கஷ்டம் என்பதற்காக கடவுளைத் திட்டலாமா?
தேகம், மனம், சாஸ்திரம், தீர்த்தம் முதலிய பல சவுகரியங்கள் இந்த உலகத்தில் தான் நமக்குக் கிடைக்கும். நாம் வாக்கினாலும், மனத்தினாலும், கை, கால் முதலியவற்றாலும் பாவம் செய்துகொண்டே இருக்கிறோம். அந்தப் பாவங்களையெல்லாம், வாக்கு, மனசு, அவயவங்களைக் கொண்டே புண்ணியம் செய்து கரைத்திட வேண்டும்.
எல்லோரும் அவரவர் தர்மத்தைக் காப்பாற்றிக் கொள்ளப் பயன்படுபவைதாம் ஆசாரங்கள். நமக்கு அர்த்தம் தெரியவில்லை என்பதற்காக அவற்றை விட்டுவிடக் கூடாது.
நம் துக்கங்களை எல்லாம் ஞானமாகிய தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும். அப்போது ஜலத்துக்குள் மூழ்கிய குடம் மாதிரி துக்கம் பரம லேசாகிவிடும்.
'ஏழு அஞ்சில்' என்று ஒரு மரம் உண்டாம். அதன் காய் முற்றியவுடன் பூமியில் விழுந்து உடையும். உடனே உள்ளே இருக்கிற விதைகள் ஏதோ ஒரு ஆகர்ஷண சக்தியால் நகர்ந்து நகர்ந்து வந்து, மறுபடியும் தாய் மரத்தோடேயே ஒட்டிக் கொள்ளும். ஒட்டிக்கொண்டபின் மூலமான மரத்துக்குள்ளேயே மறைந்து விடும் என்கிறார்கள். பகவானிடம் இருந்து பிரிந்து வந்திருக்கிற நாமும், இப்படியே அவன் பக்கமாக நகர்ந்துபோய் முடிவில் அவனிடம் ஒட்டிக்கொண்டு ஒன்றாகிவிட வேண்டும்.
நாம் பக்தி பண்ணுகிறோம். ஆனால் எப்படி? கஷ்டம் வந்தால் மட்டும் அது நிவர்த்தியாகப் பெரிய பூஜை, சாந்தி எல்லாம் செய்கிறோம். நிவிர்த்தியானால் அநேகமாகப் பூஜையையும் அதோடு விட்டுவிடுவோம். ஆகாவிட்டாலோ சுவாமியை திட்டுவோம். எனவே, நமக்கு உண்மையான ஞானமும் பக்தியும் வர வேண்டும்
இந்த உலகத்தில் பிறந்த எல்லா உயிரினங்களும் ஒரு நாள் இந்த உலகை விட்டு பிரிந்து செல்லத்தான் வேண்டும். மனிதர்களாகிய நாம், ஆடு மாடு மாதிரி இறக்க கூடாது. ஆனந்தமும், அமைதியும் நிரம்பி அதன்பின் இந்த உடலில் இருந்து உயிர் பிரிந்தால் அதுதான் பூரணத்துவம் ஆகும்.
பூரணத்துவத்திற்கு வேண்டிய காரியங்களை நாம் செய்வதாக இருந்தால் நம்மை நாம் அறிய வேண்டும். நமக்கு சாப்பாடு வேண்டும். உத்தியோகம் வேண்டும். கல்யாணம் செய்து மக்களை பெற்று இல்லற தர்மத்தை கடைப்பிடித்தாக வேண்டும்.
ஒழுக்கமாக நான்கு பேருக்கு உதவியாக நல்ல பெயருடன் வாழ்ந்த மனிதன், இந்த உலகத்தை விட்டு பிரியும் போது சமுதாயம் அவனுக்காக கண்ணீர் வடிக்கிறது. தானும் அமைதியடைந்து பிறருக்கும் தன்னால் முடிந்தவரை அமைதியை தந்து வாழக்கற்று கொள்பவனே மனிதர்களுள் சிறந்தவனாகிறான்.
தாயிற் சிறந்த தெய்வம் இல்லை; சந்நியாசம் வாங்கிவிட்ட மகன் எதிரே வந்தால் தந்தையாக இருந்தாலும் வணங்க வேண்டும். ஆனால் சந்நியாசம் வாங்கிவிட்டாலும் தாயை வணங்கித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் தாயை விட சிறந்த தெய்வம் வேறெதுவும் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக