தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

எல்லாம் ஒரு நாள் முடியும்!


மஹாராஸ்டிர மாநிலத்தில் ஏகநாதர் என்ற ஞானி வாழ்ந்து வந்தார். அவர் முகத்தில் எப்போதும் அமைதியும், புன்னகையும் தவழும். அவரை நீண்ட நாட்களாகக் கவனித்து வந்த ஒரு மனிதருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் பல ஆன்மிகவாதிகளைப் பார்த்திருக்கிறார். ஆனால் இந்த அளவு தொடர்ந்து அமைதியாக இருக்க முடிந்த ஆட்களைப் பார்த்ததில்லை. ஒரு முறை அமைதியாக இருக்க முடிந்த நபர் இன்னொரு முறை அமைதியாக இருப்பதில்லை. இப்படி எதிலேயும் பாதிக்கப்படாமல் தொடர்ந்து அமைதியாக இருக்க முடிவது என்றால் அதில் ஏதோ ரகசியம் அல்லது சூட்சுமம் இருக்க வேண்டும் என்று நினைத்தார். 

ஒரு நாள் அதை அவர் ஏகநாதரிடம் சென்று கேட்டே விட்டார். “சுவாமி உங்களால் எப்படி இப்படி அமைதியாக, எதிலும் பாதிக்கப்படாமல் இருக்க முடிகிறது? இப்படி முடிவதன் ரகசியம் என்ன?”

ஏகநாதர் அவரையே உற்றுப் பார்த்து விட்டு ”நீ உன் கையைக் காட்டு” என்றார்.

அந்த மனிதரும் தன் கையை நீட்டினார்.

அவரது ரேகைகளை ஆராய்ந்த ஏகநாதர் “உனக்கு இன்னும் ஏழு நாட்கள் ஆயுள் தான் பாக்கி இருக்கிறது”

அந்த மனிதருக்கு அதிர்ச்சி. ஏதோ கேட்க வந்து ஏதோ கேட்க நேர்ந்ததே என்று மனம் நொந்தார். ஏகநாதரின் அமைதியின் ரகசியம் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை விட அதிகமாய் சுயபச்சாதாபம் அவருக்குள் வந்தது. ஞானிகள் எக்காலத்தையும் அறிய வல்லவர்கள் என்பதால் அவருக்கு ஏகநாதர் சொன்னதில் எந்த சந்தேகமும் இல்லை. அவசரமாக வீட்டுக்குச் சென்றார். மனைவி மக்களிடம் தகவலைச் சொன்னார். குடும்பம் அழுதது. அவரும் வருத்ததில் ஆழ்ந்தார். ஆனால் அழுது புலம்பி எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்த அந்த மனிதர் வருத்தத்தை எல்லாம் சீக்கிரமே மூட்டை கட்டி வைத்து விட்டு சாவதற்குள் செய்து முடிக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்ய ஆரம்பித்தார்.

ஏகநாதர் சரியாக ஒரு வாரம் கழித்து அந்த மனிதரை அவர் வீட்டில் சந்தித்தார். அந்த மனிதர் மிகுந்த அமைதியுடன் இருந்தார். ”நான் செய்ய வேண்டியதை எல்லாம் செய்து விட்டு மரணத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.”

ஏகநாதர் சொன்னார். “நீ இப்போது எந்த மனநிலையில் இருக்கிறாயோ அதே மனநிலையில் நான் என்றும் இருக்கிறேன் மகனே. மரணம் வரும், எல்லாம் முடிந்து போகும் என்ற உண்மையை உணர்வதால் கிடைக்கும் அமைதியே அலாதியானது. அதற்குப் பிறகு எதுவும் பெரிய விஷயமாகத் தோன்றுவதில்லை. எதுவும் அதிகமாக பாதிப்பதில்லை. இதைச் சொன்னால் புரியாது, அனுபவத்தில் மட்டுமே உணர முடியும் என்பதற்காகத் தான் நான் உன் கேள்விக்குப் பதிலாக உன்னிடம் ஏழுநாட்கள் மட்டுமே ஆயுள் பாக்கி உள்ளது என்றேன். உண்மையில் உனக்கு தீர்க்காயுள் இருக்கிறது. நீ நீண்ட காலம் வாழ்வாய்” என்று சொல்லி விட்டு வாழ்த்தி விட்டு சென்றார்.

ஏகநாதர் சொன்னது உண்மையே. மரணம் என்னேரமும் வரலாம் என்று தத்துவம் பேசுகிறோமே ஒழிய, அந்த உண்மை நம் அறிவிற்கு எட்டுகிறதே ஒழிய, அது நம் ஆழ்மனதிற்கு எட்டுவதில்லை.

வாழ்ந்த காலத்தில் எப்படி உயர்ந்தோமோ, எப்படி தாழ்ந்தோமோ அதெல்லாம் மரணத்தின் கணக்கில் இல்லை. மரணம் போன்ற சமத்துவவாதியை யாராலும் காண்பதரிது. இருப்பவன்-இல்லாதவன், உயர்ந்தவன்-தாழ்ந்தவன், ஆள்பவன்-ஆண்டி போன்ற பேதங்கள் எல்லாம் மரணத்திடம் இல்லை. எல்லோரையும் அது பேதமின்றி அது கண்டிப்பாக அணுகுகிறது.

அது போல மரணத்தைப் போல மிகப் பெரிய நண்பனையும் காணமுடியாது. நம் தீராத பிரச்னைகள் எல்லாவற்றையும் ஒரே கணத்தில் தீர்த்து விடுகிறது.

ஆதி அந்தம் இல்லாத கால விஸ்தீரணத்தில் நாம் வாழும் காலம் ஒரு புள்ளியளவும் இல்லை. நம் காலமே ஒரு புள்ளியளவும் இல்லை என்கிற போது அந்தக் காலத்தில் வாழும் உயிரினங்கள் அடையாளமென்ன, அந்த கோடானு கோடி உயிரினங்களில் ஒரு இனமான மனித இனத்தின் அடையாளமென்ன, அந்த பலகோடி மனிதர்களில் ஒரு தனி மனிதனின் அடையாளம் என்ன?

இப்படி இருக்கையில் வெற்றி என்ன, தோல்வி என்ன? சாதனை என்ன? வேதனை என்ன? எல்லாம் முடிந்து போய் மிஞ்சுவதென்ன? எதுவும் எத்தனை நாள் நீடிக்க முடியும்? இதில் சாதித்தோம் என்று பெருமைப்பட என்ன இருக்கிறது? நினைத்ததெதுவும் நடக்கவில்லை என்று வேதனைப்பட என்ன இருக்கிறது? இதை வேதாந்தம், தத்துவம் என்று பெயரிட்டு அலட்சியப்படுத்த வேண்டாம். இது பாடங்களிலேயே மிகப்பெரிய பாடம்.

வாழ்க்கையில் உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தை சிறப்பாக வாழுங்கள். செய்வதை எல்லாம் கச்சிதமாகச் செய்யுங்கள். ஆனால் அந்த பாத்திரமாகவே மாறி என்றைக்கும் நிரந்தரமாக இருப்பது போல பாவித்து விடாதீர்கள். நீங்களே நிரந்தரமல்ல என்கிற போது உங்கள் பிரச்சினைகளும் நிரந்தரமல்ல அல்லவா? இருந்த சுவடே இல்லாமல் போகப்போகும் வாழ்க்கையில் வருத்தத்திற்கு என்ன அர்த்தம் இருக்கிறது? வெறுப்பிற்கும், கோபத்திற்கும், பேராசைக்கும், சண்டைகளுக்கும் என்ன அர்த்தம் இருக்கிறது?

நாம் வழிப்போக்கர்கள். அவ்வளவே. வந்தது போலவே இங்கிருந்து ஒருநாள் சென்றும் விடுவோம். அதனால் இங்கு இருக்கும் வரை, முடிந்த வரை எல்லாவற்றையும் முழு மனதோடு செய்யுங்கள். இது வரை சொன்ன பாடங்களைப் படித்துணர்ந்து சரியாகவும் முறையாகவும் வாழும் போது வாழ்க்கை சுலபமாகும், நாமாக விரித்துக் கொண்ட வலைகளில் சிக்கித் தவிக்க நேராது. அது முடிகிறதோ, இல்லையோ அதற்குப் பின் வருவதில் பெரிதாக மன அமைதியிழந்து விடாதீர்கள். ஏனென்றால் எல்லாம் ஒரு நாள் முடியும்!
-என்.கணேசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக