தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 31 ஜூலை, 2013

"பழையாறை"


கி.பி. 830ல் பிற்கால சோழ பேரரசிற்கு வித்திட்டு வளர்த்த மாமன்னன் விசயலாய சோழன் உருவாக்கிய தலைநகர் தான் இந்த "பழையாறை" மாநகரம். சோழ மாமன்னர்கள் சிறு வயதினில் தவழ்ந்து விளையாடி, இளவரசுப் பட்டங்களை சுமந்து, ஆயகலை 64 கையும் கற்று, முடிசூடி பாராண்டு, இறுதிக்காலங்களில் ஓய்வெய்தி, விண்ணுகம் சென்ற அத்தனையும் கண்டது இம்மாநகரமே. கட்டிட கலைநுட்பம், சிற்பக்கலை நுணுக்கம், ஓவியக்கலை வண்ணமும், விஞ்சிய தெய்வத்தன்மையும் சிறப்புடன் அமையப்பெற்று இராசகம்பீர மிடுக்குடன் நிமிர்ந்து நின்ற மாநகரமும் பழையாறை என்பது சான்றோர் சாற்றிய வரலாறு.

"தேரின் மேவிய செழுமணி வீதிகள் சிறந்து
பாரில் நீடிய பெருமைசேர் பதி பழையாறை"
-சேக்கிழார்.

இந்த இடத்தை நெருங்கும் போதே மனதிற்குள் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. தஞ்சை கடந்து, தமிழகம் கடந்து, கடல் கடந்து, கடாரம் வரை சென்று புலிக்கொடியை நாட்டிய சோழ வல்லரசின் அன்றைய தலைநகர்! உலக வரலாற்றில் இதுவரை எந்த அரசும் செய்திடாத நீண்ட நெடிய காலமான தொடர்ந்து 430 ஆண்டு கால ஆட்சி! அப்படிப்பட்ட ஊரில் ஒரு கோயிலை கண்டு ஆச்சர்யம் கொண்டேன்.

சோழர்களின் சிற்பக் கலை உச்சத்தை எட்டிய கோயில் என்று சொல்லகூடிய யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான தாராசுரத்தில் உள்ள "ஐராவதேஸ்வரர் கோயில்", பழையாறையில் உள்ள "சோமநாத சுவாமி கோயிலின் மாதிரி தான் என்பதே உள்ளே நுழைந்த பின் தான் தெரியவந்தது, விஜயலாய சோழனின் மகன் " ஆதித்ய சோழனால்" (871-907 CE) கட்டப்பட்டது தான் இந்த "சோமநாத சுவாமி கோயில்".அவருக்கு பின் வந்த அரசர்கள் இந்த கோயிலை திருப்பணி செய்து மிக பிரமாண்டமான கோயிலாக மாற்றியுள்ளனர்.

தன் மூதாதையர்கள் கட்டிய கோயிலை அப்படியே மையமாக வைத்து அதை இன்னும் சிறப்பாக அதில் எங்கு பார்த்தாலும் சிற்பங்களை நிறைத்து கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் கட்டியது தான் இந்த "தாராசுரம்".ராஜ ராஜ சோழன் இங்குள்ள "கைலாசநாதரை" தான் தினமும் வந்து வழிபட்டதாக தெரியவருகின்றது. இப்படிப்பட்ட சிறப்புக்கள் மிக்க இந்த கோயிலைப் பற்றி யாருக்கும் தெரியாமல் இருப்பது வேதனையான விசயம்.கவனிப்பாரற்று செடி கொடிகள் முளைத்து இடிந்து போய் கிடந்த இந்த கோயிலை தற்போது அரசு திருப்பணி செய்து வருகின்றது.கும்பகோணம் செல்லும் போது இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த கோயிலுக்கு மறவாமல் செல்லுங்கள் நண்பர்களே.


நன்றி : சசிதரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக