தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 11 டிசம்பர், 2015

முள்ளியான் காட்டுப்பகுதியில் அழிவடைந்த புராதன வீடு !!


கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட இயக்கச்சிக் கோட்டையில் இருந்து தென்கிழக்கே ஏழு கிலோமீற்றர் தொலைவில் உள்ள நித்தியவெட்டை, முள்ளியான் என அழைக்கப்படும் காட்டுப்பகுதியில் அழிவடைந்த புராதன வீடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தொல்லியற் சிறப்புக்கலை மாணவர்களுக்கு அவ்வூர் மக்கள் அங்குள்ள காட்டுப் பகுதியில் அழிவடைந்த அரண்மனை ஒன்று இருப்பதாகக் கூறப்பட்ட தகவலை அடுத்து அவ்விடத்திற்குச் சென்று தொல்லியல் ஆய்வினை மேற்கொண்டோம்.
இக்கட்டிட அழிபாடுகளை அவ்வூர் மக்களில் பலர் அரண்மனை எனவும், வேறுசிலர் இயக்கச்சி கோட்டையுடன் தொடர்புடைய சிறைக்கூடம் எனவும் அழைக்கின்றனர். ஆனால் கட்டிடத்தின் அமைப்பையும், அதன் காலத்தையும் நோக்கும் போது அது முன்பொரு காலத்தில் அங்கு வாழ்ந்த மக்களது வீடாக இருக்கலாம் என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.
இவ்வீடு காட்டின் நடுவேயுள்ள பெரியகுளத்திற்கு அருகேயுள்ள உயர்ந்த மேட்டுநிலத்தில் செங்கட்டிகள், களிமண், சுதை என்பன கொண்டு கட்டப்பட்டுள்ளது. இரண்டு அறைகளைக் கொண்ட இக்கட்டடம் ஏறத்தாழ ஒன்பது மீற்றர் நீளமும், நான்கரை மீற்றர் அகலமும் கொண்டது.
இவ்வீட்டின் பின்பக்க அறைச் சுவரில் சிறிய யன்னல் ஒன்று இருந்தற்கான அடையாளம் காணப்படுகிறது. கட்டிடத்தின் பெரும்பாலான சுவர்கள் அழிவடைந்து விட்டாலும், கட்டத்தின் மூன்று பக்க அத்திவாரங்களை தெளிவாகப் பார்க்க முடிகிறது.
கட்டிடத்தின் முன்பக்கம் அடர்ந்த காடாக இருப்பதால் அதன் அத்திவாரத்தை தற்போது அடையாளம் காணமுடியவில்லை. ஏனைய மூன்று அத்திவாரங்களில் இருந்தும் எழுப்பப்பட்ட சுவர்கள் ஒவ்வொன்றும் ஏறத்தாழ ஒருமீற்றர் தடிப்பைக் கொண்டன.
அதிலும் இரண்டு அறைகளைப் பிரித்து நிற்கும் நடுச் சுவரின் தடிப்பு ஏனைய அத்திவாரச் சுவர்களை விடச் சற்றுக் கூடுதலாகக் காணப்படுகிறது. பேராசிரியர் பொ.இரகுபதி சுவர்களின் தடிப்பை ஆதாரமாகக் காட்டி இக்கட்டிடம் இரு மாடிகளைக் கொண்ட வீடு எனக் குறிப்பிடுகிறார்.
இவ்வீட்டின் கூரை ஓடுகளைக் கொண்டு வேயப்பட்டதற்கான ஆதாரங்கள் எவையும் இதுவரை கிடைக்கவில்லை. இதனால் இதன் கூரைமரங்கள், பனை ஓலைகள் கொண்டு வேயப்பட்டிருக்கலாம் எனக் கருதலாம்.
இவ்வீட்டை அமைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட செங்கட்டிகளின் அளவும், அவற்றின் தொழில் நுட்பமும் ஐரோப்பியர் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட செங்கட்டிகளின் காலத்திற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட காலத்தைச் சேர்ந்தவையாகக் காணப்படுகின்றன.
மேலும் இக்கட்டிட அழிபாடுகளிடையே இருந்து எடுக்கப்பட்ட மட்பாண்ட ஓடுகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட நீர்ப்பாசனக் குழாய்கள் என்பவற்றின் காலம் ஏறத்தாழ கி.பி. 15ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாகக் காணப்படுகிறது.
இவற்றை ஆதாரங்களாகக் கொண்டு இவ்வீடு அமைக்கப்பட்ட காலம் யாழ்ப்பாண அரசு காலம் அல்லது அதற்கு முந்திய காலத்தைச் சேர்ந்ததெனக் கூறமுடியும். ஆகவே வட இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட காலத்தால் முந்திய குடிமனையாக இதைக் கருத முடியும்.
வடஇலங்கையில் புராதன குடியிருப்புக்ளைக் கொண்ட இடங்களில் வடமராட்சி கிழக்குப் பிரதேசமும் ஒன்றாகும். 1980களில் பேராசிரியர் இரகுபதியும், பின்னர் இக்கட்டுரை ஆசிரியரும் வெற்றிலைக்கேணி, உடுத்துறை, செம்பியன்பற்று, முள்ளியான், கட்டைக்காடு ஆகிய இடங்களில் மேற்கொண்ட ஆய்வுகளில் இவ்விடங்களில் இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
யாழ்ப்பாண அரசுகாலத்தில் கடல்வழிகாகவும், வன்னியில் இருந்துதரைவழியாகவும் கொண்டுவரப்பட்ட பொருட்களுக்கான வரி அறவிடும் கடவைகள் மேற்கூறப்பட்ட இடங்களில் இருந்;ததற்கு வரலாற்று இலக்கியங்களில் ஆதாரங்கள் காணப்படுகின்றன.
ஆனால் போத்துக்கேயர், ஒல்லாந்தர் ஆட்சியைத் தொடர்ந்து இவ்விடங்களில் வாழ்ந்தமக்கள் படிப்படியாகப் பிற இடங்களுக்குச் சென்றதாக இவர்களின் ஆட்சிக்கால ஆவணங்கள் கூறுகின்றன.
ஆயினும் இவ்விடங்களில் இருந்து கடல் வழியாகவும், தரை வழியாகவும் பொருட்கள் கடத்தப்பட்டதால் அவற்றைத் தடுப்பதற்காகவே ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக ;காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான கோட்டைகளை இயக்கச்சி, ஆனையிறவு, வெற்றிலைக்கேணி போன்ற இடங்களிலும், கடற்கரையை அண்டிய இடங்களில் காவல் அரண்களையும் அமைத்தனர்.
இந்நிலையில் முள்ளியான் காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கட்டிட அழிபாடுகள் ஐரோப்பியர் வருகைக்கு முன்னர் செறிவான தமிழர் குடியிருப்புக்கள் அங்கிருந்ததன் அடையாளமாகக் காணப்படுகிறது.
இது போன்ற வீடுகளின் சிதைவுகளும், பாழடைந்த ஆலயங்களின் அழிபாடுகளும் இவ்வட்டாரத்தின் காட்டுப் பகுதிகளில் இருப்பதாக இப்போது தெரியவந்துள்ளது. எதிர்கால ஆய்வுகளால் அவை புதுவெளிச்சம் பெறலாம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக