செம்பகம் குயில் வரிசையிலுள்ள பறவைகளில் பெரிய பறவை இனங்களுள் ஒன்று. ஆசியாக் கண்டத்தில் இந்தியா, இலங்கை மற்றும் தென் சீனா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் செம்பகங்கள் பரவலாகக் காணப்படுகின்றன.
செம்பகம் எமது கலாச்சாரத்துடன் தொடர்புடையது. 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தென்னிந்தியத் திரைப்படமான ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தில் “செம்பகமே செம்பகமே” எல்லோர் மனதிலும் ஒலித்து வந்த பாடலாகும்.
இப் பாடலைக் கேட்கும் போது 1987 ஆம் ஆண்டு காலத்தை நினைவூட்டுவது மட்டுமன்றி செம்பகத்தை உவமைப் படுத்திய தன்மையையும் அறிய முடியும்.
செம்பகம் செம்போத்து, செங்காகம் என்னும் பெயர்களால் அழைக்கப்படுகின்றது. சங்க இலக்கியங்களில் இப் பறவையை “செம்பூழ்” எனக் குறிப்பிடப்படுகின்றது.
முல்லை நில மக்கள் காய வைக்கும் திணையை இப் பறவைகள் மேயும் எனக் குறிப்பிடுகின்றன. இவ்வாறு முக்கியத்துவம் உடைய செம்பகப் பறவை எமது பகுதியில் எல்லோரும் அறிந்த எல்லா வீடுகளிலும் காணக்கூடிய ஒரு பறவை ஆகும்.
இதனுடைய சத்தம் சற்று வித்தியாசமானது ஆகும். இவை காடுகள், மலைகள், வயல்வெளிகள், நகர்ப்புறங்கள், தோட்டங்கள் எனப் பல்வேறு இடங்களில் வாழ்கின்றன. இவற்றில் சில உப இனங்களும் உள்ளன.
சிறு பூச்சிகள், மூட்டைகள், புழுக்கள், மயிர்க்கொட்டி போன்றவற்றை உணவாக உட்கொள்ளும் செம்பகங்கள் ஏனைய பறவைகளைப் போலல்லாது பறக்கும் தன்மை குறைந்த பறவைகளே ஆகும்.
அதாவது உணவு தேடும் போது மரங்கள் வழியே தாவித்தாவிச் சென்று அதிலுள்ள பூச்சி புழுக்களை உணவாக உட்கொள்ளும் இதனது ஒலி சற்று வித்தியாசமாக இருப்பினும் நீண்ட தூரம் வரை கேட்கக் கூடியதாக அமையும்.
செம்பகம் 48 சென்ரிமீற்றர் கொண்ட பெரிய பறவை ஆகும். இதனது தலை ஊதாவும் கறுப்பும் இணைந்த நிறமுடையது. இறகுகள் மண்ணிறமாகும்.
கண்கள் சிவப்பு நிறமுடையவை. இவற்றின் குஞ்சுகள் கருமையாகக் காணப்படுவதுடன் அவற்றின் வாலிலும் கீழ்ப்பகுதியிலும் வெண்மையான கோடுகள் காணப்படும்.
இவற்றின் நிறம், ஒலி என்பன தரைத்தோற்ற அம்சங்களுக்கு ஏற்ப வேறுபட்டுக் காணப்படும். செம்பக இறக்கையின் நிறம் அவற்றின் ஆண், பெண் என்பவற்றிற்குப் பொதுவானது. ஆயினும் பெண் பறவைகளின் இறக்கை சற்றுப் பெரிதாகக் காணப்படும்.
செம்பகம் பூச்சி, புழுக்களுடன் பாம்புகளையும், பறவைகள் அமைக்கும் கூடுகள், பழங்கள், விதைகள் என்பவற்றையும் உணவாக உட்கொள்ளும் இவை காலை வேளைகளில் தம் இறக்கைகளை மேல்நோக்கி விரித்து தனியாகவோ அல்லது சோடியாகவோ சூரிய வெயிலில் குளிர்காய்கின்றன.
இதன் இனப்பெருக்க காலம் மாசி மாதம் முதல் புரட்டாதி வரையுமாகும். தொடர்ச்சியாக 3 முதல் 4 வரையான முட்டைகளை இட்டு அடைகாக்கும். முட்டைகள் வெள்ளை நிறமுடையவை.
இங்கு செம்பகங்களில் ஆண் பறவை உணவு தேடி பெண் பறவைகளுக்குக் கொடுக்கும். ஆண் செம்பகமே கூடு கட்டும். குறிப்பாக 3 தொடக்கம் 8 நாட்கள் வரை இக் கூட்டைக் கட்ட எடுக்கும். கூடு மிகவும் ஆழமானது. இதனது முட்டை 14.8 கிராம் எடையுடையது.
இலங்கையில் குறிப்பாக தமிழர் பகுதியில் அடிக்கடி காணக்கூடிய பறவையாக இது விளங்குகின்றது.
சிங்களத்தில் அடிகுகுளா எனவும் ஆங்கிலத்தில் Greater coucal எனவும் தமிழில் செம்பகம் எனவும் அழைக்கப்படுகின்றது. இதன் விஞ்ஞானப் பெயர் Centropus Sinensis ஆகும்.
வடக்குக் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பத்தில் தேசியப் பறவையாக செம்பகம் பிரகடனப்படுத்தப்பட்டது.
கிளுவை, முருங்கை மரங்கள் கொண்ட வேலிகளிலும் கள்ளிப்புதர், தென்னந்தோப்பு, பனம் தோப்பு, வயல் மற்றும் எமது தோட்டங்களில் தாவித்தாவியும் நடந்தும் பூச்சி புழுக்களை தேடும் இவை எம்மைக் கண்டவுடனோ அல்லது எம் கால் அதிர்விலோ அல்லது பேச்சு ஒலியில் திகைத்து எழும்பி சிறிய தூரம் பறந்து அருகிலுள்ள மரங்களின் கிளைகளில் அல்லது வேலிகளில் தாவிச் செல்லும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக