தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 27 ஜூலை, 2013

ஆதிசங்கரர் பாரத பூமியில் அவதாரம் செய்யவில்லை என்றால்


சாரதாரமணன்

ஆதிசங்கரர் பாரத பூமியில் அவதாரம் செய்யவில்லை என்றால் ஸநாதன தர்மம் மிக க்ஷீணமாகப் போயிருக்கும். இன்றைய தினம் நாம் எல்லோரும் இவ்வாறு ஸத்விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொள்வதற்கு வாய்ப்பே வராமலிருந்திருக்கும். எதனாலே? ஆதிசங்கரரின் அவதாரத்திற்கு முன்பு இந்த தேசத்தின் பரிஸ்திதி சூழ்நிலை மிகவும் விபரீதமாக இருந்தது. அதாவது ஸநாதன தர்மத்திலும் தர்மத்திற்கு மிகவும் ப்ரமாணமாக இருக்கக் கூடிய வேதங்கள்விஷயத்திலும் ஜனங்களுக்கு விஸ்வாசம் இழந்து விட்டது. எல்லோரும் தங்களுக்கு பிடித்ததை தர்மம் என்று நினைத்து வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். ஒவ்வொருவனும் புதிது-புதிதாக ஒன்றை இதுதான் சித்தாந்தம் என்று ப்ரசாரம் செய்து கொண்டு இருந்தான். அப்பேர்ப்பட்ட ஸந்நிவேசத்தில் ஆதிசங்கரர் அவதரித்தார். அவர் முக்யமாக ஸநாதன தர்மத்தின் பெருமையை ஜனங்களுக்கு போதித்தார். தர்மம் என்றால் என்ன என்கிற விஷயத்தைத் தெளிவாக ஜனங்களுக்கு சொல்லித் தந்தார். வேதங்களின் பெருமை எவ்வளவு என்பதைச் சொன்னார். இந்த வாழ்க்கை எப்படி சார்த்தகமாகும் என்கிற விஷயத்தை சொன்னார். ஸன்மார்கத்தை காட்டினார். அப்பேர்ப்பட்ட மஹா கார்யத்தை உலக சரித்திரத்திலேயே ஆதிசங்கரர் ஒருவர்தான் செய்தார். அதனாலேதான் அவதாரமாகி 1200 ஆண்டுகள் ஆனாலும் கூட ஆதிசங்கரருடைய பெயர் முழு உலகத்திலேயே ஒரு அசாதாரண-அபாரமான தபஸ்வி என்று ப்ரசாரத்தில் இருக்கிறது. ஆதிசங்கரர் நித்ய ஜீவனத்தில் அனுசரிக்கவேண்டியவை என்ன என்கிற ப்ரச்னைக்கு பதிலை மிக அழகாகச் சொன்னார்.

உலகத்தில் அநேகம் பேருக்கு ஒரு ப்ரமை உண்டு “ஆதிசங்கரர் ஏதோ சில பண்டிதர்களுக்குத் தெரியும்படியாகத்தான் புஸ்தகங்கள் எழுதி இருக்கிறார். ரொம்பப் பெரிய வேதாந்த சர்ச்சை, நமக்கு யாருக்கும் புரியாத விஷயம். சாதாரண மனிதர்கள் அவருடைய த்ருஷ்டியிலே இல்லை. சாதாரண மனிதர்களுக்காக அவர் ஒன்றும் சொல்லவில்லை” என்ற ப்ரமை.

ஆதிசங்கரருடைய த்ருஷ்டி ரொம்ப விசாலமானது. உலகத்தில் பிறந்த ஒவ்வொருவனுக்கும் நன்மை உண்டாக வேண்டும், ஸ்ரேயஸை அடையவேண்டும் என்பது தான் அவருடைய விருப்பம். அதனால் அவர் பாஷ்யங்களை எழுதியதோடு நிற்கவில்லை. மிக எளிமையான ஸ்தோத்ரங்களையும், மிக சுலபமாகப் புரியும்படியான உபதேசங்களையும் எழுதி வைத்தார். நான் அநேக இடங்களில் ஆதி சங்கரரைப் பற்றிச் சொல்லும்போது ஒரு விஷயம் சொல்வேன். பெரிய வகுப்புக்குப் பாடம் சொல்கிற ஆசிரியரிடம் சிறிய வகுப்புக்கு பாடம் சொல்லச் சொன்னால் முடியாது என்பார். ஆதி சங்கரர் அப்படி இல்லை அவர் வி.கி வகுப்புக்கும் பாடம் சொல்வார். 1ம் வகுப்புக்கும் சொல்லுவார். அப்பேர்ப்பட்ட கருணை ஆதிசங்கரருக்கு உண்டு. அதனால் பெரிய பெரிய பாஷ்ய நூல்களை எழுதியதோடு மிக தெளிவான ப்ரகரணநூல்களையும் எழுதி ஜனங்களுக்கு மஹோபகாரம் செய்தார். நாம் கேட்டுக் கொண்ட கேள்வி என்ன? சாதாரண மனிதனுக்கு ஆதிசங்கரருடைய உபதேசம் என்ன? அதற்கு அவர் சொன்னார் “நான்கு விஷயங்களை சொல்கிறேன் அப்பா! இதை ஒவ்வொருவனும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்படியே வாழ்க்கையை நடத்த வேண்டும்”. என்ன நான்கு விஷயங்கள்? “நமக்கு எவ்வளவோ சமயம் கிடைக்கிறது அல்லவா? அந்த சமயத்தை நாம் வீணாக்கிக் கொண்டு இருக்கிறோம். யாரும் எந்த வேலையிலும் 24 மணி நேரமும் வேலை செய்கிறான் என்று சொல்ல முடியாது. வேலை இல்லாத சில நேரமும் கிடைக்கும் அந்த நேரத்தில் அவர்கள் என்ன பண்ணுகிறார்கள்? பலர் அதை வ்யர்த்தமாகத்தான் (வீணாக) கழித்துக் கொண்டு இருப்பார்கள். வ்யர்த்தமாக போக்கிக் கொண்டு இருப்பார்கள் என்பதற்கு என்ன அர்த்தம்? வேண்டாத கதை புஸ்தகங்கள் படிக்கவோ அல்லது சினிமாவுக்குப் போகவோ டி.வி. பார்க்கவோ அல்லது அநாவஸ்யமான விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டு இருக்கவோ செய்வார்கள். அதே சமயத்தை ஒரு பவித்ரமான க்ரந்தத்தைப் படித்து நம்முடைய ஆத்மோத்தாரத்திற்கு வேண்டிய மார்க்கத்தைத் தெரிந்து கொள்வோம் என்கிற ஆவல் இருந்தால் அதற்காக அந்த சமயத்தை வினியோகம் செய்தால் எவ்வளவு நல்லது! அதைப்படிக்கவேண்டும், உடனே ப்ரச்னை வரும். நம் எல்லோருக்கும் ('ஹிந்து') மிக கௌரவத்துக்கும் மிக ஆதரவுக்கும் பாத்திரமான பவித்ரமான க்ரந்தம் பகவத் கீதை. அப்பேர்ப்பட்ட பகவத் கீதையை உனக்கு சமயம் கிடைத்த பொழுதெல்லாம் படித்தாயானால் உனக்கு எவ்வளவு ஸ்ரேயஸ்! கீதையில் பகவான் க்ருஷ்ண பரமாத்மா எவ்வளவோ உபதேசங்களைச் சொல்லி இருக்கிறார். உபநிஷத்துக்களில் சொல்லப்பட்ட விஷயங்கள் அவ்வளவையும் சுருக்கமாக பகவான் க்ருஷ்ண பரமாத்மா சொல்லி இருக்கிறார்.

அதுதான் பகவத் கீதையின் பெருமை. உபநிஷத்துகளெல்லாம் பார்த்துப் புரிந்து கொள்ளக்கூடிய சக்தி நமக்கு இல்லை. ஆனால் அதுவே பகவத் கீதையைப் பார்த்தால், படித்தால் நாம் மிக அழகாகப் புரிந்து கொள்ளலாம். சாஸ்திரத்தின் ரகஸ்யம் என்ன? மனிதனுடைய

வாழ்க்கைக்கு லக்ஷ்யம் என்ன? நாம் இருக்க வேண்டியது எப்படி? ஆத்மா என்றால் என்ன? இந்த கேள்விகளுக்கு நாம் பகவத் கீதையில் அழகான ஜவாபுக்களைப் பார்க்க முடியும். ஆகையினாலேயே ஆதி சங்கரர் சொன்னார் “உனக்கு சமயம் கிடைத்த பொழுதெல்லாம் பகவத் கீதை மாதிரி பவித்ரமான க்ரந்தங்களை படித்து அந்த சமயத்தை போக்க வேண்டும்.”

மனிதனுடைய ஜீவிதத்தில் மிக அமூல்யமான பொருள் சமயம் ஒன்றுதான். வேறு எந்தப் பொருளும் காணாமல் போனால் அல்லது தொலைந்து போனாலும் அதைத் திரும்ப அடைய முடியும். நம்முடைய எவ்வளவு அமூல்யமான நகையானாலும், பணமானாலும், சொத்தானாலும், எதுவானாலும் காணாமல் போய்விட்டது, அல்லது தொலைந்து போய்விட்டது என்றால் அதை ரொம்ப முயற்சி பண்ணினால் சம்பாதிக்க முடியும். ஆனால் சமயம் என்பதை மட்டும் சம்பாதிக்க முடியுமா? ஒருவனுக்கு பகவான் நூறுவருஷம் ஆயுள் கொடுத்திருந்தாலும் அவனுடைய ஆயுளில் ஒருநாள் போய்விட்டது என்று சொன்னால் இனி எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் அந்த ஒரு நாளை சம்பாதிக்க முடியுமா? இனி அவனுடைய ஆயுளில் 99 வருஷம் 11 மாசம் 29 நாட்கள் தான். அந்த 30 வது நாள் போய்விட்டது. அப்படி நம்முடைய ஜீவனத்தில் சமயம் என்பது அமூல்யமானது, துர்லபமானது. அந்த சமயத்தை வீணாக்கிக் கொண்டு இருக்கிறோமே! இது நமக்கு நியாயமா?

மனிதன் ரொம்ப விவேகி. “எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது? நாம் எப்படி இருக்க வேண்டும்”? இந்த மாதிரி விஷயங்களை ரொம்ப யோசித்துத் தீர்மானம் செய்யக் கூடிய சக்தி உள்ளவன் மனிதன். அதனால் தான் அவனை 'விவேகி' என்று சொல்வோம். விவேகியான நீ உன்னுடைய சமயத்தை வ்யர்த்தமான விஷயங்களில் போக்கினால் அது நியாயமல்ல. பின்பு என்ன செய்ய வேண்டும் என்றால் அந்த பகவத் கீதை முதலான பவித்ரமான க்ரந்தங்களைப் படிப்பதில் உன் சமயத்தைக் கழிக்க வேண்டும். அதேபோல் பகவானுடைய பவித்ரமான நாமத்தை ஜபிப்பதில் உன் சமயத்தைப் போக்க வேண்டும். பகவானுடைய நாமத்தை சொல்லவேண்டும் என்று சொன்னால் அதற்கு நாம் அதிகமான கஷ்டப் பட வேண்டியது இல்லை. பணம் செலவும் ஒன்று இல்லை. ரொம்ப ஸ்ரமப்படவேண்டும் என்றும் இல்லை. உட்கார்ந்த இடத்திலேயே பகவானுடைய நாமத்தை சொல்லலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக