தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, December 13, 2015

உறவுகளின்,ஒற்றுமைக்கு எது எதிரி ,,,,,,,,,,,,,,,


உறவுகளின்,ஒற்றுமைக்கு எது எதிரி ,,,,,,,,,,,,,,,

அக்கா பெரிய பிள்ளையான பொழுது தட்டியால் மறைப்பு வைத்து கட்டி அம்மா அவளை அன்பாக பராமரித்தது இன்றும் ஞாபகத்தில் நிற்கின்றது.அன்றுதான் அப்பா முதன் முதலில் கண்கலங்கி நான் பார்த்து இருக்கின்றேன்.அதுவரை அந்த சிறு குடிசையில் அண்ணன்கள் மூன்று பேரும் அன்பை எங்கள் மீது பொழிய ,தம்பிகள் இருவர் மீதும் நானும் அக்காவும் என் தங்கைகளும் பாசத்தை காட்ட தாயும் தந்தையும் எங்கள் எல்லோரிலும் தங்கள் உயிரையே வைத்து இருக்க ,அந்த சிறு குடிசையில் சந்தோசம் பொங்கும் பறவைகளாக நாங்கள் சிறகடித்து பறந்தோம்.

மூன்று வேளை எங்கள் உணவுக்கு எங்கள் பாட்டன் பாட்டி விட்டு சென்ற அந்த இரண்டு தோட்டங்களும் எங்களுக்கு நிறையவே உதவிய காலம் அது.புகையிலை வெங்காயம் மிளகாய் என்று அந்த பெரும் போகத்தில் மட்டும் வான மழையை நம்பி பயிர் செய்து அதனால் வந்த வருவாயில் ஆண்டு முழுவதும் எங்கள் குடும்ப வாழ்கை வண்டில் சந்தோசமாக ஓடிகொண்டே இருந்தது.ஒரு இரு வருடங்களில் வான மழை கொஞ்சம் எங்களை ஏமாற்றிய காலமும் இருந்தது.அந்த வேளையில் அம்மாவின் கழுத்தில் மஞ்சள் கயிற்றை மட்டுமே எங்கள் கண்ணால் காண கூடியதாக இருந்தது.ஆனாலும் அடுத்த சித்திரை மாத வருடபிறப்பு பிள்ளையார் கோவில் தேர் திருவிழா அன்று தங்க கொடி அவா கழுத்தில் மின்னியது.அதுவும் நினைவு இருக்கிறது.

தை பொங்கலுக்கு வெங்காயம் விற்ற காசிலும் சித்திரை வரிடப்பிறப்புக்கு மிளகாய் விற்ற காசிலும் தவறாமல் புத்தாடை பெற்றவர்கள் வாங்கி தந்த நாட்கள் அது.வருடத்தில் இரண்டே இரண்டு புது உடுப்பு கிடைத்தாலும்,வருடம் முழுவதும் நாங்கள் சந்தோசமாகவே இருந்தோம்.

எங்கள் கல்விக்கு கண் கொடுத்த பிள்ளையார் கோவிலுக்கு நேரே இருந்த கணேசா வித்தியாசாலை எங்கள் வாழ்வின் பக்கங்களை வசந்தமாக்கி கொண்டு இருந்தது.காலையில் எழுந்து அவர் அவருக்கு தீர்மானிக்கப்பட்ட அன்றாட வேலைகளை செய்துவிட்டு,அதே சிறு குடிசையில் பள்ளி ஆடை அணிந்து சகோதரங்கள் ஒருவர் கையை ஒருவர் பிடித்து கொண்டு அந்த பெரும் குளத்து வயல் வெளியில் நடந்து போன நாட்களை நினைக்கும் பொழுது இன்றும் அந்த இனிமையான நாட்கள் நெஞ்சை நினைவுகளால் தடவுகின்றது.கல்வியிலும் நாங்கள் சாதித்த நாட்கள். இன்னாருடைய பிள்ளை,இவனின் தங்கை அவளின் தங்கை என்ற புகழ் பெயர்கள் எங்கள் ஊரில் பலர் பேச கேட்ட நாட்களும் நினைவில் இருக்கிறது.

அண்ணன்கள் எட்டாவது ஒன்பதாவது வகுப்பு படிக்கும் பொழுதே பகுதி நேர வேலைகளுக்கு தோட்டம் கொத்த வேலி அடைக்க என்று போய் குடும்ப பொருளாதாரத்தை கொஞ்சம் தூக்கி நிறுத்தினார்கள்.நாங்கள் வளர வளர எங்கள் தேவைகள் அதிகரிக்க புத்தகம் கொப்பி வாங்க சோப்பு சீப்பு கண்ணாடி பொட்டு வாங்க என்று எங்களுக்கு அவர்கள் உழைக்கும் அந்த சிறு தொகை பணத்தை தந்து உதவி அம்மா அப்பாவுக்கும் முடியுமான வரை கொடுத்தார்கள்.தம்பிகள் கால்நடைகளை வளர்த்தார்கள்.அதிலும் அவர்கள் வருடத்தில் சில வற்றை விற்று அந்த பணத்தையும் அம்மாவிடம் கொண்டுவந்து கொடுப்பார்கள்.நாங்களும் தோட்டத்தில் வீட்டில் மனம் கோணாமல் எங்களால் முடியுமான சகல வேலைகளையும் செய்து கொடுத்து சந்தோசமாக வாழ்ந்தோம்.இப்படியாக சந்தோசமாய் எங்கள் வாழ்கை ஓடி கொண்டு இருந்த காலத்தில் அக்கா பெரிய பிள்ளை ஆகிவிட்டார்.

எல்லோருக்கும் சந்தோசம் அப்பா அம்மாவுக்கும் சந்தோசம் தான் .ஆனால் அப்பா கண்களில் இருந்து கண்ணீர் வந்தது அதற்கு காரணம் அறியும் வயது எனக்கு அப்பொழுது இல்லை.ஒரு தந்தையாய் அவர் அவரது கடமைகளில் இருந்து என்றுமே தவறியது இல்லை.ஆனால் அவரது கவலை வயதுக்கு வந்த பிள்ளைக்கு மறைப்பிடம் எவ்வாறு அந்த சின்ன குடிசைக்குள் உருவாக்குவது என்பதாகவே இருந்து இருக்கலாம் என்று அவர் அடுத்து தட்டி கட்டி குடிசையை பிரித்ததை வைத்து இன்று உணர்ந்து கொள்கின்றேன்.அதைவிட வேறு காரணங்களும் இருக்கலாம் அவை எனக்கு இன்றும் புரியாத புதிர்.

அக்கா பெரிய பிள்ளை ஆனதும் எங்கள் வாழ்வில் சில மாற்றங்கள் ஏற்பட்டது. மாமா கொழும்பில் இருந்து வந்து வெகு சிறப்பாக அக்காவுக்கு தண்ணீர்வார்ப்பு செய்தார்.நிறைய செலவு செய்து இருப்பார் என்று நினைகின்றேன் .வெகு விமரிசையாகவே மேளங்கள் தாளங்களுடன் பொய் குதிரை ஆட்டங்கள் என அக்காவை தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்று சீர்வரிசை செய்து சந்தோசமாக மாமாவும் மாமியும் ஊஞ்சல் கட்டி ஆட்டினார்கள் அந்த நாள் என்றுமே மறக்க முடியாத நாளாகவே இருக்கிறது.நான் எனக்கு அப்படி செய்யவில்லை என்று அன்று கவலை படவில்லை. ஏன் என்றால் நான் வேறு அக்கா வேறு என்று என்றும் பிரிவினை பார்க்காத நாட்கள் அது.அக்காவின் சந்தோசத்தில் குடும்ப சந்தோசத்தில் நாங்கள் எங்களை மறந்து குதுகலமாய் வாழ்ந்த நாட்கள்.

கொழும்பில் இருந்து வந்த மாமா பத்தாவது படிச்சு எஸ் எஸ் சி பரீட்சை எழுதி போட்டு நின்ற மூத்த அண்ணாவை தன்னோடு கொழும்புக்கு வேலைக்கு கூட்டி கொண்டு போக போவதாக அம்மா அப்பாவிடம் வந்து கேட்டார்.
எங்கள் எல்லோரிலும் விட எங்கள் வீட்டில் அண்ணா தான் கெட்டிகாரன். உண்மையை தான் சொல்லுகின்றேன் எங்கள் டாக்டராய் இருக்கும் கடைசி தம்பியை விடவும் எங்கள் வீட்டில் அண்ணா தான் கெட்டிகாரன்.அதற்கு சான்றாக அவனது பரீட்சை முடிவுகளும் அனைத்து பாடங்களிலும் சிறந்த முறையில் பாசாகி வந்த பொழுது அன்று ஊரில் இருந்தவர்கள் சந்தோஷ பட்டதும் நினைவில் இருக்கிறது.

அப்பாவும் அம்மாவும் அவன் நல்லா படிக்கின்றான் எங்களது கஸ்ரதுக்காக பிள்ளையின் படிப்பை குழப்ப நாங்கள் விரும்பவில்லை என்று கூறி இன்னும் 2 வரிடம் படிக்கட்டும் என்று கூறினார்கள்.ஆனால் அன்று அப்பாவின் மௌனமான அழுகையை அண்ணாவும் பார்திருகின்றான்.அவன் உடன அப்பா நான் மாமாவுடன் போகின்றேன் அப்பா நான் போய் வேலை செய்து உழைச்சு அனுப்பினால் தம்பி அவங்களையும் தங்கைகளையும் படிபிக்கலாம் அவர்கள் நீங்கள் நினைக்கின்ற மாதிரி படித்து நல்ல நிலைக்கு வரட்டும் அப்பா நான் மாமாவோடு போகின்றேன் என்று ஒரே முடிவாய் கூறினான்.

எங்களுக்கு ஒருவருக்குமே அண்ணாவை விட்டு பிரிய ஆசை இல்லை அதனால் நாங்களும் எங்களுக்கு எந்த பெரிய ஆசையும் இல்லை அண்ணா எல்லோரும் ஒன்றாகவே இருந்து படித்து நல்லா வருவம் நீயும் எங்களோடையே இரு அண்ணா என்று சொல்லி பார்த்தோம்.ஆனால் அவன் கேட்கவில்லை.காரணம் அவன் எல்லோரையும் விட குடும்ப நிலைமையை புரிந்துகொண்ட வயதில் இருந்தவனும் அறிவு முதிர்சியால் புரிந்துகொண்டவனும் ,

அண்ணா போய் வேலை செய்து உழைச்சு கொண்டு வந்துடுவன் நீங்கள் எல்லோரும் நன்றாக படியுங்கள் அண்ணா உழைச்சு காசு அனுப்புவன்.ஒவ்வொரு முறையும் அம்மன் கோவில் திருவிழாவுக்கு வருவன் உங்கள் எல்லோரையும் பார்க்க என்று கூறி தன் முடிவில் தீர்க்கமாய் இருந்தான்.

அவன் முடிவின் படியே இறுதியில் மாமாவோடு சென்று கஸ்ரப்பட்டு உழைத்து எங்கள் அனைவரையும் படிப்பித்து மற்ற அண்ணாமார் ,தம்பி அவங்களுக்கு சைக்கிள் வாங்கி கொடுத்து நாங்க இருக்க நல்ல கல் வீடு கட்டி அதை அக்காவுக்கு சீதனமாய் கொடுத்து திருமணமும் செய்து வைத்து ,எனக்கும் வெளி நாட்டு மாப்பிளை பேசி எனக்கும் சீதனம் தந்து என்னையும் திருமணம் செய்து கொடுத்து ,எனக்கு இளைய தங்கை மச்சானை காதலிக்கிறாள் என்று சொன்னதும் அவளையும் மச்சான் இருக்கும் நாட்டுக்கு அனுப்பி திருமணம் செய்து கொடுத்து விட்டு 9 வருடங்களின் பின்னர் அண்ணா முதல் முறையா ஊருக்கு வந்தான்.

அம்மா தன் அண்ணன் மகளுக்கு அவனை திருமணம் செய்து வைக்க கேட்டு சென்ற இடத்தில் அந்த மச்சாள் எங்கள் இரண்டாவது அண்ணனை விரும்புவதாக சொல்ல அது கொஞ்சம் பிரட்சனையாக இரண்டாவது அண்ணன் அவளை கூட்டி கொண்டு ஓடிவிட்டார்.மூத்த அண்ணனுக்கு அவவை செய்வதாக சின்னனின் இருந்தே அம்மா ஆசை காட்ட அவரும் அவவை மனதில் விரும்பி இருந்தவர்.அதனால் அவரால் வேறு ஒரு பெண்ணை உடன் செய்யும் மனம் இல்லாததால் கொழும்புக்கு திரும்பி சென்றுவிட, அப்பா அண்ணா பாவம் என்று தனது தங்கையின் மகளை பேசி செய்வம் என்று போய் கேட்ட இடத்தில் அவர்கள் தங்கள் மகள் படித்து அரசாங்க உத்தியோகம் செய்கின்றா நாங்கள் படிச்ச மாப்பிள்ளை பார்கின்றம் உங்கள் மூன்றாவது மகனுக்கு செய்யுறது என்றால் சரி என்று சொல்ல அப்பா கோவத்தில் பேசி போட்டு குடுத்த தேத்தண்ணியையும் குடிக்காம அப்படியே வைச்சு போட்டு வந்துட்டார்.அதுவும் ஒரு காதல் என்று தெரியுறதுக்கு முதலே அப்பாவுக்கு திடிரென்று மாரடைப்பு வந்து கடவுளுட்ட போய் விட்டார்.அப்பாவை பற்றி ஊரில சனம் நல்ல மனுஷன் அந்த மூத்த பிள்ளையின்ர யோசினையில திரின்சவர்.அதுதான் திடிரென்று ஆளை தாக்கி போட்டுது போய் சேர்ந்துட்டார் என்று கதைத்ததாகவும் அறிந்து கவலைபட்டேன்.

அப்பா இறந்ததுக்கு அண்ணா வந்து எல்லா கடமையும் செய்து போட்டு திரும்பவும் கொழும்புக்கு போய் அப்பாட ஆண்டு முடியுறதுக்கு முதலே மற்ற அண்ணாவும் மச்சாளை கல்யாணம் கட்டி போட்டான்.இந்த செயலால அண்ணாக்கு கோபம் வர எங்கள் எல்லோரிலும் கொஞ்சம் வெறுப்பும் வந்து இருக்கோணும் என்று நினைகின்றன்.அப்பாட ஆண்டு துவசதுக்கு ஊருக்கு வந்தவன் துவசத்தை முறைப்படி செய்துபோட்டு அம்மாவை மட்டும் கூட்டிக்கொண்டு போய் ஒரு கோவில்ல வைச்சு தன்னோட கூட வேலை செய்கின்ற அயலூர் பெடியனின் தங்கையை திருமணம் செய்துவிட்டான்.அண்ணியையும்கூட்டிக்கொண்டு கொழும்புக்கு போய்விட்டான்.

சில மாதங்கள் செல்ல நாட்டு நிலைமையும் கொஞ்சம் சரியில்லாம இருக்க இரண்டு தம்பிகளும் யாழில் பல்கலை கழகத்தில் படிச்சு கொண்டு இருந்தவங்கள் அதில ஒரு தம்பியும் ,என்ற கடைசி தங்கச்சியும் இயக்கத்துக்கு ஓடி போய்விட, எங்கள் குடும்ப நிலை மிகவும் மாறி போனது அம்மா அந்த தம்பியையும் தங்கையையும் நினைச்சு கோவில் கோவிலாக நேத்தி வைக்க அந்த கடவுள் அம்மா சொல்லுறதை கேட்காம தம்பியையும் தங்கையையும் ஆனையிறவு சண்டையில தன்னட்ட கூப்பிட அம்மாவும் கொஞ்சகாலத்தில அந்த ஏக்கத்தில் இருந்து மீள முடியாம அவன்களிட்டையே போய்விட்டா ,,நாட்டு நிலைமை சரி இல்லாம இருந்ததால நான் வெளிநாட்டில இருந்து ஊருக்கு போக முடியல .அண்ணா கூட போக முடியல ஊரில இருகின்ற சகோதரங்கள் கூட யாழுக்கு வர முடியாத நிலை கடைசி தம்பியும் ஒரு தங்கச்சியும் மட்டும் தான் நின்று அம்மாவுக்கு இறுதி கிரியைகள் செய்தார்கள்.

கடைசி தம்பி தன்ர படிப்பால லண்டனுக்கு வந்து அவனுக்கு மூத்த தங்கையையும் ஒரு விசா செய்து கூப்பிட்டு போட்டான்.வெளிநாட்டு மோகம் ஊர் முழுக்க பரவ அங்க இருந்து முத்த அண்ணாவை தவிர எங்கட எல்லா சகோதரங்களும் வெளிநாட்டுக்கு வந்து விட்டார்கள்.எங்கள் சகோதரங்கள் எல்லோரும் சின்னனில் இருந்தே நல்லா கஸ்ரப்பட்டு வேலை செய்வார்கள்.வெளிநாட்டில் வந்து எந்த வேலை என்று பாராமல் கிடைத்த வேலையை செய்து எல்லோரும் நல்லா முன்னேறி காணி வீடு சொத்து என்று வாங்கி எல்லாரும் நல்லா இருக்கின்றார்கள்.

வெளிநாட்டில் இருக்கும் எங்கள் சகோதரங்கள் இப்பவெல்லாம் ஒருவர் வீட்டுக்கு ஒருவர் வந்து உறவு கொண்டாடுவதில்லை எங்காவது கொண்டாட்டத்தில் கண்டால் ஒரு சிரிப்பு ஒரு கதை அவ்வளவுதான் அதுவும் சிலர் இல்லை .ஆனால் வீட்ட போய் உங்கட அக்கா கட்டின சாறிய பார்த்தாயா உங்கட அண்ணி போட்டு இருந்த நேக்ளச்சை பார்த்தாயா என்று பல மணித்தியாலங்கள் கதை ,சில நேரங்களில் ஒருவருக்கு ஒருவர் எதிர் எதிர் ராணுவங்கள் போல தொலை பேசியில் அண்ணாவை பற்றியும் வேறு ஊர்கதைகளும் கதைத்து சண்டை

பாவம் அண்ணா எங்களை எல்லாம் நல்லாக்கிவைத்த அண்ணா இன்று தனக்கு வேலை செய்ய உடம்புக்கு ஏலாத நிலையில் மூன்று பெண்பிள்ளைகளுடனும் மனைவியுடனும் மிகவும் கஸ்ரப்படுகின்றார்.பிள்ளைகள் மிகவும் கெட்டி தனமாக படிகின்றார்கள் மிகவும் அழகாகவும் இருக்கின்றார்கள்.சில வருடங்களில் மூத்தவள் மருத்துவராகி விடுவாள் மீண்டும் அந்த குடும்பம் தலை நிமிர்ந்துவிடும்.ஆனால் இன்று அவர்கள் கஸ்ரபடுகின்றார்கள் எவ்வளவு தான் கஸ்ரப்பட்டாலும் அண்ணா எங்களிடம் எந்த உதவியும் கேட்பதில்லை.சென்ற லீவுக்கு ஊருக்கு போன பொழுது அண்ணா என்னிடம் கேட்டது நான் தான் ஊரைவிட்டு வெளியில கல்யாணம் கட்டி போட்டன் என்ர ஒரு பிள்ளைக்காவது உன்ரை மகனை கட்டி வைப்பாயா அல்லது நாம இல்லா காலத்தில் நமது உறவு விட்டு போய் விடும் என்று மிகவும் பரிதாபமாககேட்டார்.

என் மகன் அவள் அவளுக்கு பெரிதாக படிக்கவில்லை என்றாலும் நானும் உறவு விட்டு போக கூடாது என்று ஓம் என தலையை மட்டும் ஆட்டி போட்டு வந்து இன்றுதான் என்ர மகனிடம் அப்பு என்ர ராசா நீ பெரிய மாமாட மகளை கல்யாணம் செய்யன் அப்பு என்று கேட்டேன்.அவன் உடன அதுகள் காட்டு சாமான்கள் நாகரீகம் தெரியாததுகள் அந்த காஞ்ச தீவில கிடக்கிறதுகளை கனடாக்கு கொண்டுவந்து என்ன செய்ய ,,நான் மாட்டன் சும்மா தேவையில்லாத வேலை பார்க்காமல் சும்மா இரு அம்மா என்று கூறு வீட்டு கதவை என் மார்பில் அடித்தது போல் அடித்து இறுக்கி சாத்திவிட்டு வெளியே போய்விட்டான்.எனது மனது கிடந்தது படபடக்குது.

நான் என்ன செய்ய உலகிற்கே நாகரீகம் கற்று கொடுத்த தீவு இவனுக்கு காஞ்ச தீவாக போய்ச்சு ,மன்னர்களும் முனிவர்களும் உலக அழகிகள் என்று தேடிவந்த பேரழகிகள் நாக கன்னிகைகள் வாழ்ந்த இடத்தில் வாழும் பிள்ளைகள் காட்டு விலங்குகள் போல தெரியுது.ஏன் இந்த நிலமை அன்று நாங்கள் பத்து பெரும் அம்மா அப்பாவும் இருந்த மாதிரி ஊரில குடிசைகளில் இருந்து இருந்தால் இந்த நிலமை வந்து இருக்குமா,,,இன்று எல்லாரிட்டையும் காசு சொத்து இருக்கு ஒருத்தர் வீட்டிலயும் சந்தோசம் இல்ல ,,,,,,,மனது அந்த நாள் சந்தோசத்தை தேடுது வருமா வருமா வருமா ,,,,,,அந்த தொலைபேசி அடிக்குது அதில என்ன குண்டு வரப்போகுதோ ,,,கலோ ,,,,,நான் அண்ணன் இலங்கையில் இருந்து கதைக்கிறன் ,,,,,,,,சொல்லுங்க அண்ணா ,,,,,உன்ர மருமகள் இறுதி பரீட்சையிலும் பாசாகி மருத்துவர் ஆகிவிட்டாள் ,,,,,,கல்யாணத்தை எப்ப வைப்பம் ,,,,,,,,,,,நன்றியுடன் ,,,சிவமேனகை ,,,,,,,,,,,,என் கருத்து:-இதுசொந்தக்கதையா?நீங்க சுவிஸ் என்றல்லவோ நினைத்தேன்,கனடாவா?நம் நாட்டின் அருமை தெரியாமல் பிள்ளை வளர்த்துல்லீர்களே,வருத்தமாக உள்ளது!ஈழத்து காட்டை விட கனடா மட்டுமா ஐரோப்பாவில் உள்ள நாடுகள் கூட மனநோயாளர்கள் நாடுகள்!இவர்கள் நம்நாட்டை காஞ்ச நாடாமோ!எங்களால் வருடம்பூராவும் ஒரு சாரத்தோட வெளியில படுக்கமுடியும்,கனடாவின் அந்நாள் அகதிகள் பிள்ளைகளால் அப்படிமுடியுமா?எங்கள் உணவுகள் மற்றநாள் மீதம் இருந்தால் மட்டுமே உண்போம்!கனடாவில் சமைத்துகுளிர்பெட்டியில் போட்டுவைத்து வருசமெல்லாம் சாப்பிடுகிறார்களே!காஞ்ச ரொட்டியாம் பிட்சாவை போல நம் உணவில் கேவலமானது உண்டா?இன்னும் எவ்வளவோ சொல்லலாம்!எங்கள் நாட்டை,பண்பாட்டை பிரிட்டிஸ் காரன் நன்கறிந்து துதிக்கின்றான்,நம் பிள்ளைகளோ!!இக்கரைக்கு அக்கரை பச்சைதான்,ஆனால் பச்சைபசேல்லென்றுஇருக்கும் நம் நாட்டை ஆறுமாதம் ஐஸ் க்கு அடியில் இருக்கும் எதிர் நாற்பது பாகையில் கிளிரில்உறைந்துபோகும் ஒருவர் குறையாக சொல்வதானால் அவருக்கு ...நான்சொல்லவிரும்பல,உங்க மருமகளுக்கு நல்லமாப்பிள்ளை தேடுவதே சிறப்பு!

No comments:

Post a Comment