தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 28 ஜூலை, 2013

"மதுரை உலகின் தொன்மையான நகரம்- மதுரை என்ற பெயர் எப்படி வந்தது"


"மதுரை உலகின் தொன்மையான நகரம்- மதுரை என்ற பெயர் எப்படி வந்தது"
================
தற்போதைய மதுரை, முற்காலத்தில் கடம்ப மரங்கள் நிறைந்த அற்புத வனமாய்த் திகழ்ந்ததாக புராணங்கள் சுட்டுகின்றன. இதனால் ‘கடம்பவனம்’ என்ற பெயராலும் மதுரை அழைக்கப்படுகிறது. மதுரை என்ற பெயர்க்காரணத்தை விளக்க புராணக்கதையொன்றும் தொன்று தொட்டு வழங்கப்படுகிறது. சிவபக்தனான தனஞ்சயன் என்னும் வணிகன், ஒருநாள் தொழில் நிமித்தம் காட்டிற்குள் பயணம் செய்தபோது, தேவர்கள் எல்லாம் கூடி, ஒரு கடம்ப மரத்தடியில் சுயம்புலிங்கம் ஒன்றை வணங்கிக் கொண்டிருந்ததைக் கண்டான். இந்தச் செய்தியை மன்னன் குலசேகர பாண்டியனிடம் தனஞ்சயன் சொல்ல, மன்னனும் உடனே அவ்விடத்தில் கோவில் ஒன்றை எழுப்பினான். அதற்குப் பிறகு கோவிலை மையமாக வைத்து மதுரை மாநகரை வடிவமைத்தான். இந்நகருக்குப் பெயர் சூட்டும் நாளன்று சிவபெருமான் எழுந்தருளியதாகவும், அவரது சடைமுடியிலிருந்து சந்திரக் கலையின் புத்தமுது நகரின் மீது விழுந்ததாகவும், அதனால் இந்நகர் மதுரை என்று பெயரிடப்பட்டதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. மதுரம் என்றால் தமிழில் இனிமை என்று பொருள்.

மருத மரங்களும் நிறைந்திருந்த காரணத்தால் ‘மருதை’ என்றழைக்கப்பட்டு, பிற்காலத்தில் மதுரை என்று திரிந்ததாகவும் சில ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர். அதற்குச் சான்றாக தற்போது மதுரையின் சுற்றுப்பகுதிகளில் வாழுகின்ற கிராமப்புற மக்கள் இன்றைக்கும் கூட மதுரையை ‘மருதை’ என்றழைப்பதும் குறிப்பிடத்தக்கது.

சங்க காலத்தில் தமிழ்ப்புலவர்கள் அனைவரும் கூடி இலக்கியப் பூர்வமான கலந்துரையாடல்கள் நடத்தியதன் காரணமாய் ‘கூடல்மாநகர்’ என்ற பெயராலும், திசைக்கொன்றாய் கோட்டையின் நான்கு வாசற்புறங்களைக்(மாடங்கள்) கொண்டு திகழ்ந்ததால் ‘நான்மாடக்கூடல்’ என்ற பெயராலும் மதுரை அழைக்கப்படுகிறது. ‘கூடல்’ என்னும் பெயர் பொதுவாக இரு நதிகள் சங்கமிக்கும் இடத்தைக் குறிப்பதாகும். பழங்கால நகரங்கள் பல இத்தகைய கூடல்களில்தான் அமைந்திருந்தன. அதுபோன்றே மதுரை மாநகரும் கூட, வைகை நதியும் அதன் உபநதியும் சங்கமித்த இடத்தில் அமையப்பெற்றிருக்க வேண்டும். காலப்போக்கில் அந்த உபநதி தன் போக்கை மாற்றியிருக்கக்கூடும் என்பதும் ஆய்வாளர்களின் கருத்தாகும்.

‘ஆலவாய்’ என்ற மற்றொரு பெயராலும் மதுரை அழைக்கப்பெற்றது. ‘ஆலம்’ என்ற சொல்லுக்கு நீர்நிலை என்று பொருள். பழம் மதுரையைச் சுற்றி அகழியும், கோட்டையின் வடபுறத்தில் அகழியை ஒட்டி வைகையும் எப்போதும் நீர்நிறைந்து ஓடியதால் ‘நீர் நிலைகளுக்கு நடுவே அமைந்த ஊர்’ என்ற பொருள்பட இப்பெயர் வழங்கப்பெற்றது என்று அறிஞர் மயிலை.சீனி.வேங்கடசாமி குறிப்பிடுகிறார்.

மாநகர் மதுரை எப்போதும் மணக்கோலம் பூண்டது போன்ற தோற்றத்துடன் திகழ்வதாக இளங்கோவடிகள் ‘மணமதுரை’ (சிலம்பு 24;5) என்ற சொல்லாடல் மூலமாக விளக்குகிறார். ‘விழாமலி மூதூர்’ எனும் சிறப்புப் பெற்ற மதுரை, ஆண்டின் அனைத்து மாதங்களிலும் விழாக்கோலம் பூண்டு திகழ்கிறது. அது மட்டுமின்றி, தமிழ் மாதங்களின் பெயர்களாலேயே தெருப்பெயர்கள் அமைந்துள்ளதும் மதுரையின் மற்றுமொரு சிறப்பாகும். மதுரைவாழ் மக்கள், குளங்கள், கண்மாய்கள் போன்ற நீர்நிலைகளை அடிப்படையாகக்கொண்டு, அப்பெயர்களாலேயே தங்களின் சிற்றூர்களை அழைத்து மகிழ்ந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மதுரை நகரின் கட்டிடக் கலையும் நகரமைப்பும் கிரேக்க நாட்டின் தலைநகரைப் போன்று இருந்ததால் ‘கிழக்கு நாடுகளின் ஏதென்ஸ்’ என்று மதுரையைப் பற்றி கிரேக்க யாத்திரிகர் மெகஸ்தனிஸ் கி.மு.3ஆம் நூற்றாண்டு தனது இண்டிகா எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். மெகஸ்தனிஸின் வருகைக்குப் பிறகு, ஏராளமான ரோமானியர்களும், கிரேக்கர்களும் மதுரைக்கு வந்து பாண்டிய அரசர்களுடன் வணிகத்தொடர்பு வைத்திருந்தனர். உலகப் பேரழகி கிளியோபாட்ராவுக்கு பாண்டி நாட்டிலிருந்து முத்து, மயில் தோகை, அகில், சந்தனம் போன்ற பொருட்கள் ஏற்றுமதியானதாக கிரேக்க நாட்டுப் பண்டைய இலக்கியங்கள் கூறுகின்றன.

( நன்றி – நீரின்றி, தானம் அறக்கட்டளை )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக