திருமணமான உடனேயே குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கிற பெண்களும், ஒருமுறை மகப்பேறு மருத்துவரை சந்தித்து, ரத்தப் பரிசோதனை, கர்ப்பப்பை சோதனை, அதில் ஏதேனும் தொற்று இருக்கிறதா என்பதற்கான சோதனைகளை செய்வது நலம்.
இதில் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது ரூபெல்லா தடுப்பூசி. ஏற்கனவே இந்தத் தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண்களுக்குப் பிரச்னையில்லை. ஒருவேளை போடாவிட்டால், கர்ப்பம் தரித்த பிறகு ரூபெல்லா பாதித்தால், தாய்க்குப் பிரச்சனை இல்லை. கர்ப்பத்தில் இருக்கிற குழந்தைக்குப் பெரிய பாதிப்பு உண்டாகும். இந்தத் தடுப்பூசி போட்டுக் கொண்டு, 1 மாதத்துக்கு கர்ப்பம் தரிக்கக் கூடாது. குழந்தை பெற்றுக்கொள்ள மிகச் சரியான வயது 20 முதல் 30 வரை. கர்ப்பத்தை தாங்கும் சக்தி, சிக்கல்கள் இல்லாத கர்ப்பமெல்லாம் அந்த வயதில்தான் சாத்தியம். 20 வயதில் திருமணம் செய்கிறவர்கள், மருத்துவரை அணுகி சர்க்கரை, ரத்த அழுத்தம், தைராய்டுக்கான சராசரி சோதனைகளை செய்து, எல்லாம் நார்மல் எனத் தெரிந்தால் குழந்தைப்பேறைத் தள்ளிப் போடலாம். 30 வயதுக்கு மேல் திருமணம் செய்பவர்களுக்கு இது பொருந்தாது.
ஏற்கனவே ஏதேனும் உடல்நலக் கோளாறு இருக்கிறதா, இன்ஃபெக்ஷன் இருக்கிறதா, மாதவிலக்குச் சுழற்சி முறையாக இருக்கிறதா, கர்ப்பப்பை மற்றும் சினைப்பையில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா, ஏதேனும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறதா என்பதற்கான பொதுப் பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். சினைப்பை மற்றும் கர்ப்பப்பையில் ஏதேனும் கட்டிகளோ, நீர்க்கட்டிகளோ இருக்கின்றனவா என்பதற்கான அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்ய வேண்டியது அவசியம்.
நீரிழிவு மற்றும் தைராய்டுக்கான ரத்தப் பரிசோதனை. கருக்குழாய்களில் பிரச்சனை இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள ஹெச்.எஸ்.ஜி. (ஹிஸ்ட்ரோசால்பினோகிராம்). கருக்குழாய்களில் ஒன்றிலோ, இரண்டிலுமோ அடைப்புகள் இருப்பதைத் தெரிந்து கொள்ளும் சோதனை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக