சர்வதேச யோகா தினம்- சிறப்பு பகிர்வு (வீடியோ இணைப்பு) !
இந்திய பிரதமர் நரேந்திர மோடி எடுத்த தனிப்பட்ட முயற்சியால், யோகாசனத்தின் சிறப்புகளை புரிந்துகொண்ட ஐக்கிய நாடுகள் சபையும் யூலை 21ம் திகதியை யோகாதினமாக அறிவித்துள்ளது.
இந்த முதல் யோகா தினத்தில் பிரதமர் மோடியும் மக்களோடு இன்று யோகாசனம் செய்து தொடங்கி வைக்கிறார்.
யோகாசனம் தோன்றியது இந்தியாவில்தான், அதுபோல அது உலகம் முழுவதும் பின்பற்றப்பட ஐ.நா. அறிவித்துள்ளது ஒரு சிறந்த விடயமாகும்.
யோகா இன்று நேற்று தோன்றியதல்ல, யோகிகள், முனிவர்கள், சித்தர்கள் காலத்தில் இருந்தே, அவர்களுடைய மெய்ஞானத்தால் ஆராய்ந்து கண்டுபிடிக்கப்பட்டு, கடைப்பிடிக்கப்பட்டு, மக்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டது.
ஒரு ஆரோக்கிய கேடான விடயம் விளம்பர கவர்ச்சியால் எளிதாகவும் விரைவாகவும் மக்களை சென்றடைந்து விடுகிறது.
இந்நிலையில் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியமானதும் ஆயுளை நீட்டிப்பதுமான இந்த யோகா பயிற்சி இவ்வளவு காலத்துக்குப் பிறகு உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.
யோகாவை பொறுத்தவரை சாதாரண உடற்பயிற்சியை போல மனம்போன போக்கில் செய்யக் கூடாது. அது சரியாக பயனளிக்காதது மட்டுமல்ல, ஏதாவது தவறுகள் நேரலாம்.
ஆகவே யோகா கற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள் அதைப்பற்றி நன்கு அறிந்தவர்கள் துணைகொண்டு செய்வதே சிறந்தது.
யோகாவும் வியாபாரம் ஆகிவிட்ட சூழலில், வசதியில்லாதவர்கள் புத்தகங்களை படித்துவிட்டு செய்வது சரியான வழியல்ல. மேலும் யோகாவை பற்றிய புத்தகங்கள் எல்லாமே சரியென்று சொல்லமுடியாது.
யோகாசனம் என்பது ஒரு நிலையில் மனதையும் சுவாசத்தையும் நிதானப்படுத்தி 30 வினாடிகளிலிருந்து 2 நிமிடங்கள் வரை இருப்பதாகும். அதுவே ஒரு ஆசனத்திற்கு போதுமானதாகும்.
மூச்சை உள்ளிழுப்பது, வெளியிடுவது, மூச்சை உள்ளிழுத்து வைத்துக்கொண்டு அடக்கியிருத்தல், மூச்சை முழுதாக வெளிவிட்டுவிட்டு நுரையீரலில் காற்று இல்லாது நிலையில் இருத்தல், மூச்சை சாதாரணமாக வைத்திருத்தல் போன்ற, ஐந்து நிலைகள் உண்டு. அது ஒவ்வொரு பயிற்சிக்கும் ஏற்ப மாறுபடும்.
ஒரு நாளைக்கு 7 (அ) 8 ஆசனங்கள் மட்டுமே செய்வது நலம். அதிக ஆர்வமிருந்தாலும் 10 ஆசனங்களுக்கு மேல் செய்ய தேவையில்லை.
அதிக ஆசனங்கள் களைப்பை ஏற்படுத்தும். நமது தினசரி வேலைகளை கவனிக்கவும் ஓடிக்கொண்டிருக்கும் இந்த சமுதாயத்தில் இயங்கவும் எற்றதாக இருக்காது.
ஆசனங்கள் நூற்றுக்கும் மேல் இருக்கின்றன. அவைகளில் மிகக் கடினமான ஆசனங்களும் உள்ளன. யோகாசனம் செய்பவர்கள் சிரமம் உள்ள ஆசனங்களை செய்யக்கூடது என்று யோகா ஆசிரியர்களே கூறுகின்றனர்.
ஆசனங்களின் வகைகள்:-
1. பத்ம ஆசனம்
2. உக்கட ஆசனம்
3. சர்வங்க ஆசனம்
4. மயூராசனம்
5. ஹலா ஆசனம்
6. புஜங்க ஆசனம்
7. தனூராசனம்
8. சக்கராசனம்
9. அர்த்த சிரசாசனம்
10. சிரசாசனம்
11. சவ ஆசனம்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆசனங்கள் எந்த வேலைக்குச் செல்பவர்களுக்கும், ஏற்ற எளிமையான பயனுள்ள ஆசனங்களாகும்.
எளிய இரண்டு ஆசனங்கள்:-
பத்ம ஆசனம் செய்யும் முறை:
சாதாரணமாக ஆசன நிலையில் அமர்ந்துகொண்டு இரண்டு கால்களுடைய பாதங்களும் மேல் நோக்கியவாறு எதிர் தொடைகளில் இருக்கும்படி அமர்ந்துகொள்ள வேண்டும்.
பிறகு இரண்டு கைகளையும் நீட்டி உள்ளங்கைகள் மெல்நோக்கியவாறு கால்முட்டிகளின் மேல் அமைந்திருக்கவேண்டும். சுவாசம் சாதாரணமாக இருக்கவேண்டும். இதுவே பத்ம ஆசனம் செய்யும் முறை.
பயன்கள்:
இந்த ஆசனத்தின் மூலம் உடலின் பெரும்பான்மையான பகுதிகள் பயனடையும். கை, கால்கள், மார்பு, முதுகு தண்டுவடம், கழுத்து, போன்ற உறுப்புகளுக்கு வலிமை தரக்கூடியது. சர்வங்க ஆசனம் செய்யும் முறை:
போர்வை அல்லது கனமான துணிகளை நான்கு மடிப்புகளாக கீழே போட்டுக்கொண்டு, அதில் கால்களை நீட்டி மல்லாந்து படுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு மூச்சை சீராக உள் இழுத்து அடக்கிக்கொண்டு, கைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு கால்களையும் மொத்த உடலையும் மெல்ல மேல் நோக்கி உயர்த்த வேண்டும்.
தலையும் கழுத்துப்பகுதியையும் தவிர அனைத்து உடற்பகுதியும் மேலே உயர்ந்திருக்க வேண்டும். இப்போது மூச்சை சீராக வெளியே விடவேண்டும். பிறகு அந்த நிலையிலே சுவாசத்தை இயல்பாக வைத்திருக்க வேண்டும்.
2 நிமிடங்கள் இருந்துவிட்டு மீண்டும் மூச்சை உள்ளிழுத்து அடக்கிக்கொண்டு உடலை மெல்ல விரிப்பில் மல்லந்தபடி கடத்த வேண்டும் பிறகு மூச்சை வெளியே விடவேண்டும்.
பயன்கள்:
சர்வங்க ஆசனம் உடலின் எல்லா பாகங்களுக்கும் பயன் தரக்கூடியது. அதனால்தான் அதற்கு அந்த பெயரை வைத்துள்ளனர். இந்த ஆசனத்தில் எல்லா உறுப்புகளும் ஈடுபடுவதால், அவைகள் வலுவடைகின்றன.
யோகாசனம் செய்பவர்கள் சுகாதாரமான இடத்தில் செய்ய வேண்டும். டீ, காபி, புகைப்பிடித்தல், மது,போதைபழக்கங்கள் இருக்கக் கூடாது.
பட்டினி கிடக்கவும் கூடாது. வயிறுமுட்டவும் சாப்பிடக்கூடாது. இரவில் நீண்ட நேரம் கண்விழித்திருந்தால், நெடுந்தூரம் பயணம் செய்தால் அன்று காலை யோகா செய்யக்கூடாது.
சூரியன் வெயில் வருவதற்கு முன் யோகா பயில்வது நல்லது. எண்ணெய் குளியல், சோர்வான நேரங்களில் யோகா செய்யக்கூடாது.
யோகா செய்யும்போது மனமும் உடலும் உற்சாகமாகவும் அதே நேரம் சாந்தமாகவும் இருப்பது நல்லது. எல்லோரும் யோகா கற்று பயனடைய இந்த யோகா தினத்தில் வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக