தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 2 ஜூலை, 2013

அந்திலி லட்சுமி நரசிம்மர் கோவில்..!


அந்திலி லட்சுமி நரசிம்மர் கோவில்..!

அந்திலி லட்சுமி நரசிம்மர் கோவில் திருக்கோவிலூர் பகுதியில் உள்ளது. இதுதான் முதல் மூன்று ஆழ்வார்களும் பரந்தாமனைக் கண்டு கொண்ட தலம். அரகண்டநல்லூர் ரெயில்வே கேட்டிலிருந்து வலது புறம் சுமார் ஒரு கி.மீ. தண்டவாளப் பாதை வழியே நடந்து சென்றால் இக்கோவிலை அடைந்து விடலாம்.

திருக்கோவிலூரிலிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில் இந்த ஆலயம் உள்ளது. சிறு சிறு குன்றுகளாக சூழ்ந்திருக்கும் இப்பகுதியில் பெண்ணையாற்றின் கரையில் ஒரு பாறை மீது நரசிம்மர் ஆலயமுள்ளது. ஒரு கருடன் மேல் உள்ள கோவில் போல் இந்த ஆலயம் காணப்படுகிறது.

இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று இரண்யனிடம் பிரகலாதன் சொல்லி விட்டான். அந்தக் குழந்தை சொன்ன வாக்கை காப்பாற்ற வேண்டிய அவசரத்தில் ஓடோடி வந்து விட்டார் பகவான். தன் மீது ஏறிபயணம் செய்யாமல் வந்து விட்டாரே, கருட வாகனமில்லாத விஷ்ணுவா என்ற குறை கருடாழ்வாருக்கு ஏற்பட்டது.

கருடனுக்கு, தான் என்ன தவறு செய்தோமென்று தெரியவில்லை. பெண்ணையாற்றங்கரையில் உள்ள பாறை மேல் நின்று கடுமையான தவம் செய்ய ஆரம்பித்து விட்டார். தவத்தின் வெப்பம் மூவுலகத்தையும் தகித்தது. கருடனின் குறையைத் தீர்க்க பெருமாள், லட்சுமி நரசிம்மராக தோற்றம் அளித்தார்.

தன்னுடைய நாயகன் காட்சி தந்ததும், கருடன் மகிழ்ச்சிப் பெருக்கில் மிதந்தார். தானே வானில் சிறகடித்துப் பறப்பது போல் உணர்ந்தார். அந்திலியில் தான் கண்ட இந்த தோற்றத்தை மக்கள் அனைவரும் எக்காலத்திலும் காண வேண்டுமென்று அருள் புரிய வேண்டினார்.

கருடன் கேட்டுக் கொண்டபடி பகவான் சாந்த மூர்த்தியாகக் காட்சியளிக்க ஒப்புக் கொண்டார். அவரே அந்திலி லட்சுமி நரசிம்மர். பல யுகங்களுக்கு முன்னால் நடந்த இந்த தலத்தின் மேன்மையை ஞானத்தால் உணர்ந்த வியாசராஜர் இங்கு வந்து இறைவனைத் தரிசித்து கோவிலைப் புதுப்பித்தார்.

ஆஞ்சநேயரை நாடெங்கும் பிரதிஷ்டை செய்த அவர் இங்கும் ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்திருக்கிறார். கருடனுக்கு அருள் புரிந்த தலம் என்பதால் கருடத் தூண் (ஸ்தம்பம்) எண்கோணப் பட்டை வடிவில் ஓங்கி உயர்ந்து உள்ளது. இங்கு லட்சுமி நரசிம்மர் மிகவும் வரப்பிரசாதியாக உள்ளார்.

இதனால் பக்தர்களின் தீராத நோய்களைத் தீர்த்து வைப்பவராக உள்ளார். அவ்வையார் தனக்கு ஆதரவளித்த பாரி மகள்கள் இருவரையும் இத்தலத்திலேதான் மூவேந்தர்களையும் வரவழைத்துத் திருமணம் நடத்தி வைத்தார். அவர் விநாயகர் அகவலைப் பாடியதும் இங்குதான்.

திருக்கோவிலூர் ரெயில் நிலையம் உள்ள கீழூர், அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்று. இங்கு சம்ஹாரம் செய்யப்பட்டவன் அந்தகாசுரன். இங்கு மாத்வ சுவாமிகள் மடமொன்று உள்ளது. பிள்ளை வரம் வேண்டி இங்கே பிரார்த்தனை செய்து கொண்டு நிறைய பெண்கள் வருகிறார்கள்.

பகவான் ரமணரை திருவண்ணாமலைக்குச் செல்லுமாறு ஆசி கூறி அனுப்பியவள் இத்தலத்தில் அருள்பாலிக்கும் அம்பாள்தான். அந்திலி நரசிம்மரை வணங்கச் சென்றால் அத்தலத்தை சுற்றியுள்ள இத்தனை சிறப்புகளையும் கண்டு வரலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக