தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 23 ஆகஸ்ட், 2017

கலித்தொகையில் ஒரு காட்சி!

Rasiah Gnana
3 hrs
கலித்தொகையில் ஒரு காட்சி!
ஓலைக் குடிசைதான் என்றாலும் அதன் உள்ளே சேலைத் துகில் உடுத்த செந்தமிழர் நிலவொன்று. பள்ளிப் படிப்பும் பகல்வேளை வெளி உலவித் துள்ளிக் குதித்த வாழ்வெல்லாம் இழந்தங்கு புற்றுப் பாம்பாக புழுவாக புயல் அலைத்த தொற்றிப் படரவொரு தொடர்பில்லாக் கொடியாக நெற்றிப் பொட்டருகே நிழல்போடும் கூந்தலினைப் பற்றிக் கை தடவப் படுத்துக் கிடந்தாளை கண்டாள் அவள் தோழி. பாம்பின் கால் பாம்பறியும்!
அருவிக் கரையோரம் அடர்ந்த புதர் மறைவில் பருவ வளமெல்லாம் பழுதாக்கிக் கொண்டாளை காதல் வேண்டாம். கைவிட்டுப் போய்விடுவான். மாத மழை பொய்த்தால் மதிக்காது ஊர் உலகம். போதுமடி பழகியது. போகட்டும் விட்டுவிடு. என்றாள் பலகாலம். எதுவும் ஏறவில்லை.
இனியொன்றும் சொல்வதில்லை என்றிருந்த தோழி மனம் கனியொன்று கண்ணெதிரே கரையப் பொறுக்கவில்லை. தேடினாள்; அக்கனியைத் தொட்டுவிட்டுச் சென்றானை. வாடினாள் தோழிக்காய் வழியெல்லாம் நடந்தேங்கி. கூடினாள் மீது கோபம் வரவில்லை கூடிவிட்டு ஓடினான் மீதே அவள் கோபம் இப்போது.
ஆலின் கீழிருந்து அறமுரைத்த சிவனருகே கோலம் கொண்டிருந்த நீர்ச் செம்பு போலப் பல தாழம் பழமிருந்த தாழ்வான தாழை மடல் மீது அமர்ந்திருந்த நாரையைப் போல் ஆழக் கடல் அருகே அவன் இருக்கக் கண்டிட்டாள். சென்றாள் அருகே. சினந்து இதைச் சொன்னாள்.
ஆற்றுதல் என்று சொல்லப்படுவது உண்மையிலே வறியவர்களுக்கு ஒன்றைக் கொடுத்து உதவுவது தான். போற்றுதல் என்பது கூடி உறவு கொண்டவர்களை என்றைக்கும் பிரியாது இருத்தல். பண்பு என்று சொல்லப்படுவது உலக நிலைமை அறிந்து நடத்தல். அன்பு என்று சொல்லப்படுவது தன் சுற்றத்தினரைக் கோபிக்காது இருத்தல். அறிவு என்று சொல்லப்படுவது அறிவற்றவர்கள் சொல்வதை எல்லாம் பொறுத்துக் கொள்ளுதல். செறிவு என்று சொல்லப்படுவது ஒன்றைச் சொல்லிவிட்டு நான் அப்படிச் சொல்லவில்லை என்று மறுத்துப் பேசாமல் இருத்தல். மறை எனப்படுவது மறைக்கப்பட வேண்டியவற்றைப் பிறருக்குத் தெரிய விடாது காத்தல். முறை என்று சொல்லப்படுவது தீங்கு செய்தது தங்களுக்கு வேண்டியவராக இருந்தாலும் உயிரை எடுத்து விடுதல். பொறை என்று சொல்லப்படுவது எம்மை மதிக்காதவர்கள்; இடத்திலும் பகை கொள்ளாது பொறுமையோடு இருத்தல் இல்லையா?
இந்தத் தமிழ் அறங்கள் எல்லாம் உமக்கும் தெரியும். தெரிந்து கொண்டும் பால் குடித்து முடித்தவர்கள் கிண்ணத்தைக் கவிழ்த்து வைப்பதைப் போல என் தோழியை அனுபவித்து விட்டு வந்து இங்கே இருக்கிறீரே. இதெல்லாம் தருமம் இல்லாத வேலை. அவள் எவ்வளவு வேதனைப் பட்டுக்கொண்டு வீட்டிலே கிடக்கிறாள் தெரியுமா? உம்முடைய தேரைப் பூட்டிக் கொண்டு அவளிடம் வாரும். என்றாள் அந்தத் தோழி.
இந்தக் காட்சி சங்க இலக்கியங்களில் ஒன்றான கலித்தொகையிலே நலந்துவனார் இயற்றிய நெய்தல் கலி செய்யுளாக வருகின்றது.
மா மலர் முண்டகம் தில்லையோடு ஒருங்கு உடன்
கானல் அணிந்த உயர் மணல் எக்கர்மேல்
சீர் மிகு சிறப்பினோன் மரமுதல் கை சேர்த்த
நீர் மலி கரகம் போல் பழம் தூங்கு முடத் தாழைப்
பூ மலர்ந்தவை போல புள் அல்கும் துறைவ! கேள்:
ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்;
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்;
அன்பு எனப்படுவது தன் கிளை செறாஅமை
அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்;
செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை
நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை
முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வெளவல்;
பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்;
ஆங்கு அதை அறிந்தனிர் ஆயின், என் தோழி
நல் நுதல் நலன் உண்டு துறத்தல் கொண்க!
தீம் பால் உண்பவர் கொள் கலம் வரைதல்;
நின்தலை வருந்தியாள் துயரம்
சென்றனை களைமேர் பூண்க, நின் தேரே!
(கலித்தொகை – நெய்தல் கலி )
இரா.சம்பந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக