தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

ஆடி அமாவாசை


ஒரு ஆண்டை, உத்ராயணம், தட்சிணாயணம் என பிரிப்பர். "உத்ரம் என்றால் வடக்கு. சூரியன் வடக்கு நோக்கி பயணிக்கும் காலம் இது. "தட்சிணம் என்றால் தெற்கு. தட்சிணாமூர்த்தி தெற்கு பார்த்து காட்சி தருகிறார். சூரியன் தெற்கு நோக்கி பயணிக்கும் காலம் இது. உத்ராயணமும், தட்சிணாயணமும் இணைந்த 12 மாத காலம், தேவர்களுக்கு ஒருநாள். இதில், உத்ராயணம் பகல் பொழுது; தட்சிணாயணம் இரவுப்பொழுது. வடக்கு நோக்கி சூரியன் பயணிக்கும் உத்ராயண காலம் தை மாதம் துவங்கும். இந்த மாதத்தில் தேவர்கள் விழித்துக் கொள்வர் என்பது ஐதீகம். நாம் கொடுக்கும் யாக பலனை (அவிர்பாகம்) ஏற்று, நமக்கு பாதுகாப்பு தருவர். இக்காலத்தில் வரும் தை அமாவாசை முக்கியமானது. தட்சிணாயண காலமான ஆடி முதல் மார்கழி வரை தேவர்கள் உறங்கும் வேளை. தேவர்கள் உறங்குவதால், நம் முன்னோர் பிதுர்லோகத்தில் இருந்து இறங்கி வந்து நம்மைப் பாதுகாப்பர். அவர்களை வரவேற்கும் நன்னாளே ஆடி அமாவாசை. நன்றி உணர்வுள்ள ஒவ்வொரு வரும், இந்நாளில் தர்ப்பணம் செய்து, முன்னோரை வரவேற்க வேண்டும். ஏனெனில், அவர்கள் பூமியில் வாழ்ந்த காலத்தில், நமக்காக செய்த தியாகங்கள் பல. தாயும், தந்தையும் காலமாகி விட்டால் நம் மனம் வேதனைப்படுகிறது. அவர்கள் நமக்காக பட்ட கஷ்டங்களை எண்ணி கண்ணீர் வடிக்கின்றோம். படிப்பு, திருமணம், பிற்கால வாழ்வுக்கான சொத்து சேர்த்தல் என, ஒவ்வொரு நிமிடத்தையும் அவர்கள் நமக்காகவே செலவழித்தனர். இதே போல, தாத்தா, பாட்டி நம் சிறுவயதில், அருகில் படுக்க வைத்து, குட்டி குட்டி கதைகளைச் சொல்லி நம் அறிவு மேம்பாட்டுக்கு உதவி, நம் மனதில் ஆன்மிக விதையை விதைத்தனர். அது மட்டுமல்ல... நம் முப்பாட்டனார் மற்றும் பாட்டி காலத்து உலக நடப்பைச் சொல்லி, அந்த காலத்தில் நாம் வாழ்ந்திருக்க மாட்டோமா என, ஏங்க வைத்தனர். அக்கால சமுதாய அமைப்பு பற்றி நமக்கு புரிய வைத்தனர். இறந்து போன நம் முன்னோர்களை இந்நாளில் நினைவு கொள்வதன் மூலம், அவர்கள் நம்மோடு வாழ்ந்த அந்த இனிய நாட்களை அசைபோட வைக்கின்றனர். இவர்களுக்காக நாம் செய்யப்போவது... ஒரு பிடி எள், தண்ணீர் எடுத்து தர்ப்பணம் செய்தால் போதும். அவர்கள் உள்ளம் குளிர்ந்து போவர். அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் நம் வசம் இருந்தால், அவற்றை அந்நாளில் எடுத்து பூஜை செய்யலாம். அவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளைப் படைத்து, அவர்களை ஒத்த வயதினருக்கு கொடுத்தால், அவர்களே நேரில் பெற்றுச் செல்வதாக ஐதீகம். ராமபிரான் வழிபட்ட பிதுர்லிங்கங் களைக் கொண்ட முக்தீஸ்வரர் கோவில், திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 20 கி.மீ., தூரத்திலுள்ள பூந்தோட்டம் கிராமத்தில் இருந்து பிரியும் சாலையில் உள்ளது. இங்குள்ள அரசலாற்றில் தர்ப்பணம் செய்வது மிகவும் <சிறந்தது. அமாவாசை மட்டுமின்றி, பிற நாட்களிலும் இங்கு தர்ப்பணம் செய்யலாம். ஆடி அமாவாசை நன்னாளை, ஒரு நன்றி கூறும் விழாவாக எண்ணி, நம் முன்னோருக்கு அஞ்சலி செய்வோம்

அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம் மற்றும் இந்த நாள் இனிய நாளாக உங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் மிக சிறப்பாய் அமைய எல்லாம் வல்ல இறைவனை இத்தருணத்தில் வேண்டுகிறேன் - சாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக