தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

தயவுசெய்து கடவுளைக் காப்பாற்றுங்கள்!கடவுளுக்கும் தலைவலி!


ஒருவருக்கு திடீரென்று தலைவலி. உடனே மருத்துவமனைக்குப் போனார். அந்த டாக்டர், இவரை ஓர் அறையில் படுக்க வைத்தார். ஒரு மருந்துச் சீட்டு எழுதினார்.

அங்கே நின்று கொண்டிருந்த ஒருவரிடம் கொடுத்து, ‘‘இதை உடனே வாங்கி வா!’’ என்றார்.
மருந்து வாங்கப் போன ஆசாமி வருவார் என்று காத்திருந்தார்கள். ஆனால், போனவர் வரும் வழியாகத் தெரியவில்லை.

படுத்திருந்தவருக்குத் தலைவலி இன்னும் அதிகமாயிற்று. டாக்டர் பார்த்தார். உடனடியாக இன்னொரு மருந்தின் பெயரை எழுதினார்.
‘‘இது கிடைத்தாலும் பரவாயில்லை!’’ என்று அந்தச் சீட்டை இன்னொருவரிடம் கொடுத்து வாங்கி வரச் சொன்னார். அவரும் அவசரமாக வெளியே ஓடினார். ஆனால், வந்து சேரவில்லை.

இந்த சமயத்தில் அந்த மருத்துவமனையின் வாசல் புறத்தில் ஏதோ கூச்சல் கேட்கிறது. அங்கே ஒரு சுழலும் வழி...

ஒருவர் பின் ஒருவராகத்தான் உள்ளே வர முடியும். கால்நடைகள் நுழையாமல் இருக்க அந்த ஏற்பாடு.
அங்கே இரண்டு பேர், ‘நான்தான் முதலில் உள்ளே நுழைவேன்!’ என்று இருவரும் நின்று கொண்டு தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். விளைவு& இரண்டு பேருமே செல்ல முடியவில்லை.
இருவரின் கையில் இருப்பதும் ஒரே நோய்க்கான மருந்துதான் என்பது அவர்களுக்குப் புரியவில்லை.
உள்ளே படுத்திருப்பவரோ, தலைவலியால் துடித்துக் கொண்டிருக்கிறார். அதற்கான மருந்தை வைத்திருப்பவர்களோ வெளியே சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

விளைவு? தலைவலி தொடர்ந்து கொண்டிருக்கிறது! இதுதான் இன்றைய ஆன்மிகம்! மனித குலம்தான் அந்த நோயாளி. கடவுள்தான் அந்த மருத்துவர். மதவாதிகள்தாம் அங்கே சண்டை போடுகிறவர்கள்.

சரி... இப்போது கதையைத் தொடரலாம். டாக்டர் அவசரமாக வெளியே ஓடி அவர்கள் கையில் இருந்த இரண்டு மருந்தையும் வாங்கிக் கொண்டு உள்ளே ஓடுகிறார்.

ஒரு பாட்டில் மருந்தை அந்த நோயாளிக்குக் கொடுக்கிறார். இன்னொரு பாட்டில் மருந்தை அவசரமாகத் தானே சாப்பிட்டு விடுகிறார்!

ஆமாம்!
இப்போது டாக்டருக்கும் தலைவலி!

மதவாதிகளே!
தயவுசெய்து கடவுளைக் காப்பாற்றுங்கள்!

நன்றி : தென்கச்சி கோ.சுவாமிநாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக