தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 14 ஜூலை, 2013

வில்லா, வில்லங்கமா?


வில்லா, வில்லங்கமா?

பாரத ஞானபூமியின் இரு பெரும் அடையாளங்களாக நமது இரண்டு இதிகாசங்களான ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் பெருமிதத்துடன் கூறிக்கொள்ளலாம். தனி மனித ஒழுக்கம் தொடங்கி, வாழ்வியலின் இறுதி லட்சியம்வரை அலசப்பட்டு, நல்லன-அல்லன பிரித்துப் பின் பகுத்துக் காட்டப்பட்டு, அதற்குப் பிறகு வாழ்க்கைப் பாதையின் திசையைத் துல்லியமாக எடுத்துக் காட்டும் மகோன்னதமான அறநூல்கள் அவை. இந்த இரண்டு பெரிய இதிகாசங்களின் ஆதார ஸ்ருதியாக விளங்குவன, ராமாயண ‘சிவதனுசு’ என்ற வில்லும் மகாபாரத ‘காண்டீபம்’ என்ற வில்லும். எனினும் ராமாயண ராமபிரானை வில்வீரனாக முன்னிலைப்படுத்தி அவன் வாழ்வு அமைக்கப்படவில்லை. ராமனது அவதார நோக்கம் ‘வில்’லிலிருந்து புறப்படவில்லை.

‘வில்’லைச் சுற்றியும் அமையவில்லை. ஆனால், மிதிலை மன்னனின் ராஜசபையில் சிவதனுசை எடுத்து, வளைத்து, நாணேற்றும் முயற்சியில் முறித்ததால், சீதாபிராட்டியின் வளைக்கரம் பற்றினான், பின்னர் மனையாளுடன் காடேறினான். ராவணனால் சீதை கடத்தப்பட்டாள். பின் தேடல் வேட்டை. கவர்ந்து சென்ற ராவணனிடமிருந்து சீதையை மீட்க இலங்கையுடன் போர். இடையில் வாலி வதம். அனுமனின் தோழமை, விபீஷணனுடன் நட்பு... என வாழ்க்கைப் பாதை நீள்கிறது. யோசித்துப் பார்த்தால், சிவதனுசுவிலிருந்துதான் எல்லாமே ஆரம்பமாவதுபோல் ஒரு பிரமை நம்முன் எழும்.

மகாபாரதத்தில் ‘வில்’ ஏற்கும் பங்கு சற்று அதிகம். ஓரளவு முக்கியமானதும் கூட. வில் வித்தை பயிற்சிக்கூடத்திலிருந்தே, மகாபாரதத்தில் ‘வில்’ நம் கவனத்தைக் கவருகிறது. அந்தக்கால போர் முறையில் ‘வில்’ மட்டுமே முறையான, சரியான போர்க் கருவி என்ற தோற்றத்தை நம்முன் ஏற்படுத்துகிறது மகாபாரதம். அபாரமான திறமை கொண்ட நல்லாசிரியர் துரோணர். அற்புதமான வில் விற்பன்னர்களை உருவாக்கக்கூடிய ஆளுமை கொண்ட ஆசிரியப் பெருமகன். ஆனால், சத்திரியர்களுக்கு மட்டுமே ஆசானாக இருப்பது என்று பிடிவாதம் கொண்ட இந்த அந்தணர், அர்ஜுனன் விஷயத்தில் அதீத அக்கறையும் ஈடுபாடும் காட்டியவர்.

கௌரவர்களின் வாரிசுகளில் ஒருவரான துரியோதனனை மாணவனாக அனுமதித்த போதிலும் அவன் விஷயத்தில் அவருடைய நேர்மை, திறமை, ஆளுமை என்பதெல்லாம் சரிநிகர் சமானமாக இருந்ததாகச் சொல்ல முடியாது. துரோணரிடம் வில் வித்தை பயில ஆர்வமுற்று அணுகிய வேடர் குல இளைஞன் ஏகலைவனை மாணவனாக ஏற்க மறுத்துவிட்டார். அவருடைய சிலை ஒன்றை நிர்மாணித்து, அதையே குருநாதராக நினைத்து வணங்கி, சுயமுயற்சியில் சிறந்த வில் வீரனாக உருவெடுத்தான் ஏகலைவன். ஒருநாள் வில் பயிற்சிக்கூடத்திற்கு வெளியே நாய் ஒன்று குறைத்து அமைதியைக் கெடுத்துக் கொண்டிருந்தது. இந்தச் சத்தம் பெரிய அவஸ்தையாக இருந்தது மாணவர்களுக்கு. சிறிய இடைவெளிக்குப் பின் சத்தம் நின்று விட்டது.

வெளியே வந்து எட்டிப் பார்த்தார் துரோணாச்சாரியார். நாய் நின்று கொண்டிருந்தது. நாயின் வாய் ஒரு அம்பினால் தைக்கப்பட்டிருந்தது. பக்கத்தில் ஏகலைவனும் நின்று கொண்டிருந்தான். நாயின் வாயை தைக்கக்கூடிய வகையில் வில்லில் நாணேற்றி அம்பு ஏய்தவன் ஏகலைவன் என்பதை அறிந்து, வெளிப்படையாகச் சொல்ல இயலாத காரணத்தினால், ஏகலைவனின் வில்லாற்றலை முடக்கி தடுத்து, கெடுத்தும் விடுகிறார், துரோணாச்சாரியார். ஏகலைவனிடம் திறமையான அம்பு எய்யும் ஆற்றலுக்கு ஆசான் யார் என துரோணர் கேட்டபோது, அவருடைய சிலையைக் காட்டினான் ஏகலைவன். துரோணாச்சாரியாருக்கு குழப்பம். ஒன்றும் புரியவில்லை. குருஸ்தானம் தந்துவிட்டானல்லவா ஏகலைவன்!

தட்சணையாகக் கேட்டார் கட்டைவிரலை. தந்து விட்டான் சீடனான ஏகலைவன். பொறாமையில் வெந்த அர்ஜுனனும் துரியோதனனும் நிம்மதியாகச் சுவாசிக்க ஆரம்பித்தனர். அதற்குப் பின்னர் இந்த ‘வில்’ என்பது பல பிரச்னைகளுக்குச் சாமரம் வீசிக் கொண்டேயிருக்கும் வகையில் மகாபாரதத்தின் கதைப் போக்கு நம்மை இட்டுச் செல்லும். துரோணரிடம் வில்வித்தை பயின்று, ஆசான் நிலைக்கு உயர்ந்தவர் பரசுராமர். சத்திரியர்களின் பரம விரோதி. இவரிடம் வில்வித்தை பயில வந்தான் கர்ணன். சத்திரியன் என்ற வர்ண முத்திரை கிடைக்கப் பெறாத துர்ப்பாக்கியவான் கர்ணன். இதன் காரணமாகவே, துரோணரால் மாணவ அங்கீகாரம் பெறாமல் நிராகரிக்கப்பட்ட நிலையில், படகோட்டியின் மகன் என்ற உண்மைச் சாதிச் சான்றிதழுடன் பரசுராமரின் வில்வித்தை பயிற்சிக் கூட்டத்தில் சேர்ந்தான்.

குருநாதர் பரசுராமருக்குச் சேவை செய்தபோது, கருவண்டு ஒன்று கர்ணனின் தொடையைத் தோண்டிற்று, ரத்தம் கசிந்தது. வலியை அவன் மனதிற்குள் பொறுத்துக் கொண்டான். ஆனால், ரத்தக் கசிவைப் பார்த்துவிட்ட பரசுராமர் வலியைப் பொறுத்துக் கொள்ளும் சிறப்பான சகிப்புத்தன்மை சத்திரியர்களுக்கு மட்டுமே உரியது என்பதை அறிந்தவர். எனவே, கர்ணன் ஒரு சத்திரியன்தான், தன்னிடம் உண்மையை மறைத்து வித்தை கற்றுக் கொண்டு விட்டான் என்று கடிந்து கொண்டதுடன், சபித்தும் அனுப்பிவிட்டார் கர்ணனை. இந்த‘வில்’லின் பங்கு குருக்ஷேத்திரப் போரில் கணிசமான அளவு கூடுகிறது. ஆசாரியார்களுக்கும் சொந்த பந்தங்களுக்கும் எதிராகப் போரிட மாட்டேன் என்று சொல்லி ‘வில்’லைக் கீழே வைத்துவிடுகிறான் அர்ஜுனன்.

சூழ்ச்சியால், தந்திரத்தால் கிருஷ்ணர் அநேக கௌரவ வீரர்களை வில்லைத் தரையில் வைக்க வைத்து, நிராயுதபாணியாக்கி, பின் வீழ்ச்சியடைய வைத்தார்.

‘வில்’லுடன் பீமனின் கதையும் மகாபாரதப் போரில் ஆயுதமாகக் கையாளப்பட்டது. ‘கதை’ வித்தை கற்றுக் கொடுக்கும் ஆசானாக இருந்தவர் பலராமன், கிருஷ்ணரின் சகோதரர். இவர் துரோணர் மாதிரியோ, பரசுராமர் மாதிரியோ ‘வில்’லங்கமான ஆச்சாரியாரல்ல. ‘வில்’ வித்தை ஒலிம்பிக்வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது என்ற உண்மை இதிகாச சம்பவங்களையும் உண்மையாக்குகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக