இராமாயணத்தில் இராமபிரானே பாட்டுடைத் தலைவன். தசரதனின் தலைமகன் என்பதற்கப்பால் இராமபிரானிடம் எண்ணிறைந்த நற்குணங்களும் அறக் கொள்கைகளும் இருந்துள்ளன.
இதன் காரணமாக இராமர் இருக்கும் இடமெல்லாம் அயோத்தி என அந்நாட்டு மக்கள் நினைத்தனர்.
இத்துணை சிறப்பு மிக்க இராமன் வாலி வதையில் நடந்து கொண்ட முறை பல்வேறு விமர்சனங்களுக்குள்ளானது.
வாலியை இராமர் மறைந்திருந்து தாக்கியமை யுத்த தர்மமன்று என்பதே வாதப்பொருள்.
தர்மம் உணர்ந்த இராமர் அவ்வாறு நடந்து கொண்டமை தவறிலும் தவறு என்பதே வாதம் புரிவோரின் கருத்து.
வாலியை மறைந்திருந்து தாக்கியமை ஒரு புறமிருக்க வாலியை வதம் செய்ய வேண்டிய தேவை இராமருக்கு ஏற்பட்டது ஏன்? என்று ஆராய்ந்தால், அந்த வதம் சுக்கிரீவனுக்காக நடந்ததன்று.
சுக்கிரீவனின் மனைவியை வாலி கவர்ந்து சென்றான் என்பதாலும், தன் அண்ணனான வாலியை எதிர்க்கும் வல்லமை தனக்கில்லாத காரணத்தாலும் சுக்கிரீவன் இராமனைத் தஞ்சமடைந்தான்.
மிகப்பெரும் பராக்கிரமசாலியாகிய வாலி இலங்கை வேந்தன் இராவணனின் ஆருயிர் நண்பன். அதேநேரம் இராம பக்தன்.
இந்த இருபெரும் நிலைமைகளும் இராம - இராவண யுத்தத்திற்கு பெருந் தடையாக இருக்கும்மென்பது இராமருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.
வாலியை வதம் செய்வது என்ற இராமரின் முடிவு சுக்கிரீவனூடாக நடந்தேறுகிறது.
அதாவது சுக்கிரீவன் மனைவியை வாலி கவர்ந்தான் என்ற குற்றச்சாட்டை முன்னிறுத்தி, இராவணனுக்கு நெருங்கிய நண்பனாகிய வாலியை இராமர் மறைந்திருந்து தாக்கினார்.
இராமர் நினைத்திருந்தால் சுக்கிரீவனையும் வாலியையும் ஒற்றுமைப்படுத்தியிருக்க முடியும்.
எல்லா அறமும் தெரிந்த இராமர் சகோதரர்களை ஒற்றுமைப்படுத்தியிருக்க வேண்டும் அல்லவா? அதை ஏன் அவர் செய்யவில்லை.
வாலி உயிரோடு இருந்தால் இராவணனை வதம் செய்ய ஒருபோதும் விடமாட்டான்.
இராமருக்கும் இராவணனுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் ஒற்றுமைப்படுத்தியிருப்பான்.
பேச்சுவார்த்தையின் முதற்கட்டத்தில் சீதை விடுதலை பெற்றிருப்பாள்.
எனவே இராம - இராவண யுத்தம் நடக்காமல் போகக்கூடிய வாய்ப்பு உண்டென்பதாலேயே இராமர் வாலியை மறைந்திருந்து தாக்கினார்.
வாலி வதம் சுக்கிரீவனுக்காக இராமர் செய்தது போல் இருந்தாலும், இராமர் தன் சுயநலனுக்காகவே வாலியை கொன்றார்.
இந்த உண்மையை எங்கள் நாட்டிலும் நாம் அனுபவ ரீதியாகக் காண்கிறோம் சிலருக்கு சமாதானம் பிடிப்பதேயில்லை.
இது ஒருபுறமிருக்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் சூடு கடுமையாகக் கிளம்பியுள்ளது.
அதிலும் ஐ.தே.க வின் பிரதித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி காலஞ் சென்ற பிரேமதாஸவின் மகனுமாகிய சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி மகிந்த ராஜபக்வை சந்தித்தது தேர்தல் களத்தை மேலும் சூடேற்றியுள்ளது.
மைத்திரிபால சிறிசேனவை தோற்கடிக்க வேண்டுமானால் சஜித் பிரேமதாஸவை தனது பக்கம் இழுத்தாக வேண்டுமென்பதே ஜனாதிபதி மகிந்தவின் இராஜதந்திரம்.
மகனே! சஜித்! ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஐ.தே.கவில் யாருமேயில்லையா? ரணில் இல்லை என்றால் பிரேமதாஸவின் மகனாகிய நீரன்றோ ஜனாதிபதி வேட்பாளர்.
நீர்தான் ஜனாதிபதி வேட்பாளராக வருவீரென்று நான் நம்பியிருந்தேன். எனது நண்பர் பிரேமதாஸவின் மகனாகிய தாங்கள் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் மகிழ்வடைந்திருப்பேன்,
ஆனால் மைத்திரிபாலவை பொதுவேட்பாளராக்கி ஐ.தே.கவேயே கருவறுத்து விட்டனர் என்று சஜித்திடம் ஜனாதிபதி மகிந்த சொல்லியிருந்தால் சுக்கிரீவனுக்காக வாலி வதம் நடந்த கதையாகவே நிலைமை முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக