தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, August 31, 2013

வள்ளி திருமணம்!


தொண்டை மண்டலம் என்றழைக்கப்படும் காஞ்சிபுரம் மேல்பாடி அருகே வள்ளிமலை என்ற வள்ளிக்காட்டில் வேடுவர் தலைவராக நம்பிராஜன் என்பவர் வாழ்ந்து வந்தார். இந்த வள்ளிக்காட்டில் சிவமுனி என்ற முனிவர் தபஸ் செய்து கொண்டிருந்தார். இவர் நாராயண அம்சம் கொண்டவர். இவர் தவம் செய்துகொண்டிருந்தபோது அவருக்கு எதிரே அழகான மான் ஒன்று போய்க்கொண்டிருந்தது. அதை அன்புடன் அவர் பார்த்தார். ரிஷி கர்ப்பம் ராத் தாங்காது என்பர். உடனே மான் கர்ப்பமாகி அது ஒரு குழந்தை ஈன்றது. அது ஒரு பெண் குழந்தை. அந்தப் பெண் குழந்தையை நம்பிராஜன் எடுத்து தன் மனைவியிடம் கொடுக்கிறார். வள்ளிக் காட்டில் இருந்து இந்தப் பெண் குழந்தையை எடுத்ததால் இந்தக் குழந்தைக்கு வள்ளி என்ற பெயரிட்டு வளர்க்கிறார். அவளுக்குப் பன்னிரண்டு வயது பூர்த்தியானதும், அவர்களுடைய வேடுவர் குல வழக்கப்படி, தினை முதலிய தானியங்களை பட்சிகளிடமிருந்தும், மிருகங்களிடமிருந்தும் காக்க காவலுக்கு அனுப்பி வைப்பார்கள். தினைக் கொல்லையைக் காவல் காக்க காட்டிலேயே பரண் மாதிரி ஒன்றை அமைத்து கவை, கம்பு கொடுத்து பெண்களை காவல் காக்க அனுப்பி வைப்பார்கள். அந்தக் காட்டில் சுப்ரமண்யர் தன் அழகிய உருவத்தை மாற்றிக்கொண்டு வேடுவர் வேஷத்தோடு வில் அம்பு வைத்துக்கொண்டு, வள்ளி காவல் காத்துக் கொண்டிருக்கும் காட்டுக்கு வருகிறார். வந்தவர் வள்ளியிடம், அம்மா நீ யார்? உன் ஊர் என்ன? பெயர் என்ன? உன் பெற்றோர் யார்? இவ்வளவு அழகான பெண்ணாக இருக்கும் உன்னை இந்த காட்டில் காவலுக்கு அனுப்பி வைத்தது யார்? என வள்ளியைக் கேட்கிறார். உண்மையில் பார்த்தால் அவர் வள்ளியைத் தான் திட்டியிருக்க வேண்டும். ஆனால் உன்னை இங்கு அனுப்பி வைத்தது யார்? எனக் கேட்கிறார்.

நீ வந்த வேலையைப் பார்த்துக்கொண்டு போ. என் பெற்றோரைப் பற்றிப் பேச உனக்கு என்ன உரிமை இருக்கிறது? என சத்தமிட்டாள். இந்த வாக்குவாதம் நடந்துகொண்டிருக்கும் வேளையில், தாரை தம்பட்டம் அடித்தபடி நம்பிராஜன் அவருடைய சேனைகளுடன் காட்டில் வள்ளி இருக்குமிடம் நோக்கி வருகிறார். அதைக் கண்ட முருகர் வள்ளி உட்கார்ந்திருக்கும் பரணுக்கு பின்னால் நிற்கறார். ஆனால் வள்ளி நடுக்கத்துடன் இருக்கிறார். நம்பிராஜன் தன் மகளுக்கு தினை, தேன், பழங்கள் கொடுக்கிறார், பரணுக்கு பின்னால் நின்றிருந்த முருகர்(வேடுவர்) பெரிய வேங்கை மரமாகிவிட்டார். நம் சாஸ்திரங்களே வேதத்தை மரமாகச் சொல்கிறார்கள், பாகவதம் வேதமே மரமானது என்று சொல்கிறது. திடீரென்று தோன்றிய அந்த மரத்தை வேடுவரோடு வந்தவர்கள் வெட்டலாம் என்று சொல்ல, அதற்கு நம்பிராஜன் அவர்களைத் தடுத்து, வேண்டாம் இந்த மரம் வள்ளிக்கு நிழலாக இருக்கட்டும். துணையாக இருக்கட்டும் என்கிறார். அவர்கள் கிளம்பியதும், முருகர் மறுபடியும் வள்ளியிடம் வந்தார். என்ன உன் தந்தை வந்துவிட்டுப் போகிறார் எனக் கூற, வள்ளி, உண்மையைக் கூறுங்கள். நீங்கள் வேடுவர் இல்லை. ஏனென்றால் மரமானதை நான் பார்த்தேன். மேலும் நீங்கள் வேறு வேடத்தில் வருவதால் வேடுவர் இல்லை. உங்களைப் பார்த்தால் ஏதோ ராஜ வம்சத்தில் பிறந்தவர் மாதிரி தெரிகிறது. என்று சொல்ல... அதற்கு முருகர், நான் வேடுவன்தான்! என்றார். ஆனால், வள்ளி தன் மனதுக்குள் நம்மைக் கவர்ந்து சொல்லத்தான் இவர் வந்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு, இந்தக் காட்டில் வேடுவர் குலத்தில் பிறந்த பெண் நான். எனக்கு வசதியும் கிடையாது. மேலும் என் தந்தைக்கு நீங்கள் என்னிடம் பேசியக்கொண்டிருப்பது தெரிந்தால் அவ்வளவுதான்! நீங்கள் என்னிடம் எந்த வாக்குவாதமும் செய்யவேண்டாம் எனக் கெஞ்சினாள்.

இப்படி பேசிக் கொண்டிருக்கும்போதே அரைமணிக்கு ஒருமுறை வரும் நம்பிராஜன் மீண்டும் தன் மகளைப் பார்க்க வருகிறார். உடனே வள்ளி, இந்த முறை என்ன வேஷம் எடுக்கப்போகிறார்? என குழப்பத்துடன் பார்த்தாள். உடனே முருகர் வயதான தொண்டுக் கிழவனாக மாறினார். உடம்பு வெள்ளையான ரோமங்கள், அணிந்திருக்கும் வஸ்திரமும் வெள்ளை, உடம்பு முழுவதும் திருநீறு பூசியிருக்கிறார். உடல் தள்ளாடித் தள்ளாடியபடியே நடந்து வருகிறார். வயோதிகரைக் கண்ட நம்பிராஜன் அவர் காலில் விழுந்து நமஸ்கரிக்க, நம்பிராஜனிடம் விபூதியைக் கொடுத்து, மங்களம் உண்டாகட்டும்! என்றார். அவரைப் பார்த்து நம்பிராஜன் என்ன விசேஷம் ? யாரைப் பார்க்க வந்தீர்கள்? நீங்கள் எங்கே போக வேண்டும்? ஏதாவது பொருளைத் தேடி வந்திருக்கிறீர்களா? எனக் கேட்க, அதற்கு முருகப் பெருமான், எனக்கு இந்த உலகத்தில் எதுவும் வேண்டாம். இங்கு ஒரு புண்ணிய தீர்த்தம் ஒன்று உள்ளது. அதன் பெயர் குமரி தீர்த்தம். அங்கு நீராட வேண்டும் என்றார். அதைக் கேட்ட நம்பிராஜன், அம்மா வள்ளி! இவர் தள்ளாத வயதில் நம் இருப்பிடத்துக்கு வந்திருக்கிறார். அவரைக் கூட்டிக் கொண்டு போய் விட்டுவா என்று கூற.. அந்தக் காட்சி தன் மகளை, திருமணம் செய்துகொள் என்பதை மறைமுகமாக கூறுவது போல் இருந்ததாம்.

நம்பிராஜன் அந்த இடத்தை விட்டு சென்றதும், முருகர் வள்ளியைப் பார்த்து, எனக்குப் பசியாக இருக்கிறது.உண்பதற்கு ஏதாவது தர வேண்டும் எனக் கூற... வள்ளி தன் தந்தை கொடுத்த தேனை தினைமாவுடன் பிசைந்து முருகப் பெருமானிடம் கொடுக்கிறார். அதை உண்டதும் அவருக்கு விக்கல் எடுக்கிறது, அதைப் போக்குவதற்குக் குடிக்க தண்ணீர் கேட்கிறார். வள்ளியும், இங்கு ஒரு சுனை ஒன்று உள்ளது அங்கு போய்த்தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சொல்ல... முருகர், நான் கிழவன். என்னால் தனியாக போக முடியாது. ஆகவே என்னோடு நீயும் வா என்று கூறியபடி வள்ளியின் கையைப் பிடித்துக் கொண்டு சுனையை நோக்கிப் போகிறார். அங்கு தண்ணீர் குடித்த பிறகும் வள்ளியின் கையை விடாமல் பிடித்தபடி நிற்க.. வள்ளி தன் கையை அவரிடமிருந்து பிடிவாதமாக இழுத்து உதறிவிட்டு, தாத்தா, நான் முன்னால் போகிறேன். நீங்கள் பின்னால் வாருங்கள் என்று கூறிவிட்டு வேகமாக ஓடுகிறாள். அந்தச் சமயத்தில் தன் அண்ணனான விநாயகரை வேண்டுகிறார். உடனே வள்ளி ஓடுகின்ற பாதையில் பெரிய யானை ஒன்று பிளறியபடி ஓடி வருகிறது. இதைக் கண்டு பயந்த வள்ளி திரும்பவும் கிழவரிடம் வந்து, நீங்க சொல்வதை நான் கேட்கிறேன். அந்த யானையைத் திரும்பிப் போகச் சொல்லுங்கள் என்று வள்ளி வேண்டுகிறார். உடனே அவரும் யானையிடம் வேண்ட... யானையும் திரும்பிப் போய்விட்டது. உடனே முருகர் தன் உருவத்தை மாற்றி, சுப்ரமண்யராகக் காட்சியளித்தார். நாரதர் வாழ்த்தோடு பார்வதி, பரமேஸ்வரன் முன்னிலையில் முருகர் வள்ளியை மணந்தார். இப்படியாக வள்ளி திருமணம் நடந்தது.

அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம் மற்றும் இந்த நாளும் இனிய நாளாக வாழ்த்துக்கள் - சாம்

No comments:

Post a Comment