1,000 ஆண்டுகளைக் கடந்து தமிழினத்தின் பெருமைமிகு அடையாளமாக உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில். எத்தனையோ இயற்கைச் சீற்றங்கள், அந்நியர்களின் படையெடுப்புகள்... அனைத்தையும் தாங்கி, காலத்தின் சாட்சியாக கம்பீரம் குலையாமல் நிற்கும் தஞ்சை பெரிய கோயிலில் 1032-ம் ஆண்டு சதயவிழா இன்று (29.10.2017) தொடங்கி நாளை வரை நடக்கிறது.
தஞ்சை பெரிய கோயில்
தஞ்சைப் பெரிய கோயில், ஏராளமான அற்புதங்களைத் தன்னுள்ளே பொதிந்துவைத்திருக்கிறது. புவி அச்சின் சாய்வுகளைக் கணித்து, மிக நுட்பமாக அடித்தளத்தை அமைத்து, இருகாற்படை நுட்பத்தில் தொடங்கி, கனமில்லாத ஒற்றைக்கல்லால் கோபுரத்தை வடிவமைத்து நிறுத்தியிருக்கிறார்கள் சோழச் சிற்பிகள். புவியின் சுழற்சிக்கேற்ப தன்னைத்தானே தகவமைத்துக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட இக்கோயிலின் கட்டுமான நுட்பம் உலக வல்லுநர்களை எல்லாம் விழியுயர்த்தி வியக்கவைக்கிறது.
ஒவ்வொரு கல்லிலும் கலைநயம். ஒவ்வொரு சிற்பத்திலும் ஓராயிரம் கதைகள். வழிபாட்டுக்குரிய ஆலயமாக மட்டும் அல்லாமல், வங்கியாக, கலைக்கூடமாக, சமூக நிர்வாகத்துக்கான ஒருங்குகூடு மையமாக விளங்கியிருக்கிறது இந்தப் பெரிய கோயில். இதை இராஜராஜேச்வரம் என்று குறிப்பிடுகின்றன இங்குள்ள கல்வெட்டுகள்.
கல்லணை நீர் தழுவிச்செல்லும் திருச்சுற்று மாளிகை, நெடிதுயர்ந்த திருவாயில்கள், வான் கயிலாயமாகவே விளங்கும் விமானம், இயற்கையின் அத்தனை அம்சங்களையும் அணுக்கமாகச் சுமந்துகொண்டிருக்கும் சிற்பங்கள். என பிரபஞ்சத் தத்துவத்தின் கட்டுமான மொழிபெயர்ப்பாக இருக்கிறது இந்தக் கோயில்.
சிற்பங்கள்
காஞ்சிபுரத்தில் ராஜசிம்மப் பல்லவனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயில்தான் பெரிய கோயில் எழுவதற்கான ஆதாரம். அக்கோயிலின் அழகிலும் கலையிலும் மயங்கிப்போன ராஜராஜன், தன் தலைநகரில் அப்படியான ஒரு கலைக்கோயிலை எழுப்ப வேண்டும் என்று விரும்பினான். அதன் விளைவுதான் இப்பெரிய கோயில்.
தஞ்சை பெரிய கோயில் உருவாக்கத்துக்குப் பல நூறு பேர் துணை நின்றிருக்கிறார்கள். ஒவ்வொரு கல்லிலும் ஒவ்வொருவரின் உழைப்பு இருக்கிறது. பொருள் படைத்தோர் பொருள் தந்தார்கள். இல்லாதோர் கல் தந்தார்கள். எல்லோரின் பெயரும் கல்வெட்டுகளில் இடம் பெற்றிருக்கிறது.
சில வருடங்களுக்குத் திருப்பணி செய்தபோது திருச்சுற்று மாளிகையின் அஸ்திவாரத்தில் ஏராளமான முண்டுக்கற்கள் கிடைத்தன. ஒவ்வொரு கல்லிலும் ஒவ்வொருவரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. பொன்னள்ளி கொடுத்தோர் முதல் கல் கொடுத்தோர் வரை எவரின் பெயரும் வரலாற்றில் விட்டுப்போய்விடக் கூடாது என்பதில் ராஜராஜன் காட்டிய அக்கறை வியக்கவைக்கிறது.
அழகிய தோற்றம்
இக்கோயிலுக்கு ஏராளமானோர் பங்களிப்புச் செய்திருந்தாலும் மிகவும் குறிப்பிடத்தகுந்தவர்கள் 12 பேர். அரசன் ராஜராஜன், தலைமைத் தச்சன் குஞ்சரமல்லன், அவனது உதவியாளர்கள் நித்த வினோதப் பெருந்தச்சன், கண்டராதித்த பெருந்தச்சன். பெரும் கொடை வழங்கிய ராஜராஜனின் சகோதரி குந்தவை, பல்வேறு கட்டுமானப் பணிகளில் பங்கெடுத்துக்கொண்ட ராஜராஜனின் சேனாபதி கிருஷ்ணன் ராமன், நிர்வாக அதிகாரி பெய்கைநாட்டுக் கிழவன் தென்னவன் மூவேந்த வேளாண், ராஜராஜனின் குருமார்கள் ஈசான சிவபண்டிதர், சர்வ சிவ பண்டிதர், மகன் ராஜேந்திரன், கோயிலின் தலைமைக் குரு பவனப்பிடாரன், கல்வெட்டுகளைப் பதிப்பித்த இரவி பாருளுடையான்..!
தஞ்சைப் பெரியகோயிலைக் கட்டியது யார் என்பது பற்றி நெடுங்காலம் சர்ச்சைகள் இருந்தன. தஞ்சையை ஆண்ட கரிகாலன் தீரா நோயால் தவித்ததாகவும், இந்தப் பெரிய கோயிலைக் கட்டி இங்குள்ள சிவகங்கைத் தீர்த்தத்தில் மூழ்கியெழுந்ததால் நோய் தீர்ந்ததென்றும், 'பிரகதீஸ்வர மகாத்மியம்' என்ற நூல் சொல்கிறது. 'கிருமி கண்ட சோழன்' என்ற கரிகாலனின் பட்டப் பெயரை இதற்கு ஆதாரமாகச் சுட்டிக்காட்டியது அந்த நூல். ஆராய்ச்சியாளர் ஜி.யு.போப், 'காடுவெட்டிச் சோழன் என்பவனே பெரிய கோயிலைக் கட்டினான்' என்று என்று எழுதினார்.
1886-ம் ஆண்டில், ஹீல்ஷ் என்ற ஜெர்மானிய அறிஞர் இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகளை ஆய்வுசெய்யும் பணியில் இறங்கினார். ஆறு ஆண்டுகால தீவிர உழைப்பில் கல்வெட்டுகளைப் படியெடுத்து ஆராய்ந்த ஹீல்ஷ், பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீஸ்வரம் என்ற வரியை முன்வைத்து, 'பெரிய கோயிலைக் கட்டியவன் ராஜராஜ சோழனே' என்று உறுதிசெய்தார்.
பிரமாண்ட தோற்றம்
தஞ்சை பெரிய கோயில் அமைந்திருக்கும் பகுதி சுக்கான் பாறைகள் நிரம்பியது. இப்படி ஒரு சுக்கான் பாறை நிலத்தில் இவ்வளவு உயரம் கொண்ட ஒரு கோயில் எப்படி நிற்கிறது..? அதுதான் அக்காலத் தமிழர்களின் கட்டுமான நுட்பத்தின் சிறப்பு. இது குறித்து, கோயில்தென்னன் மெய்மன் கட்டடக்கலை கலைஞரும், ஆராய்ச்சியாளருமான தென்னன் மெய்ம்மன் விரிவாகப் பேசுகிறார்.
"பெரிய கோயிலின் விமானம் மிகத் திறமையான தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சுக்கான் பாறை நிலப்பரப்பில் 350 அடிக்குத் தொட்டி போன்ற பகுதியை உருவாக்கியிருக்கிறார்கள். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்த காட்டாறுகளில் இருந்து மணலைக் கொண்டு அத்தொட்டியில் கொட்டியிருக்கிறார்கள். அதன் மேல் மரக்கால் வடிவில் அடித்தளம் அமைத்து கனமான கல் பொருத்தி தரைமட்டத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதுவரை ஒற்றைச் சுவராகக் கொண்டு வந்து தரைக்கு மேலே இரட்டைச் சுவராகக் கொண்டுபோய் கோபுரமாக உயர்த்தியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையின் வடிவத்தில் இருக்கிறது விமானக் கட்டுமானம். இதற்குப் பெயர், 'டைனமிக் ஆர்க்கிடெக்சர்'.
இதன் சிறப்பு என்னவென்றால், பூமியின் ஆட்டத்துக்கேற்றவாறு கோபுரமும் அசைந்து தன்னைத் தகவமைத்துக்கொள்ளும். அதனால்தான் எல்லா இயற்கைச் சீற்றங்களையும் தாக்குப்பிடித்து நிற்கிறது. பெரிய கோயில் இறைவனை `ஆடவல்லான்’ என்று சொல்வார்கள். தமிழகத்தில் எந்தப் பகுதியிலுமே இல்லாத தலையாட்டி பொம்மை தஞ்சாவூரில் மட்டும் எப்படிக் கிடைக்கிறது என்ற கேள்விக்குப் பதில், அந்தப் பொம்மையின் பெருவடிவம்தான் பெரியகோயில் என்பதுதான்..." என்கிறார் அவர்.
முகப்பு
பெரிய கோயிலின் பிரதான நுழைவு வாயிலுக்குக் கிழக்கில் உடையார் சாலை இருக்கிறது. உள்ளே அக்னிதேவர் சந்நிதி இருக்கிறது. இந்த உடையார் சாலையில் 240 சிவயோகியர்கள் தங்கி, ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் 10 பேர் கொண்ட குழுவாகப் பிரிந்து 24 திருவிழாக்களை நடத்தியதாகவும் கல்வெட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கோயிலில் உள்ள செப்புத்திருமேனிகள் பற்றிய பல செய்திகள் இந்த உடையார் சாலையில் கல்வெட்டுகளாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு தூணும் புத்தகங்களைப்போல எழுத்துகளால் நிறைந்திருக்கின்றன.
கேராளந்தக வாசல், ராஜராஜன் திருமண்டபம், திருச்சுற்று மாளிகை, அக்னி தேவர். எமராசா, பரிவார ஆலயத்துப் பிள்ளையார், உமா பரமேஸ்வரியார்... என்று பல பெயர்கள் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. ஆனால், சிவலிங்கம் என்ற பெயர் எந்த இடத்திலும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. `உடையார் ஸ்ரீ ராஜராஜேஸ்வரமுடையார்’ என்றே இறைவனைக் குறிப்பிடுகின்றன கல்வெட்டுகள்.
இங்கிருக்கும் நந்தி மண்டபம், நந்தி, அம்மன் சந்நிதி, வாகன மண்டபங்கள் அனைத்தும் பிற்காலக் கட்டுமானங்கள். விமானத்தை ஒட்டி, கருவறைக்குத் தெற்கேயுள்ள தட்சிணாமூர்த்தியை உருவாக்கியது மராட்டியர்கள். வாராகியும் அண்மைக்கால வருகைதான். மகா மண்டபத்தின் மேற்பகுதியும் பிற்காலக் கட்டுமானம்தான். கோயிலைச் சுற்றியிருக்கும் திருச்சுற்றுமாளிகை, ராஜராஜன் காலமான பிறகு கட்டப்பட்டது.
கல்வெட்டுகள்
"முகப்பில் உள்ள ஐந்து தளங்களைக் கொண்ட கேரளாந்தகன் திருவாயிலில் முதல்தளம் தவிர, மற்றவை செங்கற்களால் கட்டப்பட்டவை. குடவாயில் பாலசுரமணியன்இந்தச் செங்கற்கள் சிறப்பான தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டவை. அடப்பமரம், மாமரம், கடுக்காய் மரம், தாணிக்காய் மரம் ஆகியவற்றின் பட்டைகளையும், திரிபலா எனப்படும் கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகியவற்றையும் கஷாயமாக்கி, மண்ணில் ஊற்றி, ஐந்து மாதங்கள் புளிக்கப் புளிக்கப் பிசைந்து, செங்கலாக அறுத்து, சுட்டு, ஒரு மாதம் ஆறவிட்டு, தண்ணீரில் ஊறவிட்டு, நன்கு உலரச்செய்து அதன் பிறகே கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 1,000 ஆண்டு சரித்திரத்தில் தஞ்சையை ஐந்து முறை பூகம்பங்கள் தாக்கியுள்ளன. அனைத்தையும் தாங்கி கனகம்பீரமாக நிற்கிறதென்றால், நுட்பமான கட்டுமானமே காரணம்.
கருவறையைச் சுற்றி, நான்கு சுவர்கள். வெளியே சுற்றரை. அதன் வெளியே நான்கு சுவர்கள். இந்த எட்டு சுவர்களையும் இணைத்து, அதன் மேல் கூடையைக் கவிழ்த்து வைத்தாற்போல விமானம் அமைக்கப்பட்டுள்ளது. தரையிலிருந்து 216 அடி உயரம் கொண்ட இந்தக் கோபுரம் 13 அடுக்குகள் உடையது. நான்கு பட்டை வடிவில், வெற்றிடமாகக் கூம்பிச் செல்லும் இதன் உச்சியில் 12 அடி உயரமுள்ள கலசம் பொருத்தப்பட்டுள்ளது..." என்கிறார் வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன்.
பெருவுடையார்
மாலிக்குகளும், நவாப்களும், சுல்தான்களும் பலமுறை தஞ்சை பெரிய கோயிலைச் சூறையாடினர். பிரெஞ்சுக்காரர்களும், ஆங்கிலேயரும் பீரங்கிகளைவைத்துத் தகர்த்தனர். 30 ஆண்டுகளுக்கும் மேல் சிப்பாய்களின் கூடாரமாக இருந்த பெரிய கோயில் பல தாக்குதல்களைச் சந்தித்தது. இருந்தும் அதன் கம்பீரத்தை யாராலும் சிதைக்க இயலவில்லை. அதனால்தான் அது இன்றும் பெரிய கோயிலாக இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக