தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 15 ஜூலை, 2013

யாழ்ப்பாணத்துத் தனித்துவமான சில சமய நம்பிக்கைகள்

-  

 
லங்கையின் வடமுனையிலுள்ள மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட ஒரு குடாவாக, யாழ்ப்பாணம் இருப்பதால் சில தனித்துவமான பண்புகளை அது பேணி வந்திருக்கின்றது.
தன் காரணமாக, யாழ்ப்பாணம் இந்து சமயம் சிறப்புற்றிருக்கும் பிற பிரதேசங்களை விடவும், இன்னும் இலங்கையின் பிற பகுதிகளை விடவும் சிறப்பான, தனித்துவமான பல பண்புகளை, நம்பிக்கைகளைக்  கொண்டதாகவுள்ளது. யாழ்ப்பாணம் சிறிய குடாநாடாக இருப்பதால், பிற பகுதிகளுடன் நெருக்கமான தொடர்பற்றதாக அக்காலத்தில் இருந்திருக்கிறது.
தனால், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர்கள் போன்ற அந்நிய மதத்தவர்கள் தங்களின் மதரீதியான கொடுங்கோலாட்சியை இங்கே நிலைநிறுத்தமுயன்றுள்ளனர். இதனால், இதற்கு எதிராக கடுமையாக போராடும் எண்ணமும் விருப்பும் மக்களுக்கு இயற்கையாகவே ஏற்பட்டிருக்கிறது.
தனால், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் போன்ற பெரியவர்களும் அவர் வழி வந்தவர்களும் எவருக்கும் விட்டுக் கொடுக்காத வீரசைவ செந்நெறியை இங்கே வளர்த்திருக்கிறார்கள். இதனால், பிற இடங்களில் சில பல மாற்றங்களை சமய வழிபாடு பெற்ற போதும், அவைகளை இங்கே நுழைய விடாது பாதுகாக்கும் ஒரு வகைப்பண்பை சில நிலைகளில் காணமுடியும்.
பாரம்பரிய உடை
யாழ்ப்பாணத்தில் கோயில் வழிபாடு மிகவும் முக்கியமானது. இவ்வழிபாட்டின் பல விடயங்களும் தமிழகத்துடன் ஒத்ததாகவே காணப்படுகின்றன. எனினும், சில பல வேறுபாடுகளும் தனித்துவங்களும் அவதானிக்கத்தக்கன.
முக்கியமாக, யாழ்ப்பாணத்துத் திருக்கோயில்களில் உள்ளே செல்லும் ஆண்கள் யாவரும் மேலாடையற்றவர்களாகவே உட்செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இன்றளவும் உட்சென்று வழிபட விரும்புகின்ற ஆண்கள் யாவரும் வேட்டி அணிந்து மேலாடை இன்றியே வழிபாட்டுக்குச் செல்கின்ற வழக்கம் உள்ளமை அவதானிக்கத்தக்கது.
மேலங்கி, காற்சட்டை போன்றவை மேலைத்தேசத்தவரால் அறிமுகம் செய்யப்பட்டது. அவற்றை அணிந்து கோயிலுக்குச் செல்வதை விரும்பாத பெரியவர்கள் இதனை இன்றைக்கும் மிக இறுக்கமாகப் பின்பற்றி வரக் காணலாம்.
னால், இன்றைக்கு இந்த நிலையை உடைக்கும் பிரதான சக்தியாகப் பெண்கள் இருக்கிறார்கள். ஆண்கள் விஷயத்தில் மிகவும் கடுமையாக பாரம்பரிய உடையை வலியுறுத்தும் யாழ்ப்பாண சமூகம் பகிரங்கமாக பெண்களை ஆலயத்தினுள் பாரம்பரிய உடையணியுமாறு வலியுறுத்தும் தன்மை குறைந்திருப்பதால், பெண்கள் பொதுவாக, பஞ்சாபி போன்ற ஆடைகளையே அணிவதை விரும்புவதை இன்று காணலாம்.
வெள்ளிக்கிழமைப் புனிதம்
ல்லா நாளும் புலால் உண்பவர்கள் கூட, வெள்ளிக்கிழமையன்று சுத்த சைவபோஜனம் செய்வது யாழ்ப்பாணத்தில் மிகவும் கண்டிப்பாக இருந்து வரும் பழக்கமாக இருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் சில பிரிவினர் மரக்கறி உணவை ‘சைவ உணவு’ என்று சொல்வதற்கு அப்பால் ‘ஆருதக்கறி’ என்றும் அழைக்கிறார்கள். இது ஜைனசமயத்திலிருந்து வந்த சொல்லாக இருக்கலாம்.
வெள்ளிக்கிழமை தோறும் ஊர்களில் உள்ள பெரிய திருக்கோயில்களில் உற்சவம் நடக்கிறது. சுக்கிரவாரமூர்த்தி என்றழைக்கப்படும் உத்ஸவர் திருவுலாக் கண்டருளும் காட்சியும் பல இடங்களில் காணலாம்.
பாடசாலைகள், கல்லூரிகளில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனை தீபாராதனையுடன் ஆரம்பமாகி சுமார் அரை மணி நேரம் வரை நீடிக்கும். இதன் போது, மாணிக்கவாசகப் பெருமான் அருளிய “சிவபுராணம்” பாடும் வழக்கமும் பரவலாயுள்ளமை கவனிக்கத்தக்கது.
ரத்தடிகளில் அமைந்துள்ள சிற்றாலயங்களில் பிற நாட்களில் பூஜைகள் நடக்காதவிடத்தும் வெள்ளிக்கிழமை வழிபாடும், பூஜையும் அவசியம் நடைபெறுகின்றன.
கப்பல் திருவிழா
யாழ்ப்பாணம் வலிகாமம் (நடுப்பகுதி), தீவகம், வடமராட்சி, தென்மராட்சி என்று நாற்பெரும் பிரிவுகளாக அமையும். இப்பிராந்தியங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்துவமான சில சிறப்பியல்புகளையும் அவதானிக்கலாம்.
தில் ஒன்றான வடமராட்சியில் நாகர் கோயில் என்றொரு இடமுண்டு. (தமிழ்நாட்டு நாகர் கோயிலுக்கும் இதற்கும் தொடர்புண்டா? என்பது ஆராயப்படவேண்டியது.) இவ்வூரில் பிரபலமான ஸ்ரீ நாகராஜர் திருக்கோயில் உள்ளது. இதனை ஊர் வழக்கில் பெரியதம்பிரான், நாகதம்பிரான் கோயில் என்பர்.
வ்வூரில் இருந்த ஆலயத்தை அழிப்பதைத் தடுத்த இளைஞர்களை போர்த்துக்கேய கத்தோலிக்க வெறியர்கள் கப்பலில் ஏற்றிக் கொண்டு செல்ல முயன்றனராம். அப்போது, நாகராஜப் பெருமான் பாம்பாக அக்கப்பலினுள் சென்று வெள்ளைக்கார மாலுமிகளை அச்சுறுத்தி அந்த இளைஞர்களை விடுதலை செய்து, போர்த்துக்கேய வெள்ளையர்களையும் விரட்டினாராம்.
க்கதையை அடிப்படையாகக் கொண்டு வருடா வருடம் பிரம்மாண்டமான கப்பல் திருவிழா இவ்வூரில் நடைபெற்று வருகின்றது. இதன் போது, இளைஞர்கள் மாலுமிகளைப் போல வேடமிட்டு நடிப்பது சிறப்பான நிகழ்ச்சியாகும்.
கதிரைப் பூஜை
டமராட்சியின் துன்னாலையிலுள்ள நெல்லண்டைப்பதியில் பத்திரகாளியம்பாள் கோயிலுள்ளது. இவ்வன்னைக்கு நாட்டுக்கூத்து மிக விருப்பமானது என்பது ஐதீகம்.
தனால், இக்கோயிலின் மேற்குப் புறத்தே பழங்காலந்தொட்டு நாடகங்கள் மேடையேற்றப்பட்டு வருகின்றன. இதனை இங்கே நேர்த்தியாகச் செய்யும் மக்களும் உள்ளனர்.
க்கோயிற் கருவறையின் மேற்குச்சுவற்றில் ஒரு சாளரம்(யன்னல்) இருக்கிறது. அதன் வழியாக அம்பாள் கூத்தைப் பார்த்து ரசிக்கிறாள் என்பது ஐதீகம்.
“கூத்துகந்தாய் நேர்த்தியர் கூத்தாடுங்காலை
கோலமிடு வல்லிபுரக்கோயில் வைகும்
சீர்த்தமிடு நின்னண்ணன் தன்னையும் கூவிச்
சேர்ந்திருந்து மேலைமதில் யன்னல் ஊடாய்
பார்த்தவர்கள் வேண்டுவன பரிவில் ஈவாய்”
என்பது இவ்வூர்ப் புலவர் ஒருவர் பாடி வைத்த பழம் பாடல் ஒன்று. அருகிலுள்ள ஸ்ரீவல்லிபுரம் விஷ்ணுவாலயப் பெருமாளும் அவ்வன்னையும் இங்கே சேர்ந்திருந்து கூத்துப் பார்த்து அருள் புரிவதாகச் சொல்வார்கள்.
வ்வாறான நம்பிக்கை நிலவுவதால் இங்கே கூத்து மேடையில் இரு கதிரைகள் இடப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருக்கும். அவ்விரு கதிரைகளின் முன்னால் நைவேத்தியங்கள் படைக்கப்பட்டிருக்கும். கூத்து தொடங்க முன் இவ்விரு கதிரைகளுக்கும் பூஜை நடக்கும். அன்னையும் அண்ணனும் (பெருமாளும்) இவ்விரு கதிரைகளிலும் வந்திருந்து கூத்துப் பார்த்தருளுவர் என்பது நம்பிக்கை. கூத்தாடும் கலைஞர்கள் எல்லாரும் இக்கதிரைப் பூஜையில் கலந்து கொள்வதும் சிறப்பு.
வ்வாறு நெல்லண்டை காளி கோயிலில் நடக்கிற கூத்துக்கள் வல்லிபுரப்பெருமாளுக்கு பிரம்மோத்ஸவங்கள் நடைபெறும் போது நடைபெறா. இதற்கு காரணம் பெருமாள் அந்த வேளைகளில் தன் கோயிலிலிருந்து இங்கே கூத்துப் பார்க்க வரமாட்டார் என்ற நம்பிக்கையாகும்.
கிரேக்க நாடக அரங்குகளில் மூன்று கதிரைகள் தெய்வங்களுக்காக இடும் வழக்கிருக்கிறது. ஜப்பானியருக்கும் இந்த நம்பிக்கை இருக்கிறது. எது எவ்வாறோ, இந்த நம்பிக்கை எக்காலம் தொடக்கம் இங்கிருக்கிறது? என்பது எவராலும் அறுதியிட்டுச் சொல்ல இயலாததாயிருக்கின்றது.
ஆழ்வார் கோயில்
தே வடமராட்சிப்பிரதேசத்தின் முக்கிய திருக்கோயில் வல்லிபுர ஆழ்வார் ஆலயம். இப்படி ஏன்? வல்லிபுர ஆழ்வார் என்கிறார்கள் என்றால், இங்கே மூலவராக எழுந்தருளியிருப்பவர் சக்கரத்தாழ்வாரேயாவார்.
மூன்று அகன்ற பிரகாரங்களுடனும் நான்கு இராஜ கோபுரங்களுடனும் பிரம்மோத்ஸவங்கள் நடக்கிற பெரிய திருக்கோயிலான இந்த விஷ்ணுவாலயத்தின் மூலவராக சுதர்சன சக்கரமே விளங்குவது எங்குமில்லாத தனிச்சிறப்பாகும்.
னினும், அந்த சக்கரவடிவமாக பெருமாளே எழுந்தருளியிருப்பதாகப் வழிபடுவதே வழக்கம். ஆனால், ஆலய திருநாமம் வல்லிபுர ஆழ்வார் என்றே உள்ளது. உற்சவங்களுக்கும் சக்கரமாயவன் என்று மக்கள் அழைக்கிற சுதர்சன சக்கரமே உலா வருதலும் காணத்தக்கது.
ந்த ஆலயத்தை அண்டிய சமுத்திரத்தில் பெருமாள் மத்ஸய அவதாரம் (மீன் வடிவம்) எடுத்தார் என்பது வரலாறு. அந்த மீன் அதே சமுத்திரக்கரையில் குழந்தைப்பேறு வேண்டித் தவமிருந்த லவல்லி என்ற பெண்ணின் மடியில் பாய்ந்ததாம். அது அப்போதே ஆண் குழந்தையாயிற்றாம்.
ந்த அதிசயக்குழந்தை சிறிது நேரத்தில் மறைந்து போயிற்று. அப்போது சமுத்திரக்கரைக்கு ஒரு அந்தணர் வந்து இப்போது மூலவராக உள்ள சக்கரப்பெருமாளை கொடுத்து ஆசீர்வதித்து, இதனை வைத்து கோயில் அமைத்து வழிபடுமாறு பணித்து சென்றார். அவ்வண்ணமே இவ்வாலயத்தை உருவாக்கி வழிபட்டவர்கள் சகல செல்வ யோகம் மிக்க பெரு வாழ்வு பெற்றார்கள்.
ன்றைக்கும் இந்த அற்புதம் நிகழ்ந்த நாளான புரட்டாதிப் பௌர்ணமியை ஒட்டி பிரம்மோத்ஸவம் நடக்கிறது. அன்றைய தினம் சமுத்திரத்தில் தீர்த்தவாரி வெகு சிறப்பாக நிகழும். இவ்வரலாறு ஸ்காந்தபுராணத்தில் பாகமான தக்ஷண கைலாச புராணத்தின் ‘வல்லிபுரமஹாத்மியத்தில்’ பேசப்பட்டிருக்கிறது.
வேறு பெருமாள் கோயில்களில் இல்லாதவாறு இங்கே ‘ஞாயிற்றுக்கிழமை’ முக்கியமான புனித வழிபாட்டு நாளாக அனுசரிக்கப்படுகிறது. வழிபாட்டின் போது, எங்குமில்லாதவாறு சைவத்திருமுறைகள் ஓதப்படுகின்றன. சிவாச்சார்யார்கள் பூஜை செய்கின்றனர். இக்கோயிலை அடியொற்றி ஆரம்பிக்கப்பட்ட சில விஷ்ணுவாலயங்களை யாழ்ப்பாணத்தின் வேறு சில பாகங்களில் காணலாம்.
அடுப்பு நாச்சியார் வழிபாடு
நெருப்பை, அடுப்பை பெண் தெய்வமாகக் கருதி வழிபடும் முறை தமிழ்நாட்டில் இல்லாத இங்குள்ள தனித்துவ நம்பிக்கையாகும். முக்கிய நிகழ்வுகளுக்காக (திருமணம் போன்றவற்றிற்காக) உணவு, பலகாரங்கள் தயாரிக்கும் போது, சுமங்கலியான பேரிளம் பெண் ஒருத்தி அடுப்பின் கால்களுக்கு பொட்டுப்பூ இட்டு வழிபட்ட பின்னரே எண்ணெய்ச்சட்டி அடுப்பில் ஏறும். முதலில் வரும் பலகாரம் அடுப்பிலேயே இடப்பட்டு வழிபடும் வழக்கமுள்ளது.
ந்த வழிபாட்டில் ஆண்களின் வகிபங்கு எதுவுமில்லை என்பது கவனத்திற்குரியது.
அடி அளத்தல்
தீ மிதித்தல், காவடி எடுத்தல் போன்ற இறை வழிபாடுகள் போல பெண்களால் அடி அளத்தல் எனும் தனித்துவமான வழிபாடும் நிறைவேற்றப்படுகிறது. ஆண்கள் அங்கப்பிரதட்சணம் செய்வார்கள். பெண்கள் உடலின் எல்லா அங்கங்களும் நிலத்தில் பட விழுந்து வணங்குவதையோ, அப்படியே பிரதட்சணம் செய்வதையோ, இந்து தர்ம சாஸ்திரம் அனுமதிப்பதில்லை. (ஆனால், இன்றைய தமிழ்ச்சினிமாக்களில் இது முக்கிய வழிபாடாக காட்டப்பட்டு வருவது அவதானிக்கத்தக்கது.)
தற்கு மாற்றாக ஒவ்வொரு அடிக்கும் ஒரு பஞ்சாங்க நமஸ்காரமாக கோயிலைச்சுற்றி நமஸ்கரிக்கும் வழக்கம் இலங்கை- யாழ்ப்பாணத்தில் இருக்கிறது.
புராண படனம்
யாழ்ப்பாணத்தில் கோயில்களில் ஒருவர் புராணப் பாடல்களை பதம் பிரித்து வாசிக்க இன்னொருவர் அதனை சாதாரண மக்களுக்கு புரிந்து கொள்ளும் வகையில் பாட்டும் பயனுமாக விரித்துரைக்கும் வழக்கம் உள்ளது. இவ்வகையில், பெரியபுராணம், கந்தபுராணம், திருவிளையாடற்புராணம், திருச்செந்தூர்ப்புராணம், மயூரகிரிப்புராணம், திருவாதவூரடிகள் புராணம், ஏகாதசிப்புராணம், சிவராத்திரிபுராணம், திருத்தணிகைப்புராணம், விநாயகர் புராணம் ஆகியவற்றை இப்படி சில மாதங்களுக்குப் படிக்கும் வழக்கம் உள்ளது.
ற்றாரே புரிந்து கொள்ளத்தக்க கடின நடையில் இருக்கும் பழந்தமிழ்ச் செய்யுட்களால் அமைந்துள்ள புராணப்பாடல்களை ஒருவர் முழுமையாக ஒரு முறை படித்து பின் மீண்டும் ஒவ்வொரு வசனங்களாகப் பிரித்துச் சொல்ல, அவ்வசனங்களின் பொருளை பயன்சொல்லுபவர் விரித்துரைப்பார். இந்த வழக்கத்தினால், சாதாரண பாமர மக்களுக்கும்,
எழுத்தறிவில்லாதவர்களுக்கும் கூட நிறைவாக புராணப்பாடல்களும், கதைகளும்
தெரிந்திருந்தது.
தாரணமாக மாசிமகத்துடன் ஆரம்பமாகி தினமும் சில மணி நேரங்களை ஒதுக்கி கந்தபுராண படனத்தை ஆரம்பித்தால் மூன்று மாதங்களின் பின் வைகாசி விசாகத்தன்று பூர்த்தி செய்யும் வழக்கமுண்டு. இப்படி நீண்ட காலத்தை உள்வாங்கி நீண்ட நேரம் நடைபெறும் புராண படனத்தை இன்றைய அவசரஉலகில் பின்பற்றுதல் குறைந்து வருகின்றது.
ஜாதிகளும் நம்பிக்கைகளும்
யாழ்ப்பாணத்தில் பல்வேறு ஜாதியினரும் வாழ்ந்து வருகின்றனர். எனினும், தமிழ் நாட்டில் உள்ளது போலன்றி யாவரும் எந்த விதமான பாகுபாடுமின்றி இன்று பழகி வருகின்றனர். திருமணம் போன்றவற்றிலன்றி பிற விடயங்களில் இன்று இளம் சமூதாயம் ஜாதி பார்ப்பதில்லை.
டும் போரும் அதனால் உண்டான நெருக்கடிகளும், பட்ச பேதமின்றி உண்டான பெருந்துன்பங்களும், பலரும் புலம்பெயர்ந்தமையும் ஜாதிப்பாகுபாடு ஒழிவதற்கு உதவியிருக்கிறது.
னாலும் நீண்ட கால ஜாதீய எண்ணங்களும், அது சார்ந்த தடயங்களும், நம்பிக்கைகளும் இன்றும் நிலவிக் கொண்டேயுள்ளன.
சிறுதெய்வ வழிபாடுகளும் குறித்த ஜாதிக்குரிய கடவுளர்களின் வழிபாடுகளும் கூட நடைபெற்று வந்துள்ளன. ஆனால், இவை எல்லாம் இன்று மறைந்து வருகின்றன. அல்லது உரு, பெயர் மாற்றங்களைப் பெற்றுள்ளன.
னினும், பஞ்சமர்கள் என்போர் யாழ்ப்பாணத்து ஜாதி அடிப்படையில் ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்டவர்களாக இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. இந்த ஐந்து ஜாதிகளாக பள்ளர், நளவர், பறையர், அம்பட்டர், வண்ணார் என்கிற ஜாதிகள் காணப்படுகின்றன. இன்றைக்கு இப்பாகுபாடுகள் மகிழ்ச்சி தரக்கூடிய வகையில் குறைந்து வருகின்றன.
வர்களை விட விஸ்வப்பிரம்மகுலத்தவர்கள் நிறையவே இருக்கிறார்கள். அவர்களாக தச்சர், கொல்லர், பொற்கொல்லர் (தட்டார்), கற்கொத்தியார், சிற்பாசாரிகள் ஆகிய ஐந்து ஜாதியினர் (பஞ்சகம்மாளர்) குறிப்பிடப்படுகின்றனர்.
ன்னும் வேளாளர்கள் என்ற வகுப்பாரே யாழ்ப்பாணத்தின் பெருநிலவுடமையாளர்களாக பெரும் ஜாதிக்காரராக கணிக்கப்படுகின்றனர். மிகச் சொற்ப அளவிலுள்ள பிராம்மணர்கள் கூட மரியாதைக்குரியவர்களாக இருந்தாலும் பொருளாதார நிலையில் வேளாளர்களையே அதிகம் தங்கியிருந்திருக்கிறார்கள். எனினும் வேளாளர்களுக்குள்ளும் சில உட்பிரிவுகள் இருந்திருக்கின்றன. இசைவேளாளர்கள் என்ற மங்கலவாத்தியம் இசைப்போரும் சைவக்குருக்கள் என்றும் பண்டாரம் என்றும் அழைக்கப்படும் சுவாமிக்கு மாலை கட்டும் வகுப்பாரும் உள்ளனர். ஓதுவார்கள் என்று தனி வகுப்பு இன்று இல்லை.
ன்னும், கோவியர்கள் என்றொரு வகுப்பும் செட்டிமார் வகுப்பும் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது. பரதவர் என்கிற மீனவ மக்கள் மிகவும் செறிவாயும் நிறைவாயும் பொருளாதார பலம் உடையவர்களாயும் சிறப்போடு வாழ்ந்து வருகின்றனர்.
பிராம்மணர்கள் என்கிற போது, அவர்களிடத்தே தமிழகத்திலுள்ளது போல, ஸ்மார்த்தர், வைஷ்ணவர், குருக்கள், வடமாள், சாஸ்திரிகள் போன்ற பிரிவுகள் இன்று இல்லை. யாவரும் ஒன்றுபடவே நோக்கப்படுகிறார்கள். எனினும், குருக்கள் என்கிற பிரிவுக்குள்ளேயே யாவரும் அடக்கப்படுகின்றமையும் காணக்கூடியது. இவர்களுக்கு தென்னிந்தியாவுடன் மணஉறவு 1950 வரை இருந்தமை அவதானிக்கத்தக்கது.
ஜாதிகளுக்குள் தனித்துவமான நம்பிக்கைகளும், வழக்காறுகளும் உள்ளன. முக்கியமாக திருமணம், போன்ற சுப நிகழ்வுகளிலும் அபரக்கிரியைகளிலும் அவ்வந்த பிரிவாரின் நடைமுறைகளைக் காணக்கூடியதாக உள்ளது. எனினும், இன்று பிராமண வகுப்பாரைத் தவிர பிற சமூகத்தவர்கள் யாவரதும் பூர்வ, அபர கிரியைகள் ஏறத்தாழ ஒரே விதத்திலேயே அதிகளவில் நடைபெறுவதைக் காணமுடிகின்றது.
ன்னும், தமிழகத்தில் பேசப்படும் கௌண்டர், மறவர், கள்ளர், கணக்கர், அகம்படியார், வன்னியர், போன்ற ஆயிரமாயிரம் ஜாதிகள் இங்கே பேசப்படுவதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கண்ணகி வணக்கம்
ங்கே சிலப்பதிகார நாயகியான கண்ணகி வணக்கம் சிறப்புற்றிருக்கிறது. ஆங்காங்கே கோயில் அமைத்து இக்கண்ணகியை வழிபட்டு வந்திருக்கிறார்கள். ‘சிலம்பு கூறல்’ என்ற உரை கலந்த பாடல் காவியம் இவ்வழிபாட்டில் பாடப்படுகின்றது. அதில் சிலப்பதிகாரத்திற்கு மாறான சில, பல விடயங்களையும் காணலாம். அது கண்ணகியை பராசக்தியின் அம்சம் என்கிறது.
ண்ணகை மதுரையை எரித்த பின், பராசக்தி வடிவம் பெற்று பாம்பு உருவம் கொண்டு கோடிக்கரை வழியாக வட இலங்கையின் யாழ்ப்பாணத்தை அடைந்து பல தலங்களிலும் தங்கி நிறைவாக வற்றாப்பளை எனம் இடத்தை அடைந்ததாக இக்கதை சொல்லுகின்றது.
பாண்டிய அரசனின் பிள்ளைப் பேறு வேண்டிய தவத்தில் ஏற்பட்ட மனச்சலனமே அம்பிகையின் கோபமாக மாறியது என்றும், ஆனால், தவத்திற்கு இரங்கி அன்னை பாண்டியனின் மாங்கனி வாயிலாக, புதல்வியாக மாறினாள் என்றும் எனினும், சோதிடர்களின் கருத்தின் படி அவள் கடலில் விடப்பட்டு காவிரிப்பூம்பட்டினத்து வணிகனால் வளர்க்கப்பட்டாள் என்றும் அக்கதை சொல்கின்றது.
க்கதை ஏறத்தாழ துளசி தாஸ ராமாயணம் போல கண்ணகையை இறைவியாக சித்தரிக்கும்
பாங்குடையதாக தனித்துவம் வாய்ந்ததாயுள்ளது. எனினும், சாதாரணமாக சிலப்பதிகாரத்தின் சீர்மையான நடையும், கற்பனை வளமும் இக்கதையிடத்தே காண்பது அரிதாயுள்ளது என்பதை ஏற்கவே வேண்டியுள்ளது.
அண்ணமார் வழிபாடு
யாழ்ப்பாண சமூகத்தில் தாழ்த்தப்பட்ட ஒரு பிரிவு (பள்ளர், நளவர் என்று அழைக்கப்பட்ட ஜாதி) மக்களின் வழிபடு தெய்வங்களுள் முக்கிய நிலையிலிருப்பவர் அண்ணமார் என்ற தெய்வம்.
து தமிழ்நாட்டில் வழங்கும் அண்ணமார் சுவாமி கதை என்ற பொன்னர்- சங்கர் கதையிலிருந்து வேறுபட்டது. இக்கதையை யாழ்ப்பாணத்தில் அண்ணாமார் வழிபாடு செய்யும் மரபார் அறிந்திருக்கவே இல்லை. இப்போது சிறிது அறிந்திருப்பதும் மு.கருணாநிதியின் தொடர் நவீனத்தின் வழியே ஆகும்.
னால், இங்கே அண்ணமாராக தங்கள் குல இளைஞன் ஒருவன் சாமியான கதையே சிலர்
சொல்வர். சிலர் சிவனின் காவல் தெய்வம் என்பர். இவ்வாறு பல கதைகளும் அவரவர் சொன்ன போதும், எதனையும் எழுத்தில் கிடைக்கவில்லை.
னங்கூடலுள், குறித்த ஜாதியரின் குடியிருப்புக்குள் ஒரு பெருமரத்தடியில் கல்லாகவோ, பொல்லாகவோ வைத்து வழிபடப்பட்டு வந்த இவ்வழிபாடு காலமாற்றத்தாலும், ஜாதித்துவ அடையாளம் விரும்பி இழக்கப்படுதலாலும் சிதைந்து வருகின்றது. இப்போது சிவாகம நிலையில் இவ்வாலயங்களும் அமைக்கப்பெற்று அங்கே அன்னமஹேஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கபிரதிஷ்டை நடைபெறுவதை பல்வேறு இடங்களிலும் அவதானிக்கலாம்.
வ்வாறு ஆங்காங்கே சிறுதெய்வ வணக்கம் சார்ந்த நம்பிக்கைகள் நிலவிய போதும், கறுப்பன் போன்ற தெய்வங்களை இங்கு காண இயலவில்லை. ஐயனார் என்கிற போதும் அது பூர்ண புஷ்கலா உடனாய ஹரிஹரபுத்திரராகவே யாழ்ப்பாணத்தில் காணலாம்.
வை யாவும் ஒரு அறிமுகமே.. யாழகத்தை அதன் கிராமங்களில் மறைந்து நிற்கும் தனித்துவ நம்பிக்கை பூர்வமான சமயத்தை, சமூகத்தைப் பற்றிய ஒரு பிரக்ஞையை உண்டாக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். ஆகவே, இது பூரணத்துவமானதல்ல என்பதும் இவைகள் குறித்து ஆய்வுகள் இன்னும் நடைபெற வேண்டும் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.

August 18, 2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக