“கறுப்புப் பெட்டி” என்பது விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு இன்றியமையாத கருவியாகும். விமானம் இயங்கிக் கொண்டிருக்கும்போது விமானிகளுக்கும், விமானக் கட்டுப்பாட்டு அறைக்கும் இடையே நடைபெறும் தகவல் பரிமாற்றங்களை இந்த கறுப்புப் பெட்டி பதிவு செய்து கொண்டே இருக்கும்.
விமானம் எவ்வளவு பெரிய விபத்தை சந்தித்தாலும், முழுவதும் தீப்பிடித்து எரிந்தாலும், அல்லது கடலில் விழுந்து மூழ்கினாலும், இந்த கறுப்புப் பெட்டி எவ்வித சேதமும் இல்லாமல் தப்பிவிடும்.
அந்த அளவுக்கு பாதுகாப்பான முறையில் இது தயாரிக்கப்படுகிறது. பிறகு அதனுள் பதிந்திருக்கும் தகவல்களைக் கொண்டு விமானம் விபத்திற்குள்ளான காரணத்தை அறியலாம்.
இந்த கறுப்புப் பெட்டி பெரும்பாலும் விமானத்தின் வால் பகுதியில் அல்லது மேற்கூரையில் அமைக்கப்பட்டிருக்கும், அப்போது தான் எவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டாலும் சேதமடையாமல் இருக்கும்.
ஒரு விமானத்தில் மொத்தம் 2 கறுப்புப் பெட்டிகள் இருக்கும்.
பெரிய கறுப்புப் பெட்டிக்கு ஆங்கிலப் பெயர் Flight data recorde r (பறப்பின் தகவல் பதியி). இது விமானம்
பறக்கும் நேரம், வேகம், உயரம் ஆகிய விபரங்களை பதிவு செய்யும்.
சிறிய கறுப்புப் பெட்டிக்கு ஆங்கிலப் பெயர் (Voice recorder) இது விமானியின் அறையில் நடக்கும் உரையாடல்களைப் பதிவு செய்யும்.
வரலாறு:
கறுப்புப் பெட்டியை 1953 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வாரன் என்பவர் கண்டுபிடித்தார். 1934 ஆம் ஆண்டு இவரின் தந்தை விமான விபத்தினால் மறைந்தார்.
ஆனால் விபத்திற்கான காரணம் கடைசி வரை தெரியவில்லை. இதனால் விமானங்கள் விபத்திற்குள்ளாகும் போது அதற்கான காரணங்களை கண்டறிய வேண்டும் என்று ஆய்வில் ஈடுபட்டு கறுப்புப் பெட்டியை கண்டுபிடித்தார்.
கறுப்புப் பெட்டி குறித்த அதிசயத் தகவல்கள் :
* கறுப்புப் பெட்டியின் உண்மையான நிறம் கறுப்பு அல்ல, செம்மஞ்சள் நிறம்.
* ஒரு கறுப்புப் பெட்டி கடைசியாக நடந்த 25 மணி நேர விமானத் தகவல்களையும், 30 நிமிட விமானிகளின் உரையாடல்களையும் கொண்டிருக்கும்.
* கறுப்புப் பெட்டியின் உறுதிக்கு காரணம் அலுமினியம், சிலிக்கா, டைட்டானியம் (Titanium) “ஸ்டைன்லெஸ் ஸ்டீல்” (Stainless steel) ஆகியவை கலந்த கலவையால் அது உருவாகப்படுவது தான்.
* விபத்து நடந்த பிறகு கறுப்புப் பெட்டியிலிருந்து “பீப்” (Beep) சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். இது பெட்டியை கண்டுபிடிக்க உதவுகிறது.
* இது 2000 பாரன்ஹீட் (2000 °F) வெப்பத்தையும் தாங்கும், 2000 கிலோ எடையுடைய பொருள் விழுந்தாலும், 30,000 அடி உயரத்திலிருந்து விழுந்தாலும் சேதமாகாது.
ஒளி ஊடுபுகவிடும் இயல்பினை மாற்றும் புதிய வகைக் கண்ணாடிகள்
அலுவலகங்களில் வெளிப்புற யன்னல்களுக்கு கண்ணாடிகளை தெரிவுசெய்கையில், ஒளி குறைவாக உட்புகும் தன்மைகொண்ட கண்ணாடிகள் (Tinted glass) தேர்ந்தெடுக்கப்படுவதை அவதானிக்கலாம். அல்லாவிடின், வெப்பம் கொண்ட சூரியக்கதிர்கள் யன்னல் கண்ணாடிகள் வழியே முழுமையாக உள்ளே நுழைந்து கட்டடங்களின் அகப்பகுதியினை வெப்பமேற்றும்.
இந்த வெப்பத்தினைத் தணிப்பதற்காக மின்குளிரேற்றிகள் மற்றும் மின்விசிறிகள் அவசியப்படும். சூரியன் கிழக்குத் திசையில் காணப்படுகையில், கட்டடத்தின் மேற்குப்பகுதி யன்னல்களில் காணப்படும் ஒளிகசியும் கண்ணாடிகள் காரணமாக அப்பகுதி அறைகள் குறைந்த ஒளியுடையவையாகக் காணப்படும். இதனைத் தவிர்க்க மின்விளக்குகள் அவசியப்படும்.
மேற்குலக நாடுகளில் குளிர்காலங்களில் அலுவலகங்களைச் சூடேற்ற மின்னுபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சூடேற்றும் உபகரணங்களுக்குப் பதிலாக கிடைக்கப்பெறும் சூரியஒளியைப் பயன்படுத்துவதற்கு, யன்னல் கண்ணாடிகள் நன்கு ஒளியை
புகவிடுவதாக அமைதல் வேண்டும்.
மேற்குறிப்பிட்ட நிலைமைகளில் கட்டடங்களில் உள்ள கண்ணாடிகள் தாமாகவே தமது ஒளி புகும் தன்மைகளை மாற்றியமைப்பின், கட்டட அகத்தின் தட்ப வெப்ப நிலைமைகளை ஏற்றவாறு பேணுவதுடன் பணிபுரிவதற்குத் தேவையான ஒளிக்கு மின்விளக்குகளை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பயன்படுத்த முடியும்.
இது மின்நுகர்வினை பெருமளவில் குறைத்து, மின்கட்டணத்தினை மின்னுற்பத்தியின்போதான பாதக விளைவுகளையும் குறைவானதாக்கும். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் அமைந்துள்ள Lawrence Berkeley தேசிய ஆய்வுகூடத்தினைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஒளி ஊடுபுகவிடும் இயல்பை மாற்றும் புதிய வகைக் கண்ணாடியினை தமது ஆய்வினூடாக உருவாக்கியுள்ளனர்.
இக்கண்ணாடி, ஒளி ஊடுபுகவிடும் தன்மை, வெப்பமேற்றும் அகச்சிவப்புக் கதிர்களை தடுக்கும் இயல்பு மற்றும் ஒளிக்கதிர்கள், அகச்சிவப்புக் கதிர்கள் ஆகிய இரண்டையும் தடுத்தல் ஆகிய மூன்று பண்புகளையும் அவசியமான சந்தர்ப்பங்களில் ஏற்படுத்தத்தக்கதாக இப்புதிய வகைக் கண்ணாடி அமைந்துள்ளது.
கடந்த வருடம் அமெரிக்காவின் சக்திவளத் திணைக்களத்தின் முன்னேற்றகரமான ஆய்வுக்கான பிரிவு 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை Lawrence Berkeley தேசிய ஆய்வுகூட ஆய்வுக்குழுவினருக்கு வழங்கியிருந்தது.
இந்த ஆய்வுகூடத்தின் வேதியியலாளர் Delia Milliron மற்றும் அவரின் உதவியாளர்களான Anna Llordés, Guillermo Garcia, மற்றும் Jaume Gazquez ஆகியோரின் தீவிர உழைப்பின் பயனாக புதிய கண்டுபிடிப்பு உதயமாகியுள்ளது. இக்கண்டுபிடிப்பின் விபரங்கள் Nature என்ற அறிவியற் சஞ்சிகையில், “Tunable near-infrared and visible light transmittance in nanocrystal-in-glass composites” என்ற தலைப்பிடப்பட்ட கட்டுரையில் வெளியாகியுள்ளது.
இப்புதிய வகைக் கண்ணாடியில் இருவகையான வேதிப்பதார்த்தங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்தியம் ரைற்ரேனியம் ஒட்சைட்டு (indium tin oxide (ITO ) மற்றும் நையோபியம் ஒட்சைட் (Niobium oxide (NbOx) ஆகிய இரு வேதிப்பதார்த்தங்களும் மின்னழுத்தம் பிரயோகிக்கப்படுகையில் தமது செயற்படும் இயல்பை மாற்றும் தன்மை கொண்டவை.
இந்தியம் ரைற்ரேனியம் ஒட்சைட் சேர்வைக்குக் குறுக்கே மின்னழுத்தம் பிரயோகிக்கப்படுகையில், அது அகச்சிவப்புக் கதிர்களை அண்மித்த அலை நீளங்கொண்ட வெப்பக்கதிர்களிலிருந்து வெப்பத்தினை உறிஞ்சும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மற்றைய சேர்வையான நையோபியம் ஒட்சைட், மின்னழுத்தம் பிரயோகிக்கப்படுகையில் அச்சேர்வை கருமையடைந்து ஒளிக்கதிர்களை தடுக்கும் இயல்பானதாக மாற்றம் பெறுகிறது.
கண்ணாடிக்கு வழங்கப்படும் மின்னழுத்தம் 4 ‘வோல்ட்’ (Volt(V) இலிருந்து 2.3V வரை மாறுபடுகையில், ஒளிபுகவிடும் தன்மை கொண்டதாக இருந்த கண்ணாடி, அகச்சிவப்புக் கதிர்களை அண்மித்த வெப்பக்கதிர்களைத் தடுக்கும் இயல்பினதாகிறது. இந்த மின்னழுத்தம் மேலும் 1.5V வரை குறைவடைகையில், ஒளிக்கதிர்கள் தடுக்கப்படும் வகையில் கண்ணாடி கருமையடையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அணுகுமுறையில் கண்ணாடிக்கு உரிய மின்னழுத்தத்தினை வழங்குவதன் வாயிலாக அவசியப்படும் ஊடுபுகவிடும் இயல்பினை கண்ணாடியில் கொண்டுவர முடியும்.
ஆய்வுகூடத்தில் ஆக்கப்பட்ட புதிய வகைக் கண்ணாடியில் பரிசோதனை மேற்கொண்டு பெறுபேறுகளை உறுதிப்படுத்திக்கொண்ட ஆய்வாளர்கள், வர்த்தக ரீதியிலான கண்ணாடியினை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
அநேகமான இலத்திரனியல் உபகரணங்களில் இந்தியம் (In) மூலகம் பயன்படுத்தப்படுவதால், அதன் விலை அதிகரித்ததாகக் காணப்படுகிறது. எனவே இந்த மூலகத்திற்குப் பதிலாக மலிவாகக் கிடைக்கக்கூடிய நாகம் (Zn) மூலகத்தினைப் பயன்படுத்தும்
எண்ணம் அறிவியலாளர்களிடையே காணப்படுகிறது. ஆய்வுகூடத்தில் இக்குறித்த மூலகம் உபயோகிக்கப்பட்டு பெறுபேறுகள் ஏலவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. எனினும், வர்த்தக ரீதியிலான பாவனைக்கான கண்ணாடி உற்பத்திகள் எப்போது ஆரம்பமாகும் என ஆய்வாளர்கள் இதுவரை குறிப்பிடவில்லை.
சில்லையூர் றெ.அலெக்ஸ் யாழ்ப்பாணம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக