ஒருமுறை யம தர்ம ராஜன் தன்னுடைய நிலை குறித்தான சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். ‘மரணத்தை ஒருவரும் விரும்புவதில்லை, வரவேற்பதுமில்லை. என் வேலையே ஒருவரது உயிரை எடுப்பதுதான். என்னை ஒருவரும் பூஜிப்பதில்லை. என்னைக் கண்டாலே பயப்படுகிறார்கள். பல கோடிகளின் உயிரை அழித்து வருகிறேன். உயிரை எடுப்பது பாவம் என்பதால்தானே சிவபெருமானுக்கும் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது? நான் என்ன பரிகாரம் செய்வது?’ என யமராஜன் மனம் குழம்பிப்போனான்.
சிவபெருமானைக் குறித்து தவம் இருந்தான். அவரின் பெருமைகளைப் புகழ்ந்து பாடினான். பின்னர், வாஞ்சியம் என்ற ஊருக்கு வந்து சேர்ந்தான். செய்த பாபங்களைத் தீர்க்கும் ஊர் எது என்று நினைத்துப் பார்த்தால் மனதில் முதலில் வருவது ஸ்ரீவாஞ்சியம்தான். யம தர்ம ராஜனும் இந்த இடத்திற்கே வந்தான். மனமுருகி சிவனைத் துதித்தான்.
கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் மகேசன் யமராஜனின் அழைப்பினால் ஓடி வந்தார். "காலனே, யமதர்மராஜனே! உனக்கு என்ன வேண்டும்?"
"மகேசனே! தினந்தோறும் நான் பல உயிர்களைப் பறித்துக் கொள்கிறேன். இந்தப் பாவங்கள் என்னை என்ன செய்யுமோ என மனதில் பீதி உண்டாகிறது."
"யமதர்மராஜனே! நீ உன் கடமையைத்தானே செய்கிறாய்! பாவ, புண்ணியங்களுக்கேற்ப நீதியை நிலைநாட்டுகிறாய். பாவங்களுக்கு ஏற்ற தண்டனையும் கொடுக்கிறாய். இதற்கு வருந்தாதே. இந்த வாஞ்சியம் என்ற ஊரில் என் அருகிலேயே நீ இருப்பாய். என் சன்னிதியில் நீயும் இருந்து அருள் புரிவாய். நீதான் இங்கு க்ஷேத்ரபாலகன். இந்த இடத்தில் உன்னுடைய பங்குதான் முக்கியமானது. தீய சக்திகள் அண்டாமல் பாதுகாப்பாய். இங்கு என்னையும், உன்னையும் பூஜிப்பவர்களுக்கு மரண வேதனையே இருக்காது. இங்கு இறப்பவர்களின் காதில் நானே வந்து பஞ்சாக்ஷர மந்திரத்தை ஓதுவேன். அவர்களுக்கு முக்தியை அளிப்பேன்."
இதைக் கேட்ட யமராஜன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். திரும்பவும் மகேசனைப் பார்த்து, "ஈசனே இன்னொரு வேண்டுகோள். எனக்கு நீங்கள் மாசி மாதம் பரணி நாள்.. அதாவது இன்று தரிசனம் கொடுத்து என்னை தன்யனாக்கினீர்கள். என்னால் எழுப்பப்பட்ட புண்ணிய தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடி.. உங்களைப் பூஜிக்க, அவர்கள் சுவர்க்கம் போக வேண்டும்"
"அங்ஙனமே ஆகட்டும்" என்றார் மகேசன்.
"பரமேஸ்வரா! இன்னும் ஒரு விண்ணப்பம். இந்த நந்நாளில் நான் உங்களைச் சுமந்து வாகனமாகி வீதி வலம் வர வேண்டும். இதைக் காணும் பக்தர்களுக்கு மோட்சம் அளிக்க வேண்டும்."
பரமசிவன் புன்னகையுடன் அதற்கும் ஒத்துக்கொண்டார்.
அநேகமாக எல்லாக் கோயில்களிலும் முதலில் நம்மை வரவேற்பது ஆனைமுகன்தான். ஆனால் ஸ்ரீவாஞ்சியம் கோயிலில் மட்டும் முதலில் நாம் காண்பது யம தர்ம ராஜனே!
அவரைப் பார்க்கப் பார்க்க மனதில் இருக்கும் பயம் அகலுகிறது. கறுத்த மீசையுடன், நான்கு கரங்களில் பாசம், சூலம், கதை ஏந்தியபடிஇடது காலை மடித்து வலது காலைத் தொங்கவிட்டபடி இவர் காட்சியளிக்கிறார். இவர் அருகில் பாவ புண்ணிய கணக்கெழுதும் சித்ரகுப்தன் அமர்ந்திருக்கிறார்.
இங்கு இருக்கும் சிவபெருமானின் பெயர் ஸ்ரீவாஞ்சிநாதன். இவருக்கு வாஹனம் யமதர்ம ராஜனே! ஸ்ரீ வாஞ்சிநாதனைப் பற்றி பிறிதொருமுறை எழுதுகிறேன்.
இந்தக் கோயிலில்தான் யமராஜனுக்குத் தனி சன்னதி இருக்கிறது. அதுவும் உயர்ந்த இடமாக.. க்ஷேத்ரபாலகனாக அமர்ந்து அருள் பாலிக்கிறார். நந்தீஸ்வரருக்குப் பதிலாக இவர் சிவபெருமானின் வாகனமாக அமர்ந்திருக்கிறார்
இவர் அமர்ந்திருக்கும் திசை தென் திசை. இங்கு வந்து பூஜை செய்பவருக்கு மரண பயமோ, மரண வேதனையோ இருக்காது. நிம்மதியான மரணம் கிட்டும். தவிர, இங்கு இறப்பு நேர்வோருக்கு சிவபெருமானே காதில் வந்து நமசிவாயத்தை ஓதுவது என்றால் அந்தப் பேறு கிட்ட கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
கும்பகோணம், நன்னிலம் போகும் வழியில் அச்சுதமங்கலம் என்ற இடம் வரும். அங்கிருந்து சுமார் ஒரு கிமீ போனால் ஸ்ரீவாஞ்சியம் அடைந்துவிடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக