தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 3 ஜூன், 2014

சிவந்த சீக்கிய தேசம் !


ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் எனப்படும் ரத்தம் தெறித்த நிகழ்வின் ஆரம்ப தினம் இன்று. அரசியல்,மதம்,சுயாட்சி,பிரிவினை என்று நீண்ட கதை முழுக்க பஞ்சாபின் விடுதலைக்கு பிந்தைய வரலாற்றோடு தொடர்புடையது. இந்தியாவுக்கு விடுதலை கிடைத்த பொழுது சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் அதிகமாக இருந்த பகுதிகள் இணைந்தே இருந்தன.மத அடையாளத்தை சீக்கிய குருமார்களின் ஊழல் மற்றும் தில்லுமுல்லுக்களை ஒழிக்க எழுந்த சிரோன்மணி அகாலிதளத்தலைவர் தாரா சிங் தூக்கிப்பிடித்தார். நேரு மற்றும் காங்கிரசின் ஆட்சியை இந்துக்கள் மற்றும் பிராமணியத்தின் ஆதிக்கம் என்று சொல்லி தனி மாநிலம் கொடுங்கள் என்று முழங்கினார்கள். மத ரீதியான பிரிவினைக்கு கண்டிப்பாக நோ என்று தெளிவாக சொல்லப்படவே ,”இந்துக்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் ; அரசுப்பதவிகளில் போதிய இடமில்லை” என்பதையும் இணைத்து போராடினார்கள்.ஆனால்,அப்பொழுதைய சூழலை ஆய்ந்த பல்தேவ் ராஜ் நய்யார் எனும் சமூகவியல் அறிஞர் இந்திய ராணுவத்தில் இருபது சதவிகிதம் சீக்கியர்களே இருந்தார்கள்,மேலும் தாங்கள் இந்திய மக்கள் தொகையில் இருந்த அளவுக்கு இரு மடங்கு அதிகமாக அரசாங்கப்பதவிகளில் சீக்கியர்கள் நிறைந்து இருந்தார்கள் என்கிறார். பின்னர் என்ன காரணம் என்றால்,தொடர்ந்து தேர்தல்களில் காங்கிரஸ் அங்கே வென்று கொண்டிருந்தது.கெய்ரோன் கோலோச்சி கொண்டிருந்தார் ; வளர்ச்சி,கல்வி,விவசாயம் என்று கலக்கி எடுத்தார். எதிர்ப்பு குரல் எழுந்தால் தூக்கி உள்ளே போடுவதை சாவகசமாக செய்தார். கூடவே குடும்பத்துக்கு என்று சொத்தும் சேர்த்துக்கொண்டார். நேரு விசாரிக்க வேண்டும் அவரை என்ற வேண்டுகோள் அழுத்தி வைக்கப்பட்டதால் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் விசாரணைக்குழு ஒன்று அமைப்பதோடு அமைதி காத்தார். என்ன ஆனாலும் கெய்ரோன் மற்றும் காங்கிரஸ் அசைக்க முடியாத சக்திகளாக இருந்தார்கள்.இந்தி மட்டும் போதும் என்று பிரிக்கப்படாத பஞ்சாபில் இருந்த இந்துக்கள் சொன்னார்கள்,குருமுகி வரிவடிவம் கொண்ட பஞ்சாபியும் தேவை என்று சீக்கியர்கள் முழங்கினார்கள்,தாரா சிங்குக்கு பதிலாக பதே சிங் சிரோன்மணி அகாலிதள தலைவர் ஆகியிருந்தார்; மத ரீதியான தனி மாநில கோரிக்கையை மொழிரீதியான கோரிக்கையாக மாற்றியிருந்தார். காங்க்ரா என்கிற பகுதி மக்கள் ஹிமாச்சல பிரேதசத்தில் இணைய விரும்பினார்கள். இந்தி பேசும் மக்களுக்கு ஹரியானா,பஞ்சாபி பேசியவர்களுக்கு பஞ்சாப் மற்றும் காங்க்ரா ஹிமாசல பிரேதசம் போய் சேரட்டும் என்று 1966-ல் இந்திரா காந்தி பிரதமரானதும் பிரித்து தந்தார்.1972 இல் நடந்த சட்டமன்ற தேர்தலில் சிரோன்மணி அகாலிதளம் வென்றது. அடுத்த தேர்தலில் தோற்றதும் மீண்டும் சிக்கலை கையில் எடுத்தார்கள்.அனந்த்பூர் சாகிப் தீர்மானத்தை கொண்டு வந்தார்கள். அதில் பாதுகாப்பு,அயல்நாட்டு உறவு மற்றும் நாணயம் ஆகியவற்றை தவிர மற்ற எல்லாவற்றையும் மாநிலத்தின் கட்டுப்பாட்டில் விட்டுவிட வேண்டும் என்கிற சுயாட்சி கோருகிற தீர்மானம் எழுந்திருந்தது. கூடவே,தீர்மானத்தின் முதல் பக்கத்தில் தனி நாடு கிடைத்தாலும் பரவாயில்லை என்றொரு வரியை அமைதியாக சேர்த்திருந்தார்கள்.எமெர்ஜென்சிக்கு பிறகு மீண்டும் ஆட்சியை பெருவெற்றியோடு சிரோன்மணி அகாலிதளம் பிடித்தது. நடுவே காலிஸ்தான் கோரிக்கை வேறு மீண்டும் துளிர்த்து இருந்தது. அறுபது வருடங்களுக்கு முன்னர் மின்டோ-மார்லி முன்னர் எழுப்பப்பட்ட கோரிக்கை அது.1971-ம் ஆண்டு ஜகஜித் சிங் சௌஹான் என்பவர் காலிஸ்தான் என்கிற நாடு பஞ்சாபியர்களுக்கு உருவாக உள்ளதாக நியூ யார்க் டைம்ஸ் இதழில் விளம்பரம் கொடுத்தார். இதற்கு பாகிஸ்தான் வேறு ஆசீர்வாதம் செய்திருந்தது. ஒன்பது ஆண்டுகள் கழித்து இந்திராவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி தோல்வி என்று சொல்லிவிட்டு அவர் கிளம்பி விட்டார். அவரின் தளபதி பல்பீர் சிங் சந்து பஞ்சாபில் இருந்தவாறு அதே அறிவிப்பை வெளியிட்டார். கூடவே தனி நாணயம் மற்றும் ஸ்டாம்புகள் வெளிவந்தன. இந்திரா அரசு கண்டும்,காணமல் இருந்தது.மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் மத்தியில் ஜனதா ஆட்சி கவிழ்ந்ததும் பல்வேறு மாநிலங்களில் ஆட்சிக்கலைப்பு நிகழ்த்தி இந்திரா அரசு தேர்தல் நடத்தியது. அதற்கு அது பிந்த்ரன்வாலேவை பஞ்சாபில் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தது.குர்பச்சன் சிங் என்பவர் நிரங்காரிகள் என்கிற மதப்பிரிவை துவங்கி சீக்கிய மதத்தை சுத்தம் செய்வதாக சொல்லி இந்து மதத்தோடு இணைந்து விட வேண்டும் என்று அவர் முழங்கினார். முடியை,தாடியை மழித்து விட்டு,டர்பனை கழட்டிவிட்டு சுத்தமாக அவர் அழைக்க அதை எதிர்த்து அகண்ட கீர்த்தனி என்கிற அமைப்புன் களமிறங்கியது. அதன் தலைவர் ஃபௌஜா சிங் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் மோதலில் இறந்து போனார்கள். கோர்ட் குர்பச்சன் சிங் நிரபராதி என்று விடுவித்தது.இறந்து போன ஃபௌஜா சிங்கின் மனைவி களத்தில் குதித்தார் அவருக்கு ஆதரவாக சீக்கியர்கள் சுத்தமாக வேண்டும்,இந்தியாவில் இந்துக்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்று முழங்கிய பிந்த்ரன்வாலே களத்துக்கு வந்தார். சிரோன்மணி அகாலிதளம் கட்சியை தோற்கடிக்க வேண்டிய சூழலில் இந்திரா அவரோடு கைகோர்த்து மேடையேறினார். மூன்று தொகுதிகளில் காங்கிரசுக்கு ஆதரவாக பிந்த்ரன்வாலே பிரச்சாரம் செய்தார். தீவிரப்போக்கை கைக்கொள்ள இளைஞர்களை அழைத்தார் ; தனிப்பிரிவு நான்கள் என்பதோடு காலிஸ்தான் நோக்கியும் பயணம் நகரும் என்பதை கோடிட்டு காட்டினார்.அங்கே இருந்த பிந்த்ரான்வாலேவின் உடனிருந்தவர்கள் கொலைகள் செய்ய அஞ்சவே இல்லை. இவர் பேச்சுக்கு பின் ஏற்பட்ட கலவரத்தில் ஒரு பதினைந்து பேர் இறந்து போனார்கள் அவரின் தீவிரவாதப்போக்கை கண்டித்து எழுதிய பஞ்சாப் கேசரி ஆசிரியர் ஜக்ஜித் நாராயண் கொல்லப்பட்டார். அதற்கு காரணம் பிந்த்ரன்வாலே என்று எல்லாருக்கும் தெரியும். களம் புகுந்தது போலீஸ். அவரைக்கைது செய்யாமல் கொஞ்சம் இருங்கள் என்று ஹரியானா வரை போன போலீசுக்கு உள்துறை அமைச்சர் ஜெயில் சிங் உத்தரவு போட்டார். நானே இரண்டு வாரத்தில் சரண்டர் ஆகிறேன் என்று சொன்ன பிந்த்ரான்வாலேவை கைது செய்ய போலீஸ் போனதும் கலவரம் உண்டாகி அவரின் ஆதரவாளர்கள் தாக்கியதில் பதினோரு போலீஸ்காரர்கள் பலியானார்கள். அடுத்து ஒரு விமானம் கடத்தப்பட்டு அவர் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது ; கோர்ட் போதிய ஆதாரங்கள் இன்றி கைது செய்யப்பட்டார் என்று விடுதலை செய்தது.அதுவரை அவரை வெறுத்த சீக்கியர்கள் மத்தியில் கூட அவர் நாயகர் ஆனார். சிரோன்மணி அகாலிதள தலைவர் லோங்கோவால் பொற்கோயில் வந்து தங்கிக்கொள்ள அவருக்கு வேண்டுகோள் விடுத்தார். ஏற்கனவே சிரோன்மணி கட்சியினர் 83 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று தங்களின் சட்டசபை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்திருந்தார்கள். பிந்த்ரன்வாலேவும் கிளம்பினார். காலிஸ்தான் கோரிக்கைக்கு அமெரிக்கா,கனடா மற்றும் இங்கிலாந்தில் இருந்து நிதி குவிந்தது ஒரு புறம். எக்கச்சக்க ஆயுதங்களோடு உள்ளே காத்துக்கொண்டு இருந்தார்கள். காங்கிரஸ் கூட்டாளி பிந்த்ரன்வாலே இப்பொழுது கட்சி மாறியிருந்தார்.பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று இந்திரா முயற்சித்தார். இரண்டு நதிகளை பிரிவினையின் பொழுது இழந்து விட்டோம்,இருக்கிற மூன்று நதிகளை மற்ற இரு மாநிலங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறோம் அதெல்லாம் இனிமேல் சாத்தியமில்லை,ஹரியானா மற்றும் பஞ்சாபுக்கு பொதுவாக இருக்கும் சந்திகர் எங்களுக்கு மட்டும் வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் கொடுத்தார்கள். வன்முறையும் எகிறிக்கொண்டு இருந்தது. இந்துக்கள் மீதும்,எதிர்த்த சீக்கியர்கள் மீதும் தாக்குதல்கள் நடந்தன,பலர் கொல்லப்பட்டார்கள். பல்வேறு இடங்களில் கொள்ளை நடைபெற்றது. பேருந்தில் இருந்து இறக்கப்பட்டு அப்பாவி மக்கள் சுடப்பட்டு இறந்தார்கள் ; பயம் பஞ்சாபை பீடித்தது.“காங்கிரசின் ஆட்சி முகலாயர் ஆட்சியை போன்றது ; நாற்பது சீக்கியர்களால் பத்தாயிரம் எதிரிகளை எதிர்கொள்ள முடிந்தது என்றால் நம்மால் முடியாதா ? அமைதி என்பதே நமக்கு இங்கே சாத்தியமில்லை. தனி நாடே இலக்கு “,என்றும்,”இந்துக்கள் உங்களை தேடிக்கொண்டு வந்தால் அவர்களின் தலைகளை டிவி ஆண்டெனாக்களை கொண்டு நசுக்குங்கள் !” என்றெல்லாம் பேசி பேசி வன்முறையை தூண்டிவிட்டார். இந்திரா எப்படியும் அமைதியாக முடித்துக்கொள்ளலாம் என்று இறுதிவரை பேச்சுவார்த்தைகள் நடத்திப்பார்த்தார். எதுவும் சாத்தியமில்லை என்று சொல்வது போல டி.ஐ.ஜி கொல்லப்பட்டார். ஜனாதிபதி பொற்கோயிலுக்கு போன பொழுது அவர் காதை உரசிக்கொண்டு குண்டு சென்றது.ராணுவம் நுழையலாம் என்று சிக்னல் தரப்பட்டது. ஜூன் மூன்றில் பொற்கோயில் சுற்றி வளைக்கப்படுவதற்கு முன்னர் லோங்கோவால் நிலவரி,தண்ணீர் மற்றும் மின்சார் பில்கள் கட்ட மாட்டோம்,மாநிலத்தை விட்டு தானியங்களை அனுப்பமாட்டோம் என்றெல்லாம் முழங்கினார். ஒரே நாளில் வேலை முடிந்துவிடும் என்று மிஷின் கன்களோடு போனவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கிடைத்த இடைவெளியில் எல்லாம் துப்பாக்கிகள் நீட்டிக்கொண்டு இருந்தன. மறைவிடங்கள்,சுட்டிவிட்டு தப்பிக்கும் வழிகள் என்று அனைத்தும் தெளிவாக இருந்தது. கூடவே குறுகிய இடைவெளிகளில் புகுந்து தாக்கிவிட்டு தண்ணி காட்டிகொண்டு இருந்தார்கள். எறிகுண்டுகள் வேறு பயமுறுத்தின. பஞ்சாபியான பிரார் வழிகாட்டிக்கொண்டு இருந்தார் எந்த சுபேக் சிங்குடன் இணைந்து வங்கதேச விடுதலையை சாதித்தாரோ அவர் எதிர் முகாமில் தலைமை தாங்கிக்கொண்டு இருந்தார்.துப்பாக்கிகள் போதாது என்று வெகு செக்கிரம் புரிந்தது. டேங்குகள் தேவை என்று டெல்லிக்கு சொல்லப்பட்டது. பதிமூன்று டேங்குகள் வந்து சேர்ந்தன. அஅவர்களும் துப்பாக்கி சூட்டில் இறந்து போனார்கள். இறுதியில் நான்கு அதிகாரிகள்,79 வீரர்கள் மற்றும் 492 தீவிரவாதிகள் இறந்து போனதாக அதிகாரப்பூர்வ மதிப்பீடுகள் சொல்லின. ஆனால் சில ஆயிரங்களில் இருக்கும் இறப்புகள் என்பது பொதுவான கருத்து..கூடவே,ஹர்மீந்தர் சாஹிப் மற்றும் அகால் தக்த் என்கிற சீக்கியர்களின் புனிதமான பீடங்கள் சேதப்படுத்தப்பட்டு அவர்களின் புனித ஆலயமான பொற்கோயில் ரத்த நிலமாக மாறி ஆறாவடுவை உண்டாக்கி இருந்தது. அரசியல் பகடையில் முன்னேறி மேலே போன பிந்த்ரன்வாலே கூடவே மாணவர் அமைப்பின் தலைவர் அம்ரீக் சிங் இறந்து கிடந்தார்கள். சுபேக் சிங் வாக்கி டாக்கியோடு இறந்து கிடந்தார். ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் முடிந்தது. அப்பொழுதைக்கு சிக்கல் ஓய்ந்தது போல இருந்தாலும் அமைதி திரும்ப பல ஆண்டுகள் தேவைப்பட்டது. நடுவில் பின்விளைவுகளாக இந்திரா காந்தியின் படுகொலை,சீக்கியர்கள் மீதான கலவரங்கள்,படுகொலைகள் ஆகியன காத்திருந்தன. அரசியல் ஆடுகளத்தில் உயிர்கள் எத்தனை மலிவாக போயின என்பதன் நிகழ்கால உதாரணம் பஞ்சாப் சிக்கல்.
நன்றி - பூ.கொ.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக