ஆவணி மாதம் பவுர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் வருகிறது. கணவரின் ஆயுள்பலம் அதிகரிக்கவும், குடும்ப ஒற்றுமை சிறக்கவும் பெண்கள் இதனை அனுஷ்டிக்கின்றனர்.
இந்த விரதம் குறித்து ஒரு கதை கூறப்படுகிறது... மகத தேசத்தில் குண்டினா என்னும் ஊரில் சாருமதி என்ற பெண் லட்சுமிதேவியின் பக்தையாக இருந்தாள். அவளது கனவில் தோன்றிய தேவி, தன்னை வரலட்சுமியாக வழிபட்டால், வேண்டிய வரங்களைத் தருவதாக அருளினாள். சாருமதியும் தன் குடும்பத்தினரிடம் இதை தெரிவித்து, ஒரு வெள்ளிக்கிழமையில் வழிபாடு செய்தாள். மற்ற பெண்களும் இந்த விரதத்தை மேற்கொள்ளத் தொடங்கினர். வரலட்சுமி விரதத்தன்று, வீட்டை சுத்தம் செய்து, பூஜையறையில் வாழையிலையில் பச்சரிசியைப் பரப்பி, கலசம் வைக்க வேண்டும். அதில் மஞ்சள் பூசிய தேங்காயை வைத்து மாவிலையால் அலங்காரம் செய்ய வேண்டும். கலசத்தின் முன்புறம் வெள்ளி அல்லது தாமிரத்திலான லட்சுமி முகத்தை வைத்து ஆபரணங்களை அணிவிக்க வேண்டும். லட்சுமி அஷ்டோத்திரம், சகஸ்ரநாமத்தை சொல்லி வழிபட வேண்டும். இனிப்பு பலகாரங்கள், பழவகைகள் நைவேத்யம் செய்து, தூபதீபம் காட்டி சாஷ்டாங்கமாக வணங்க வேண்டும். வீட்டுக்கு வரும் சுமங்கலிகளுக்கு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு கொடுத்து வழியனுப்ப வேண்டும்.
விரத பலன்கள்:
1. உயர்ந்த ஞானம் கிடைக்கும்.
2. மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.
3. மங்கல வாழ்வு அமையும்.
4. மனதில் உள்ள விருப்பங்கள் ஈடேறும்.
5. கல்யாணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
அம்மனை பூஜை செய்ய பூஜாவிதானம் புத்தகங்களில் கூறப்பட்டுள்ள வழியையே பின்பற்றவும். அப்படிப் பின்பற்ற இயலாதவர்களுக்குச் சில எளிய பூஜா மந்திரங்கள் இதோ :
திருமகளே திருப்பாற்கடல் ஊடன்று தேவர் தொழ
வருமகளே உலகெல்லாமும் என்றென்றும் வாழவைக்கும்
ஒருமகளே நெடுமால் உரத்தே உற்று உரம்பெரிது
தருமகளே தமியேன் தலைமீது நின்தாளை வையே
(வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)
மகாலட்சுமி காயத்ரீ :
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
விஷ்ணு பத்னீ ச தீமஹி
தன்னோ லக்ஷ்மீ : ப்ரசோதயாத்
அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம் மற்றும் இந்த நாள் இனிய நாளாக உங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் மிக சிறப்பாய் அமைய எல்லாம் வல்ல இறைவனை இத்தருணத்தில் வேண்டுகிறேன் - சாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக