தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, December 3, 2015

தவில் மேதை திரு தெட்சணாமூர்த்தி அவர்கள் இணுவிலா அளவெட்டியா???


இணுவிலா அளவெட்டியா???

இணுவில் மிக நீண்ட காலமாகவே கலைஞர்களால் நிரம்பிய ஊர். அதிலும் தவில் நாதஸ்வர மேதைகளும் நடனக் கலைஞர்களும் சங்கீத வித்துவான்களுமாகப் பெருமை சேர்க்க நாம் பெருமை கொண்ட ஊர்.
அப்படிப் பெருமை சேர்த்தவர்களுள் முக்கியமானவர் தவில் மேதை திரு தெட்சணாமூர்த்தி அவர்கள்.

அவர் 26.08.1933 ல் இணுவிலில் விஸ்வலிங்கத்துக்கும் ரத்தினத்துக்கும் மூன்றாவது மகனாகப் பிறந்தார். இவரது இளமைப் பெயர் ஞானபண்டிதன். பின்னர் காலப்போக்கில் இறைநம்பிக்கை காரணமாக அவரைத் தெட்சணாமூர்த்தி என்று அழைக்க, இவரின் இயற்பெயர் மறைந்து தெட்சணாமூர்த்தியே இவர் பெயரானது.
இணுவிலில் கந்தசாமி கோவில் வீதியில் காலையும் மாலையும் தவில், நாதஸ்வரம் வாசிக்கும் சத்தம் கேட்டபடியே இருக்கும். நடனக் கலைஞர்களின் காற்சதங்கை ஓசையும், அதைக் கேட்டபடி அவ்வீதியாற் செல்வதே ஆனந்தம். அப்படியிருக்க, தன் தந்தையின் தவில் வாசிப்பைக் கேட்டு அதிலேயே வளர்ந்த ஞானபண்டிதன் சாதாரணராக இருப்பாரா???

தந்தையே அவரது முதற்குருவாக ஐந்து வயதிலேயே தந்தையிடமும் அதன்பின் சகோதரியின் கணவனான கிரிஷ்ணமூர்த்தி என்பவரிடமும் தவில் பயின்றார் இவர். அவரின் ஏழாவது வயதில் வண்ணார் பண்ணை காமாட்சி சுந்தரம் பிள்ளையிடமும் ஆறு மாதங்கள் பயிற்சி பெற்று தேர்ச்சியும் பெற்றார். அவரது சகோதரர்கள் ருத்ராபதி, கோதண்டபாணி ஆகியோர் நாதஸ்வரம் வாசிக்க காமாட்சி சுந்தரம் பிள்ளையுடன் சேர்ந்து இணுவில் மஞ்சத்தடி முருகன் ஆலயத்தில் தெற்கு வீதியில் இவரது அரங்கேற்றம் நடைபெற்றது.

அதன் பின்னர் நாச்சியார் கோயில் ராகவப்பிள்ளை என்னும் வித்துவானுடன் சேர்ந்து கொழும்பில் அவருக்கிணையாகத் தவில் வாசித்துத் தன் திறமையை நிலைநாட்டியதுடன் நின்றுவிடாது தன் பன்னிரண்டாவது வயதில் தென்னிந்தியாவுக்குச் சென்று ராகவப்பிள்ளையிடம் பயிற்சி பெற்று தன்னிகரற்ற மேதையானார்.

இந்தியாவின் நாதசுர மேதைகள் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், காரைக்குறிச்சி அருணாசலம்,சேக் சின்ன மௌலானா, டி.என். ராஜரத்தினம் பிள்ளை போன்றவர்களுக்கு வாசித்துப் பாராட்டும் பெற்றார். ஈழத்திலும் எம். பஞ்சாபிகேசன்,பி.எஸ் ஆறுமுகம் பிள்ளை, என். கே பத்மநாதன் , திருநாவுக்கரசு போன்றோருக்கும் வாசித்த பெருமை உண்டு.

தெட்சணாமூர்த்திக்கு சென்னையின் "தங்கக் கோபுரம்" விருது கிடைத்தது. திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளை அவர்களின் நினைவு விழாவில் தங்கத்தாலான தவிற்கேடயம் 1968 இல் வழங்கப்பட்டது.

தவில் வாத்தியத்தில் முதன் முறையாக பதினொரு எண்ணிக்கை கொண்ட கதி ஒன்றை அமைத்து அதற்கு உத்தரகதி எனப் பெயர் வைத்தார்.
ஈழத்து கலைஞர்கள் எல்லாம் சேர்ந்து தெட்சணாமூர்த்தி அவர்களுக்கு லய ஞான குபேர பூபதி என்னும் பட்டத்தைக் கொடுத்துச் சிறப்பித்தனர். இணுவில் மஞ்சத்தடியில் அவர் தவில் வாசிப்பது போல சிலை ஒன்று அவருக்கு வைக்கப்பட்டுள்ளது.
சுப்புடு என்பவர் இந்தியாவின் கலைஞர்களை அக்குவேறு ஆணிவேறாக விமர்சிப்பதில் வல்லவர். அவரிடம் குறை கேட்காத ஒரேயொரு கலைஞர் தெட்சணாமூர்த்திதான் என்று கூறுவர்.
பிற்காலத்தில் அவர்மேல் பொறாமை கொண்ட சிலர் அவருக்கு நச்சு மருந்து கொடுத்து அதனால் அவர் நோய்வாய்ப்பட்டு இறந்தார் என்றும் எம்மூரில் கதை உண்டு. அவர் இறந்தது 13.05.1975 விக்கிபீடியாவில் 13.05.1978 என்று தவறாகப் போட்டுள்ளனர்.

தன் பதினேழாவது வயதில் அளவெட்டியைச் சேர்ந்த மனோன்மணியைத் திருமணம் செய்து அவ்வூரிலேயே தன் வாழ்வைத் தொடர்ந்தார். அந்த நேரத்தில் அவர் மிகப் பிரபலமாக இருந்ததனால் அளவெட்டியூரார் தம்மூருக்குப் பெருமை சேர்க்க அவரின் பெயரின் முன்னால் அளவெட்டியைச் சேர்த்து மகிழ்ந்தனர்.
ஈழத்தில் அளவெட்டியில் அடிக்கும் நோட்டீஸ் இணுவிலில் உள்ளவர் பார்க்கப்போவதில்லை. அதனால் அளவெட்டி என்று அவரின் பெயரைப் போடுவது தவறான விடயம் என்று யாரும் பார்க்கவுமில்லை. அதுபற்றித் தெரிந்திருக்கவுமில்லை. இன்றைய முகநூல் பதிவுகளும் சிலரது அறிவற்ற வியாக்கியானங்களுமே என்னை இதுபற்றி எழுதத் தூண்டியது

அளவெட்டியில் வசிப்பவர்கள் கூட அவரை அளவெட்டி என்று எண்ணுமளவு அவரின் பின்னால் அளவெட்டியை ஒட்டிய பெருமை அவ்வூர் மக்களின் திறமையா பேராசையா என்று தெரியவில்லை.
எனக்கு ஒரு சந்தேகம். ஒருவர் பிறந்து வளர்ந்து ஓடிவிளையாடிக் கலை பயின்ற இடம் தான் அவரது சொந்த இடமா ??? அல்லது திருமணம் செய்து பின்னர் வாழ்ந்த இடம் தான் அவரது ஊர் என்று சொல்வதா??? என்று.

No comments:

Post a Comment