இன்று காலையில் பேப்பரை விரித்தால் ‘மதக்கலவரத்தில் 100 பேர் பலி‘, ஜாதி மோதலில் 50 பேர் பலி..கலவரம் என்றுதான் செய்திகள் முகத்தில் அறைகின்றது. ஆனால் நமது பக்கத்து மாநிலமான் கேரளாவில் ஒரு குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளாக ஜாதி, மதங்களைப்புறக்கணித்து வெற்றி நடை போடுகின்றனர்.
கொல்லம் மாவட்டத்தில் உள்ள புனலூரில் அந்த குடும்பத்தை சில வருடங்களுக்கு முன்பு சந்தித்தேன்.
நான் என்ன பெரிய சாதனை செய்திட்டேனு என்னை பார்க்க வந்திருக்கீங்க என சங்கோஜப்பட்ட பஸ்லுதீன்,‘மனுசனா வாழனும்னு நெனைச்சேன். அதன்படி நடந்திட்டிருக்கேன்..!’ என்றவர் தொடர்ந்து,‘‘1973ல் நான் வாட்ட சாட்டமா இருப்பேன். அப்பா சிங்கப்பூர்லே வேலைபார்த்தப்பவே இறந்துட்டாரு. ஊர்ல நானும் என்னோட சகோதரர்களும் மட்டும்தான். அப்ப எனக்கு கான்டிராக்ட் ஒர்க் ஊர்ல நடத்திகிட்டிருந்தேன். நான் முஸ்லிம் சமுதாயத்துல பிறந்ததினால அஞ்சு நேர தொழுகை எல்லாம் முறையா செய்திட்டிருந்தேன். பதினைஞ்சு வயசுக்கப்புறம் சில காரணங்களால கடவுள் நம்பிக்கை படிப்படியா குறைஞ்சுது. இந்த நிலையில் ஆக்னசைக்காதலிச்சேன். அவங்க கிறிஸ்டியன்.. . அப்ப எல்லாம் ஜாதிக்கட்டுப்பாடு அதிகம்னு உங்களுக்கு நல்லா தெரியும். என்மீது ரொம்ப மரியாதை வைச்சிருந்தா ஆக்னஸ். நாங்க காதலிக்கிறப்ப எங்களுக்கு மதம் ஒண்ணும் பெருசா தெரியலை. எப்படியாவது நாங்க கல்யாணம் செஞ்சுக்கணும்னு முடிவு செஞ்சோம்.இது தெரிஞ்சதும் அவங்க வீட்டுல அவளை சிறை வைச்சிட்டாங்க. உடனே எர்ணாகுளம் கைகோர்ட்டுல ஹேபியஸ் கார்ப்பஸ் மனு போட்டேன். உடனே ஆக்னசை கோர்ட்ல புரடீஸ் பண்ணினாங்க. அங்கே வைச்சு ஆக்னஸ்கிட்டே நீதிபதிகேட்டாரு. யார் கூட போறீங்கன்னு. ஆக்னஸ் உறுதியா சொன்னா எங்கூட வர்றேன்னு.. அப்புறம் என்ன அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன். கஷ்டப்பட்டு அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தா என்னோட சமுதாயத்தை சேர்ந்த சேர்ந்தவங்க என்னை எதிர்த்தாங்க. அவளை கல்யாணம் பண்ணனும்னா முஸ்லிம் மதத்துல ஆக்னசை சேர்த்தபின்னாடிதான் கல்யாணம் பண்ணமுடியும்னு சொல்லிட்டாங்க. நான் அவகிட்டே சொல்லிப்பார்க்கிறேன்னு சமாதானமா ஜமாத்துல சொன்னேன். ஆனா அன்னிக்கே ஜமாத் காரங்க என் கூட ஜமாத்துல என்னை ஊர்விலக்கம் செஞ்சுட்டதா பிட் நோட்டீஸ் போட்டாங்க். இது எனக்கு ரொம்ப கோபத்தை உண்டாக்கிச்சு. அட போங்கடா நான் பதிலுக்கு பிட் நோட்டீஸ் போட்டேன். இதனால என்மீது கோபப்பட்டவர்கள் என்வீட்டு மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தினர். என்னை ஜமாத்தில் இருந்து விலக்கி விட்டதாக அறிவித்தனர். அதன்பின் நாங்கள் வெளியே செல்லும்போது குடையில் ஒரு கத்தியை மறைத்து வைத்துத்தான் செல்வேன்.ஆனால் என்னிடம் யாரும் மோத வரவில்லை. எனது உறவினர்கள் தான் அன்று என்னிடம் பேசுவது இல்லையே தவிர ஊர்மக்கள் எங்களிடம் மிகுந்த மரியாதை செலுத்தினர். ஜாதி, மதத்தால் எங்களை விரோதிகளாக நினைத்த இந்த சமுதாயத்துக்கு மேல எங்களுக்கு கோபம்னா அப்படி ஒரு கோபம். இதுக்கு எதாவது செய்யணும்னு முடிவு செஞ்சோம். நம்மை வேதனைப்படுத்தின ஜாதியும் மதமும் இனி எங்களுக்கு தேவையில்லைனு முடிவு செஞ்சோம். ஜாதி மதம் தொடர்பான எந்த சலுகைகளையும் அரசாங்கத்திடம் கேட்கக்கூடாதுனு தீர்மானிச்சோம். எனக்கு இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்துல அதிகாரியா வேலை கிடைச்சது. எங்க வாழ்க்கை சந்தோஷமா துவங்கிச்சு. புதுசா கட்டின வீட்டுக்கு Casteless Bhavan னு பெயர் வைத்தோம். முதல் குழந்தைக்கு காஸ்ட்லெஸ்(Casteless ஜாதியில்லாதவர்) என பெயரிட்டோம். அடுத்த குழந்தைக்கு ஜூனியர் காஸ்ட்லெஸ்(Junior Castles) என்றும் மூன்றாவதாக பிறந்த மகளுக்கு ஷைன் காஸ்ட்லெஸ் (Shine Castelss) என்றும் பெயரிட்டோம்.!’‘ என துவக்க கால கதைகளை ஆர்வமுடன் கூறினார் பஸ்லுதீன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக