தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 25 ஜூலை, 2013

கண்ணகியைக் காட்டிலும் கற்பில் சிறந்தவள் மாதவி என்பது உங்களுக்குத் தெரியுமா??.


கண்ணகியைக் காட்டிலும் கற்பில் சிறந்தவள் மாதவி என்பது உங்களுக்குத் தெரியுமா??.
************************************************
தமிழ் காவியங்களுள் தலைச் சிறந்த சிலப்பதிகாரத்தை அனைவரும் படித்திருப்போம்.ரசித்திருப்போம்.பலரின் கண்ணோடத்தில்,கற்புக் கரசி எப்போதும் கண்ணகி தான்.எனது பார்வையில் எனக்கு எப்போதும் மாதவி தான் கற்பில் தலைச் சிறந்த காவியத் தலைவி.

கண்ணகி தான் கற்பில் சிறந்தவள் என்று ஏன் நமக்குக் கூறப்பட்டது??

தவறான நீதி இழைத்தது அரசன் என்ற போதும், அவனை எதிர் கேள்வி கேட்டு தன் கணவன் குற்றமற்றவன் என நிரூபித்தாள்.பத்தினி பெண்கள் கோபமாய் பார்த்தால் பச்சை மரங்களும் பற்றி எரியும் என்ற கூற்றின் படி கண்ணகியின் கோபத்தில் மதுரையே எரிந்தது.எனவே கண்ணகியே கற்புக் கரசி என்றுச் சிலப்பதிகாரத்தை படித்து முடித்த நேரத்தில் முடிவு செய்துவிடுவோம்.

நம்மில் எத்தனைப் பேருக்கு மாதவி தான் அவளை விடச் சிறந்தக் கற்புக் கரசி என்பதுத் தெரியும்.

தான் தவறான நீதி தந்து ஒரு பெண்ணின் வாழ்வையே அழித்து விட்டோம் எனத் தெரிந்த அடுத்தகனமே பாண்டிய மன்னன் தன் மனைவியுடன் உயிர் நீத்தான் என்பதைத் தான் வரலாறு சொல்கிறது.அவன் இறப்பின் பின்னும் சினம் அடங்காமல் தான் கண்ணகி மதுரையை எரித்தாள் .அவளிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது ஒரு பெண்ணின் கோபம் அழிவில் முடியக் கூடாது என்பதைத் தான்.

பிறப்பால் கண்ணகி உயர்ந்த குலத்தில் பிறந்தவள்.நல்ல சூழலில் நல்ல பழக்க வழக்கங்களுடன் பாரம்பரியமான குடும்பத்தில் வளர்ந்தவள்.அவள் வழி மாறியிருந்தால் தான் ஆச்சரியமே தவிர,அவள் கற்பில் சிறந்து இருந்ததில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை.


மாதவி பிறப்பால் தாசி குலத்தில் பிறந்து, தாசிகள் நிறைந்த இடத்திலேயே வளர்ந்தவள்."எந்த பிள்ளையும் நல்லப் பிள்ளைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே " என்ற கண்ணதாசனின் வரிகளைக் கூட பொய்யாக்கி விட்டால் மாதவி.மாதவியின் அன்னை வஞ்சக எண்ணம் கொண்டு மாதவிக்கே தெரியாமல் கோவலனின் சொத்துக்களை கண்ணகியிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் பறித்தவள் என்று தான் சிலப்பதிகாரம் விவரிக்கிறது.அப்படி ஒரு அன்னையின் கைகளில் வளர்ந்த மாதவி உள்ளத்தாலும் உடலாலும் தூய்மையாக இருந்தது தான் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது.

மாதவியை எந்த ஒரு இடத்திலும் தவறு செய்தவளாகச் சிலப்பதிகாரம் வர்ணிக்கவில்லை.கோவலன் தன்னுடன் வாழ்ந்த போதும், அவனை கண்ணகியைச் சென்று பார்க்கும் படி வற்புருத்தியவள் மாதவி.கோவலன் அவளை நீங்கியதும் அவள் நினைத்திருந்தால் தாசியாக வாழ்ந்திருக்கலாம்.அவள் அவ்வாறுச் செய்யவில்லை. அவள் மனதாலும் உடலாலும் வாழ்ந்தது கோவலன் ஒருவனுடன் மட்டுமே.கோவலன் அவளை நீங்கி கண்ணகியுடன் இணைந்ததும்,அவள் அன்னை வஞ்சகமாய் பறித்த அனைத்துச் சொத்துக்களையும் மீட்டுத் தந்துவிட்டு, பௌத்த மத துறவியானவள் மாதவி.தாசி குலத்தில் பிறந்த ஒருத்தி வேறு ஒருவனை ஏற்க மனமில்லாமல் துறவியானது உங்களை ஆச்சரியப் பட வைக்கவில்லையா?? இப்போதுச் சொல்லுங்கள் பெண்மையில் சிறந்தவள் மாதவி அன்றோ?

ஆனால், இன்று வரை நம்மில் பலரும் கற்பின் வரலாற்று உதாரணாமாய் கண்ணகியைத் தான் சொல்கிறோமே தவிர, மாதவியை மறந்துவிட்டோம்.

இனிவரும் தலைமுறையினருக்குச் சிலப்பதிகாரம் கற்பிக்கப்படுமா என்றறியேன் நான்.ஒருவேளைக் கற்பிக்கப் பட்டால், மறக்காமல் மாதவியின் புகழ் உரையுங்கள்.தவறானச் சூழ்நிலையிலும், தவறு செய்ய வாய்ப்பு கிடைத்தப் போதும் மாறாத மனங்களே மண்ணில் சிறந்தவை.

-ஆதிரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக