பழனி அருகே ஆண்டிபட்டி மலைப்பகுதியில் 3000 ஆண்டு பழமையான சங்ககால குகை ஓவியங்கள், வாழ்வியல் தடங்கள் ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டன.
பழனி அருகே ஆண்டிபட்டி மலைப்பகுதியின் மேற்கே உள்ள ஒரு குகையில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, முனைவர் கன்னிமுத்து, ஆர்வலர்கள் பழனிச்சாமி, ராஜா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டபோது சுமார் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்ககால ஓவியங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது:
10-க்கும் மேற்பட்ட தொகுதிகளாக ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. சுண்ணாம்பு, மூலிகை மற்றும் மரப்பிசின் கொண்டு வெள்ளை நிறத்தில் வரையப்பட்டுள்ள இந்த ஓவியங்களில் பல நிறம் மங்கியுள்ளது.
காதலையும், வீரத்தையும் இரு கண்களாக கொண்டு வாழ்ந்த சங்ககாலத் தமிழ் மக்களின் வாழ்வியல் அற்புதங்களை இந்த ஓவியங்கள் பிரதிபலிக்கின்றன. ஒரு ஓவியத்தில் விழாச்சடங்கிற்காக ஏராளமான பெண்கள் கூட்டமாக பானைகளில் தண்ணீர் கொண்டு செல்வது போலவும், மற்றொரு ஓவியத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லோரும் கூட்டமாக கைகோத்து மகிழ்ச்சியுடன் நடனமாடுவது போலவும் வரையப்பட்டுள்ளது.
மற்றொரு ஓவியத் தொகுப்பில் குழந்தைகள், ஆண்கள், பெண்கள் திருவிழாவுக்காக ஒரு ஆட்டை பலியிட அழைத்துச் செல்வது வடிக்கப்பட்டுள்ளது. மற்றொரு ஓவியத்தொகுப்பு படக்கதை போல வரையப்பட்டுள்ளது. சில ஓவியங்கள் அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளது. இப்பகுதியில் சங்ககால மனிதர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக அவர்கள் பயன்படுத்திய ஓடுகள் கிடைத்துள்ளது. இந்தக் குகை 2 ஆயிரம் ஆண்டு முதல் 3 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய இடைப்பட்ட காலத்தில் தொடர்ச்சியாக பயன்பாட்டில் இருந்துள்ளது எனத் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக