தமிழ்சினிமா கண்டெடுத்த காதலன்!
தமிழ்சினிமா நாயகிகள் பொறுக்கி பையன்களை காதலிக்கிற பழக்கம் எப்போது தொடங்கியது என்று தெரியவில்லை. எம்ஜிஆர் போல நல்லவனாகவோ சிவாஜிபோல எமஷோனலாகவோ இருந்தால் நாயகிகள் விரும்புவதில்லை. அட ரஜினிபோல ஸ்டைலாகவோ கமல்போல ரொமான்டிக்காக இருந்தாலும் கூட நாயகிகள் ரசிப்பதில்லை.
எப்போதும் குடித்துவிட்டு, தாடியோடு கையில் சிகரட்டோடு, போதையில் புரள்கிறவனை, அஞ்சு பைசா சம்பாதிக்க வக்கில்லாமல் ஊரை ஏமாற்றி ரவுடித்தனம் செய்து பிழைக்கிறவனை, காசுக்காக தாய்தந்தையரையே உதைக்கிற முட்டாள்களைத்தான் தமிழ்சினிமா நாயகிகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக மிகவும் பிடிக்கிறது.
நிறைய சங்கறுப்பதும் பலபேருடைய குடியைகெடுப்பதும் கூட காதலுக்கு க்வாலிபிகேஷன் ஆகியிருக்கிறது. குடிபொடிபீடி பழக்கங்களில்லாத சாஃப்ட் பாத்திரங்கள் காமெடியர்களாக டம்மிபீஸுகளாகவும் சித்தரிக்கப்படுகின்றனர். அவர்களுடைய காதல் எப்போதும் நிறைவேறுவதேயில்லை.
இப்படி போதையில் திளைக்கிற நம் நாயக தியாக புண்ணிய ஆத்மாக்களுக்காக தன் உயிரையும் தியாகம் செய்ய துணிகிறார்கள் தமிழ்சினிமா காதலிகள்.
தன்னுடைய தாய்தந்தையரையும் தூக்கிப்போட்டு மிதிக்கிற அளவுக்கு அவர்களுக்கு காதல் மீது பற்றும் அன்பும் இருக்கிறது. இதுபோன்ற காட்சிகளை கொண்ட படங்கள் கடந்த பத்தாண்டுகளில் குறைந்தது நூறாவது வந்திருக்கும்.. நூறு என்பது குறைவான எண்ணிக்கையே.. இதைவிடவும் அதிகமாக இருக்கலாம்.
இப்படிப்பட்ட படங்களே நூறுநாட்கள் ஓடி கோடிகளை குவிக்கிறது. சமீபத்தில் வெளியான குட்டிபுலிவரை இதே கதைதான். இதே கான்செப்டில் இன்னும் நாலு டஜன் படங்கள் கோலிவுட்டில் உற்பத்தியாகிக்கொண்டிருக்கின்றன
சமீபத்தில் தொலைகாட்சியில் ஒரு இயக்குனர் தன்னுடைய மகள் நல்லவனை காதலித்திருந்தால் சேர்த்துவைத்திருப்பேன் என்று கதறி அழுதுகொண்டிருந்தார். அவரை தேற்றிக்கொண்டிருந்தவர் அமீர் என்கிற இயக்குனர்.
பருத்திவீரன் என்கிற படத்தின் மூலமாக காதலுக்கு மரியாதை செலுத்தியவர் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அந்தகாலத்து நம்பியார் வீரப்பாவை விட மோசமான வில்லனை நாயகனாக்கி அழகு பார்த்தவர். அப்படிப்பட்ட மோசக்காரனுக்காக தன் உயிரையும் தியாகம் பண்ணின காதலியாக ப்ரியாமணி சிறப்பாக நடித்திருப்பார்.
அமீரைப்போலவே அதேபாணியில் குடிகார காமவெறி காதலன்களை முன்னிறுத்தி படமெடுத்த வேறு சில இயக்குனர்களையும் பார்க்க முடிந்தது. எல்லாருமே காதலை பிரிக்க போராடிக்கொண்டிருந்தனர். பார்க்கவே பாவமாக இருந்தது.
பத்திரிகை செய்திகளின் மூலம் தெரிந்துகொண்டது என்னவென்றால் அந்த அப்பா இயக்குனரின் மகளின் காதலன் நிறைய குடிப்பாராம் பல பெண்களோடு தொடர்புள்ளவராம். வேலைவெட்டிக்கு போகமாட்டாராம். இப்படியொரு மாப்பிள்ளை கிடைக்க அந்த இயக்குனர் கொடுத்துவைத்திருக்க வேண்டுமே! ஏன் எதிர்க்கிறார்கள் என்பதுதான் விளங்கிவில்லை.
போகட்டும். தமிழ்சினிமா கண்டெடுத்த முத்தாக அந்த காதலனை பார்க்கிறேன். அவருடைய காதலை வாழவையுங்கள் பெரியோர்களே தாய்மார்களே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக