தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 12 ஜூலை, 2013

மஹா கும்பாபிஷேகம் ஏன்?




மஹா கும்பாபிஷேகம் ஏன்?

இறைவன் ஜோதி வடிவானவன். பஞ்ச பூத சக்திகளையும் தன்னுள்ளே அடக்கி ஆள்பவன். தன்னுடைய சக்தியை ஒரு கல்லினுள் நிலைபெறச்செய்து தன்னை நம்பி வருவோர்க்கெல்லாம் அருள் பாலிக்கிறான். அதற்காக, எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கும் இறை சக்தியை ஈர்த்து சேர்த்து மூலஸ்தானத்தில் நிலைப்படுத்தி வழிபாட்டுத்தலமாக உருவாக்குகிறார்கள்.

இக்கலியுகத்தில் பிறவி எடுத்த நாம், பிறவிப்பயன் அடைய வேண்டும் என்று நம் முன்னோர்கள், ரிஷிகள், ஞானிகள் இவர்களைக்கொண்டு பூஜைகள், விரதங்கள், யாகங்கள், தான தர்மங்கள் ஆகியன செய்து மனிதன் தெய்வத்தன்மை அடைந்து வாழ்வாங்கு வாழ வழி வகுத்துள்ளார்கள்.

அதில் மிகவும் முக்கியமான ஒன்று ஆலயம் கட்டுதல், ஆலயத் திருப்பணி செய்தல் என்பதாகும். இவை ஆபர்தம், அனாவர்தம், புனராவர்தனம், சுந்தரிதம் என நான்காக பிரிக்கப்படும்.

வேத, ஆகம, சிற்ப,சாஸ்திர முறைப்படி கருங்கற்களைக் கொண்டு ஆலயம் கட்டி அதில் யந்திர ஸ்தாபனம் செய்து தெய்வ உருவங்களை பிரதிஷ்டை செய்கிறார்கள்.

ஆலயத்தின் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகள் மந்திர வடிவமாக இருந்து ஆன்மாக்களுடைய கர்மாக்களையும், மாயைகளையும் போக்கி அருள் பாலிக்கின்றனர்.

மந்திர ஒலிக்கு ஆற்றல் அதிகம். மந்திரங்களில் சிறந்த மந்திரமாக கருதப்படும் காயத்ரீ மந்திரத்தின் சக்தி, ஒலிக்கப்படும் இடத்திலிருந்து ஆயிரம் மீட்டர் தொலைவு வரை வியாபித்திருக்குமாம். பெரிய மகான் ஆக இருந்தாலும் ஆலய வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறுவர்.

கல்லினால் வடிவமைத்த தெய்வ திருவுருவங்களை தானியவாசம், ஜலவாசம் செய்வார்கள். தங்கம், வெள்ளி அல்லது செம்பு தகட்டில் மந்திரங்களை எழுதி, நாற்பத்தெட்டு (48) நாட்கள் முறைப்படி வழிபாடுகள் செய்து அவற்றை தெய்வ சிலைகளை பிரதிஷ்டை செய்யும் இடத்தில் பதிய வைப்பார்கள்.

கல்லினாலும், மண்ணினாலும், உலோகங்களாலும் மனிதனால் உருவாக்கப்பட்ட தெய்வ உருவங்களுக்கு சக்தியை உண்டு பண்ணுவதற்காக செய்யப்படும் பல வித யாகங்க்களுள் ஒன்று தான் கும்பாபிஷேகம். இதற்காக வேதத்தில் சிறந்தவர்களும், சிவா பூஜையில் தன்னை அர்பணித்துக் கொண்டவர்களும் தேவையான யாக குண்டங்களை அமைப்பார்கள்.

இனிய மந்திரங்களை ஓதி யாகத்தில் அக்கினி வளர்த்து அரிய வகை மூலிகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை அக்கினியில் சேர்த்து அதில் தோன்றும் ஜோதியை கும்பத்தில் சேர்ப்பார்கள்.

தெய்வ சக்திகள் உருவேற்றப்பட்ட காச தீர்த்தங்களால் சிலைகளுக்கு அபிஷேகம் செய்து கருவறையில் யந்திரங்கள் பதித்து சிலைகளை பிரதிஷ்டை செய்வார்கள். கோபுரத்தின் மேலுள்ள கலசங்களுக்கும் உயிரூட்டப்பட்ட சக்தி வாய்ந்த கலச தீர்த்தங்களால் அபிஷேகம் செய்யப்படும்.

சைவர்கள் மகா கும்பாபிஷேகம் என்றும் வைணவர்கள் மகா சம்ப்ரோக்ஷணம் என்றும் கூறுவர்.

ஆகம விதிப்படியும், சாஸ்திர முறைப்படியும் தெய்வ உருவங்களில் சக்தியையும், கோபுர கலசத்தில் உருவேற்றிய சக்தியையும், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊக்கப்படுத்தி மனித வாழ்க்கை மேம்படுவதற்காக நடைபெறுவதே மகா கும்பாபிஷேகம். மகா கும்பாபிச்கேகதன்று முப்பத்து முக்கோடி தேவர்களும் நமக்கு ஆசி வழங்குவார்கள் என்பது ஆன்றோர் வாக்கு.

கும்பாபிஷேகத்தன்று வணங்க முடியாதவர்கள் அதனைத் தொடர்ந்து நடைபெறும் 48 நாள் மண்டல பூஜையில் கலந்து கொண்டு கடவுளை வணங்கினாலும் இறைவன் திருவருள் நிரம்ப துணை செய்யும்.

பழமை வாய்ந்த கோயில் கோபுரங்களை தரிசனம் செய்யும்போதும், கோயிலுக்குள் நாம் நுழையும் போதும், ஓர் அற்புதமான சக்தி நம் உடலில் ஊடுருவிச்செல்வதை பலர் உணர்ந்திருக்கலாம்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஆலய மகா கும்பாபிஷேகத்தில் உடலால், மனத்தால், பொருளால் உதவி செய்வது, கும்பாபிஷேகம் காண்பது, அதில் பங்கு கொள்வது என்பது வாழ்நாளில் கிடைப்பதற்கரிய ஒரு வாய்ப்பாகும். இந்த அறிய வாய்ப்பினை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்பவர்கள், வாழ்நாளில் சகல விதமான வேண்டுதல்களும் நிறைவேற்றப்பட்டு, பொருளாதார முன்னேற்றத்துடன், குடும்ப ஒற்றுமையுடன், மன மகிழ்ச்சியுடன், இறைவன் திருவருள் கூடி வர வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.

குலம் தழைக்க, வளம் பெருக, நலம் சிறக்க, அனைத்து ஆலய கும்பாபிஷேகத்திலும் முடிந்த வரை பங்கு பெறுவோம், பயன் பெறுவோம், நலன் பெறுவோம்.

வாழ்க வளமுடன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக