இந்தியாவின் முதலாவது அணுவலு ஏவுகணைச் செலுத்தி நீர்மூழ்கிக் கப்பல்
இந்தியாவின் முதலாவது அணுவலுவால் இயங்கும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளைச் செலுத்தக் கூடிய நீர் மூழ்கிக் கப்பல் வெள்ளோட்டம் விடப்படவுள்ளது. இது முழுக்க முழுக்க ஒரு உள்ளூர்த் தாயரிப்பு என இந்தியா தெரிவித்துள்ளது.
INS Arihant எனப்படும் நீர்மூழ்கிக் கப்பலின் முக்கிய அம்சங்கள்:
1. உற்பத்திச் செலவு 15,000கோடி இந்திய ரூபா.
2. ஏவுகணைகள்: அணுக்குண்டு எடுத்துச் செல்லக்கூடிய 12 ஏவுகணைகள்.
3. நீளம்: 100மீட்டர்
4. அகலம்: 11மீட்டர்
5. படையினர்: 95
6 வேகம்: 24நொட்ஸ்(மணிக்கு 44கிமீ)
7. வலு: 80MW(மெகா வட்)
இந்தியாவின் INS Arihant எனப்படும் நீர்மூழ்கிக் கப்பலிற்கு பதனிடப்பட்ட யூரேனியத்தை கொண்டு மென்னீர் அணு உலை மூலமாக அணுவலு வழங்கப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பத்திற்கு இரசியா உதவி வழங்கியுள்ளது. இந்த வகையான நீர்மூழ்கிக் கப்பல்கள் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், இரசியா, சீனா ஆகிய நாடுகளிடம் மட்டுமே இருக்கின்றது. அரிஹந்த் என்பது எதிரிகளை அழிப்பவன் எனப் பொருள்படும்.
அணுவலுவில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை இந்திரா காந்தி 1970இல் ஆரம்பித்து வைத்தார். ஆனால் அந்தத் திட்டம் முப்பது ஆண்டுகள் கிடப்பில் கிடந்தது. பின்னர் 2007-ம் ஆண்டு இந்தத்திட்டத்திற்கு புத்துயிர் கொடுக்கப்பட்டது. 2009 ஜூலை 26-ம் திகதி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தேங்காய் உடைத்து நீர்மூழ்கிக்கப்பல் தயாரிப்புப் பணிகளை ஆரம்பித்து வைத்தார். சென்னையில் உள்ள கல்பாக்கம் அணு உலையில் இருந்து INS Arihantஇன் அணுவலுவிற்கு தேவையான உள்ளீடுகள் வழங்கப்படும்.
விசாகப்பட்டினத்தில் உருவாக்கப்பட்ட INS Arihant நீர்மூழ்கிக் கப்பல் தற்போது பலதடவை துறைமுக ஒத்திகைகள் செய்துள்ளது. கடற்கால நிலை ஆகஸ்ட் நடுப்பகுதியில் வாய்ப்பாக வந்தவுடன் அது கடலில் ஓட விடப்பட்டு அதிலிருந்து ஏவுகணைகள் செலுத்தும் சோதனைகள் நடத்தப்படும். ஏற்கனவே இந்தியா நீரின் கீழிருந்து ஏவப்படும் 10கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளைச் சோதனை செய்துள்ளது. அரிஹாந்தில் பொருத்தப்படும் ஏவுகணைகள் 3500கிமீ தூரம் பாயக்கூடியது. எல்லாம் சரியாக நடந்தால் 2013இறுதியில் INS Arihant முழுமையாகச் சேவையில் ஈடுபடும்.
அரிஹாந்திற்கு தேவையான சிறிய அளவிலான அணுவலு உற்பத்தி முறைமையை பாபா அணு ஆய்வு மையம் உருவாக்கிக் கொடுத்தது. மிகவும் நன்றாகப் பதப்படுத்தப்பட்ட யூரேனியம் இதில் பாவிக்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக