வில்வ இலை பக்தி
தை அல்லது மாசி மாதத்தில் பொதுவாக வில்வ மரத்தின் இலைகள் உதிர்ந்துவிடும். புதிய இலைகள் துளிர்க்கும் வரை சிவ பூஜைக்கு வில்வம் கிடைப்பது அரிது.
ஸ்ரீராமகிருஷ்ணரின் தந்தையான க்ஷுதிராமிற்கும் இந்தப் பிரச்னை இருந்தது.
ஒருமுறை அவர் மேற்கு வங்காளத்திலுள்ள மேதினி பூருக்குக் கிளம்பினார். விடியற்காலையில் நடந்தே புறப்பட்ட அவர் பத்து மணி அளவில் வழியிலுள்ள ஒரு கிராமத்தை அடைந்தார். மிக அதிசயமாக, அக்கிராமத்திலுள்ள வில்வ மரத்தில் புதிய இலைகள் துளிர்த்திருப்பது அவரது கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது.
அவரது மனம் பேரானந்தத்தில் மூழ்கியது. மேதினிபூர் செல்ல வேண்டும். அங்கு தமது மருமகனைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணங்கள் எல்லாம் அவரது மனதிலிருந்து அடியோடு மறைந்தன. இந்தத் தளிர் வில்வ இலைகளால் எவ்வளவு ஆனந்தமாக சிவபெருமானை வழிபடலாம் என்ற எண்ணம் அவரது உள்ளம் முழுவதையும் நிறைத்தது.
உடனே புதிய கூடை ஒன்றும் சிறிய துணி ஒன்றும் வாங்கினார். அருகிலிருந்த குளத்தில் அவற்றைக் கழுவி வில்வ இலைகளை கொய்து கூடையை நிரப்பினார். ஈரத் துணியால் அதனை மூடி, வேறு எந்தச் சிந்தனையுமின்றி காமார்புகூருக்குத் திரும்பி விட்டார்.
அப்போது மாலை மூன்று மணியாகிவிட்டிருந்தது. உடனே குளித்துவிட்டு சிவபெருமானையும் சீதளாதேவியையும் அப்புதிய வில்வ இலைகளால் அர்ச்சித்து நீண்ட நேரம் வழிபட்டார். அவரது மனம் சொல்லொணா ஆனந்தத்தில் திளைத்தது.
சிவனை வில்வ இலைகளால் வழிபடு வதற்காகத் தாம் திரும்பி வந்ததாக அவர் கூறியதைக் கேட்ட அவரது மனைவி சந்திராதேவி தன் கணவனின் ஆன்மிக உள்ளம் கண்டு பேரானந்தம் எய்தினாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக