தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 17 ஆகஸ்ட், 2017

ரோம பேரரசின் அதிசய தொங்கும் தோட்டம்!

பண்டைய ரோம அறிஞர்கள் மற்றும் கிரேக்க வரலாற்று ஆசிரியர்களான ஸ்ட்ராபோ, ஃபைலோ, டையோடோரஸ், சிகுலஸ் ஆகியோர் தொங்கும் தோட்டம் பற்றி பல குறிப்புகள் எழுதி உள்ளனர். தோட்டம் எப்படி, ஏன் கட்டப்பட்டது, தோட்டத்தின் அளவுகள், தண்ணீர் பாய்ச்சப்படும் முறைகள் என்று பல குறிப்புகளை எழுதி உள்ளனர்.
தொங்கும் தோட்டம் ஏன், யாரால் கட்டப்பட்டது என்பதில் ஒருமித்த கருத்து இல்லை. பாபிலோனிய வம்சத்தின் முக்கிய மன்னராக விளங்கிய இரண்டாம் நெபுகத்நேசர் (Nebuchadnezzar II) என்பவரால் கி.பி.600ம் ஆண்டு கட்டப்பட்டது என்பது ஒரு சாராரின் யூகமாகும்.
இரண்டாம் நெபுகத்நேசருடைய மனைவியான ராணி அமைடிஸ், மலை நாட்டைச் சேர்ந்தவராம். குன்று, மலை, காடுகளைக் கண்டு வளர்ந்த ராணியின் கண்களுக்கு பாபிலோனின் பரந்த வயல்வெளிகளும், வெற்றிடங்களும் மனம் கவரவில்லை. எனவே, ராணியின் மனதை குளிர்விக்கும் விதமாக, இயற்கை எழிலுடன் கூடிய அரண்மனையையும் தொங்கும் தோட்டத்தையும் உருவாக்கினாராம் நெபுகத்நேசர்.
இந்த அதிசய தோட்டம், 75 அடி உயரம் இருந்ததாம். அதாவது ஐந்து மாடி கட்டிடத்தின் உயரம். ஒவ்வொரு நாளும் அங்குள்ள செடிகளுக்கு சுமார் 8,200 காலன் தண்ணீர் ஊற்றப்பட்டதாம்.பெரிய பெரிய தூண்களை எழுப்பி, ஒவ்வொரு அடுக்கிலும் தோட்டங்கள் போடப்பட்டன. யூப்ரடீஸ் நதியிலிருந்து அடுக்குக் குழாயின் மூலம் சக்கரங்கள், சங்கிலி போன்றவற்றின் உதவியால் சிறிய வாளிகளால் தண்ணீர் இறைக்கப்பட்டன. இம்முறைக்கு ‘செயின் பம்பிங்’ என்று பெயர்.
மாளிகையின் ஒவ்வொரு அடுக்கிலும் உட்புறமாக சுவர் எழுப்பப்பட்டு, இடைப்பகுதி யில் மண் போட்டு நிரப்பப்பட்டது. குறிப்புகளின்படி, தொங்கும் தோட்டத்தின் சுவர்கள் 22 அடி தடிமனும், பத்து அடி அகல கூடங்களும் கொண்டவையாக இருந்தன. ஒவ்வொரு தளமும் நாணல்களாலும், சுட்ட செங்கல்களாலும் கட்டப்பட்டிருந்தன; ஈரத்தைத் தாங்கி நிற்கும் வகையில் அதன் அடித்தளம் ஈயத்தால் அமைக்கப்பட்டு இருந்தனவாம்.
இதில் பழ மரங்களும், செடார், பைன், புரூஸ் போன்ற மரங்களும், வண்ண மலர்ச் செடிகளும் வளர்க்கப்பட்டன. இதன் அமைப்பை வைத்துச் சொல்வதானால், இன்றைய நவீன யுகத்தின் ‘மாடிப் பூங்கா’ என்று குறிப்பிடலாம்.தொங்கும் தோட்டம் அமைந்திருந்த இடம் பற்றி பல யூகங்கள் நிலவுகின்றன. டைக்ரீஸ் நதிக்கரையில் அமைந்துள்ள ‘நினேவா’ (Ninevah) என்ற இடத்தில் அமைந்திருக்கலாம் என்பது ஒரு சாராரின் யூகமாகும். இது உண்மையென்றால், தொங்கும் தோட்டத்தை ‘சேனாசெரிப்’ என்ற மன்னர் கட்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. நினேவா நகரம் பாபிலோனிலிருந்து 300 மைல் தொலைவில் அமைந்துள்ளது.
பாபிலோனின் தொங்கும் தோட்டத்தை ‘செமிராமிசின் தோட்டம்’ என்று குறிப்பிடுவோர் சிலர். அசிரியன் பேரரசி செமிராமிஸ் என்பவரால் இது உருவாக்கப்பட்டது என்று கூறுகின்றனர். ஆனால் அதற்கு போதுமான வரலாற்றுச் சான்றுகள் இல்லை.வரலாற்றின் தந்தை என்று அழைக்கப்படும் ‘ஹெரோடோட்டஸ்’ எழுதிய தொங்கும் தோட்டத்தின் வர்ணனை மிகவும் புகழ் பெற்றதாகும்.
கி.மு. 290ல் ‘பெரோசஸ்’ என்பவர்தான் முதன்முதலாக பாபிலோன் தொங்கும் தோட்டம் பற்றி எழுதினார். நெபுகத்நேசரால் கட்டப்பட்டது என்பதற்கு கல்வெட்டு ஆதாரங்கள் எதுவும் இல்லையென்றாலும் சில புராண இதிகாச சம்பவங்கள் சாட்சிகளாக இருக்கின்றன.டயோடரஸ், தனது ‘ஸ்டேசியஸ் ஸ்நீட்டஸ்’ என்னும் நூலிலும், கியூட்டஸ் க்யூரியஸ் தனது ‘அலெக்ஸாண்டர் தி கிரேட்’ என்ற வரலாற்று நூலிலும் நெபுகத்நேசரால் தொங்கும் தோட்டம் உருவாக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளனர்.
வருங்காலத்தை முன் கூட்டியே தெரிவித்ததாகக் கூறப்படும் தீர்க்கதரிசி டேனியல், நெபுகத்நேசரின் அரண்மனையில் வேலை பார்த்திருக்கிறார். அவரது குறிப்புகளிலும் நெபுகத்நேசரால் தொங்கும் தோட்டம் கட்டப்பட்டது என்று சொல்லப்பட்டு இருக்கிறது.பூகம்பத்தினாலோ, இயற்கை சீற்றத்தினாலோ இந்த அதிசய தோட்டம் முற்றிலும் அழிந்து விட்டது. மேலும் ஒரு சாரார், மண் அரிப்பினாலோ, எதிரிகளின் படையெடுப்பினாலோ அழிந்திருக்கலாம் என்று கருதுகின்றனர். அதனுடைய சுவடுகள் கூட இப்போது கண்டுபிடிக்கப்படவில்லை.
ஜெர்மனியைச் சேர்ந்த தொல்லியல் நிபுணர் கோல்மே, சுமார் 14 ஆண்டு கால ஆராய்ச்சிக்குப் பிறகு, 1899ம் ஆண்டு பாபிலோனிய பெருஞ்சுவரின் சில பகுதிகளையும், அரண்மனையின் சில அறைகளையும் அகழ்வாராய்ச்சி மூலம் உறுதிப்படுத்தினார்.
நான்காம் நூற்றாண்டில் கிரேக்கர்கள், எகிப்து, பெர்சியா, பாபிலோன் ஆகிய நாகரிகங்களில் இருந்து ‘கண்டிப்பாக பார்க்க வேண்டிய, சிறப்பான கட்டிடக் கலை சின்னங்களை’த் தேர்ந்தெடுத்து பட்டியலிட்டனர். இதில் பாபிலோனின் தொங்கும் தோட்டமும் அடங்கும். இதுதான் உலகின் முதல் பயணக் கையேடு ஆகும். இதுவே பிற்காலத்தில் ஏழு உலக அதிசயப் பட்டியலாக உருவானது.
- Vikatan
http://news.lankasri.com/history/03/130789

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக