சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். அமாவாசை தோறும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்களின் குடும்பம் அமைதி பெற்று, மென்மேலும் சிறந்து விளங்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது. முன்னோர்கள் இறந்த தேதி தெரியாதவர்கள் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை தினங்களில் திதி, தர்ப்பணம் கொடுப்பது உகந்தது.
மூதாதையர்கள் உயிருடன் வாழ்ந்தபோது, அவர்களை சரிவர கவனிக்காததால், அவர்கள் அடையும் துன்பங்கள் யாவும், பாவத்தின் வடிவில் கவனிக்கத் தவறியவர்களை சேர்வதாக கூறப்படுகிறது. பாவங்களில் பெரிய பாவம் பித்ருக்களின் கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பதுதான். நம்மை பெற்ற தாய், தந்தை, தாத்தா, பாட்டிகள் தான் ‘பித்ரு’க்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பித்ருக்கள் மரணம் அடைந்த பிறகு ‘பித்ரு லோகம்’ சென்றடைகின்றனர். அவர்களின் ஆன்மா சாந்தியடைய, அவர்களுக்கு மறக்காமல் தர்ப்பண காரியங்களை நிறைவேற்ற வேண்டும். இதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் சந்ததியினரை ஆசீர்வாதம் செய்வார்கள். தங்களின் சந்ததியருக்கு தேவையான பல உதவிகளை செய்வதுடன், அவர்களுக்கு வரும் கெடுதல்களை தடுத்து நிறுத்துவார்கள்.
‘ஒருவன் தனது தாய், தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல், எனக்கு செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக்கொள்வதில்லை’ என்று விஷ்ணு பகவான் கூறுவதில் இருந்தே இதன் முக்கியத்துவத்தை நாம் அறியலாம்.
பித்ரு லோகம் என்பது சூரியனுக்கு அப்பால், பல லட்சம் மைல் தொலைவில் இருப்பதாக கருடபுராணம் கூறுகிறது. பித்ருக்கள் அங்கிருந்து தங்கள் குடும்பத்தினர் நலமாகவும், வளமாகவும் வாழ அருளாசி வழங்குகின்றனர். அமாவாசை தினத்தன்று பித்ருக்களுக்கு பசியும், தாகமும் அதிகமாக இருக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவற்றை போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் மூதாதையர்களின் பசியும், தாகமும் விலகி சந்ததியரை வாழ்த்துவார்கள். அமாவாசையன்று தங்களுக்கு வழங்கப்படும் எள் தண்ணீரை பெற்றுக்கொள்வதற்காக, ஒவ்வொரு வீட்டு வாசலிலும் பித்ருக்கள் காத்து நின்று கொண்டிருப்பார்களாம்.
பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தை அமாவாசை சிறந்த நாளாகும். அன்று கடல், ஆறு, புண்ணிய நதிகள் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று இறந்த தாய், தந்தையர்களை நினைத்து திதி கொடுக்கலாம். தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், வேதாரண்யம், திருவையாறு போன்ற திருத்தலங்களும், வடமாநிலங்களில் காசி, திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களும் திதி கொடுப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது. அன்று சூரிய வழிபாடு செய்வது அவசியம். இறந்தவர்களின் நாள், தேதி தெரியாதவர்களும், வருடத்தின் 12 அமாவாசையன்றும் திதி கொடுக்க முடியாதவர்களும் தை, ஆடி, மகாளய அமாவாசை தினங்களில் திதி கொடுத்தால் ஆண்டுதோறும் திதி கொடுத்த பலனை அடையலாம்.
இந்நாளில் தீர்த்த தலங்களுக்கு சென்று எள், தண்ணீர் இறைத்து பித்ருக்களின் தாகத்தை தீர்க்கவேண்டும். இவ்வாறு செய்தால் அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி, அவர்களுக்கு முக்தி பேறு கிடைக்கும். அன்று ஏழை எளியவர்களுக்கு அன்னதானம், துணி தானம் செய்ய வேண்டும். மறைந்த தாய், தந்தை படங்களுக்கு மாலை அணிவித்து அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை படைத்து வணங்க வேண்டும். அன்று காகம் வடிவில் மூதாதையர்கள் வீட்டுக்கு வருவதாக ஐதீகம். அதனால் காகத்துக்கு உணவு அளிப்பதும் முக்கியம்.
வழிபடுவது எப்படி?
அன்று காலை ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணத்துக்கு பொருந்தாது. மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது. தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறையின் பெயர்களை அறிந்து கொள்வது அவசியம். தர்ப்பணம் செய்த பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, வடகிழக்கு திசையில் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சாத்த வேண்டும். முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்துவிளக்கு ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும். தலை வாழை இலை படையல் போட்டு வணங்க வேண்டும். கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுவிற்கு தானமாக வழங்கவேண்டும். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளை செய்யலாம்.
செய்யக்கூடாதவை
அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. தர்ப்பணம் செய்யும் போது கறுப்பு எள்ளை மற்றவர் களிடம் இருந்து கடனாக வாங்கக்கூடாது. நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது. அதேபோல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும்.
அமாவாசையின் மகிமை
பிரதிமை முதல் அமாவாசை வரை மொத்தம் 15 திதிகள் இருக்கின்றன. இதில் அமாவாசை திதி முக்கியமானது. அன்று சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணையும் நாள். மற்ற திதிகளில் ஏதாவது ஒரு கிரகம் திதி, தோஷம் அடையும். ஆனால் அமாவாசையன்று எந்தக் கிரகமும் தோஷம் அடையாது. இதனால் அமாவாசையன்று சில செயல்களை தொடங்கினால் அது வெற்றி பெறும். ராகு, கேது மற்றும் பிற கிரகங்களால் ஏற்படும் பிரச்சினைக்கு தீர்வு காண அமாவாசையன்று பரிகாரம் செய்தால் சிறப்பான பலனைத் தரும். மேலும் மூத£தையர்களின் ஆசியும் கிடைக்கும்.
காகத்துக்கு சாதம் படைப்பது ஏன்?
அமாவாசை வழிப்பாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அன்று காகத்துக்கு சாதம் வைத்து அது சாப்பிட்ட பின்னரே உணவருந்தும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. சனீஸ்வர பகவானின் வாகனமான காகம், எமலோகத்தின் வாசலில் இருப்பதாகவும், அது எமனின் தூதுவன் எனவும் கூறப்படுகிறது. காகத்துக்கு சாதம் வைத்தால் எம லோகத்தில் வாழும் நமது முன்னோர்கள் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. காகம் சாதத்தை எடுக்காவிட்டால் முன்னோர்களுக்கு ஏதோ மனக்குறை இருப்பதாக கருதுவது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
துயர் போக்கும் துளசி
பித்ருக்களுக்கு கண்கண்ட தெய்வமாக விளங்குபவர் மகாவிஷ்ணு. அவரை துளசி மாலை சாத்தி வழிபடுவது விசேஷம். அமாவாசையன்று பித்ருக்கள் வழிபாட்டின் போது, வீட்டில் முன்னோர்களின் படத்துக்கு துளசி மாலையோ, துளசி இலையோ சமர்ப்பிக்க வேண்டும். இது மகாவிஷ்ணுவை மகிழ்விக்கும். இதனால் பித்ருக்களுக்கு விஷ்ணுவின் ஆசி கிடைக்கும். அவர்கள் மகிழ்ச்சியில் தமது சந்ததியினரை வாழ்த்துவார்கள். அதன் மூலம் நமது துயர்நீங்கி வாழ்வில் சுபீட்சம் ஏற்படும்.
http://www.dailythanthi.com/News/TamilNadu/2016/02/02155324/Worship-ancestorsTai-Dark-Moon.vpf
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக