பள்ளியில் வறுத்து, நனைத்த பயிறை பெண்கள் தங்களது மடியில் கட்டிக்கொண்டு இரவில் உறங்க வேண்டும். விடிந்தவுடன் அந்த பயிறு முளைத்திருந்தால் குழந்தை பாக்கியம் கட்டாயம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பலரும் அன்னையின் அருளால் மழலை பாக்கியம் பெற்றுள்ளனர்.
4. அருள்மிகு நறையூர் நம்பி திருக்கோயில், நாச்சியார்கோவில் - இங்கு வஞ்சுளவல்லி தாயாரை மையப்படுத்தியே கருவறையும் அமைக்கப்பட்டிருக்கிறது. பெருமாளை விட சற்று முன்புறம் இவள் நின்ற கோலத்தில் இருக்கிறாள். நின்ற கோலத்தில் இருக்கும் தாயார் தரிசனம் விசேஷமானது. வீதியுலா செல்லும் போதும் இவளே முன்பு செல்ல அதற்கு பின்பே சுவாமி எழுந்தருளுகிறார். இவளுக்கே முதலில் அபிஷேகம் செய்யப்படுகிறது. இங்குள்ள உற்சவ தாயார் கையில் கிளியை ஏந்தி, இடுப்பில் சாவிக்கொத்து வைத்தபடி அருள்பாலிக்கிறாள். இவள்தான் அனைத்தையும் நிர்வாகம் செய்கிறாள் என்பதை உணர்த்துவதற்காக இவ்வாறு வைக்கப்பட்டிருக்கிறது.
5. அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள், திருக்கண்ண மங்கை - அபிஷேகவல்லி இத்தலத்தில் நடந்த திருமால்- திருமகள் திருமணத்தை காண தேவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து குவிந்ததோடு, எப்போதும் இந்த திருக்கோலத்தை கண்டு கொண்டே இருக்க வேண்டும் என நினைத்தார்கள். எனவே தேனீக்கள் வடிவெடுத்து கூடுகட்டி அதில் இருந்து கொண்டு தினமும் பெருமாளின் தரிசனம் கண்டு மகிழ்கிறார்கள்.இன்றும் கூட தாயார் சன்னதியின் வடபுறத்தில் ஒரு தேன் கூடு உள்ளது. இந்த தேனீக்கள் பக்தர்களை ஒன்றும் செய்வதில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக