உண்மை மட்டும் பேசுபவன்,குரான் முழுமையாக கருத்து விளங்கிப்படித்தவன் நிச்சயமாக இதை எழுதான்!!இஸ்லாத்தின் விரோதிகளை கண்ட இடத்தில் கொல் என்பது அகிம்சை இந்த எழுத்தாளருக்கு!!தனது மனைவியை நண்பன் மோகம் கொண்டதால் அனைத்துப்பாகத்தையும் அனைவரும் மறைக்கும்படி கடின உத்தரவிட்டது அதிகாரவெறியல்ல இவருக்கு,வளர்ப்புமகனின் மனைவிமேல் விரகதாபம் கொண்டு அவனை விவாகரத்து செய்யவைத்து தன் மனைவியாக்கியது சிறந்த பண்பாடு,அடக்கம்!!நான்கு திருமணம் ஆணுக்கு,அதே உரிமை பெண்ணுக்கு கொடுக்காதது சிறந்த சமவுரிமை!!இந்தியாவில் வந்தேறிகளாக இருந்துகொண்டு இந்தியருக்கு எச்சரிக்கை விடும் கட்டுரை எழுதும் இவர்கள் ஆண்கள்தான்!!கேட்கும் இந்தியர்???
ஆளூர் ஷாநவாஸ்
'நபிகள் நாயகத்தின் வாழ்வு – மனிதர்கள் அனைவருக்கும் அழகிய முன்மாதிரியாகவே விளங்குகின்றது. எளிமை, தன்னலமற்ற தன்மை, வாக்குறுதி, பின்பற்றுவோரிடம் கொண்ட பற்று, துணிவு, அச்சமின்மை இவைகளின் மூலம் தன் வாழ்நாளிலேயே மகத்தான வெற்றி பெற்றவர் நபிகள் நாயகம் அவர்கள்.
மணிமுடியில்லாத மன்னராக இருந்த போதும் ஏழையாக வாழ்ந்தவர் நபிகள் நாயகம். எவரும் அவரை அணுகக்கூடிய வாழ்க்கையை வாழ்ந்தவர். அரச ஆடம்பரத்தை வெறுத்தவர். வீட்டில் சின்னஞ்சிறு வேலைகளைக் கூடச் செய்தவர். வீட்டைப் பெருக்குவார், கம்பளித் துணியைக் கழுவுவார், ஒட்டகத்தின் பால் கறப்பார். ஏழ்மையில் இனிமை கண்ட மனிதப் புனிதர் அவர். ஆறு வயதிலேயே 60 வயதினர் அடையக்கூடிய துன்பங்களை எல்லாம் அடைந்தவர். ஒட்டுப்போட்ட ஆடையோடு வாழ்ந்தவர். நாயகத்தின் குடும்பத்தினர் இரவில் பல நாள்கள் பட்டினி கிடந்தபோதும், சுயமரியாதைக் காரணமாக அதை பிறர்க்குச் சொன்னதில்லை. எதிரிகளின் அம்புகளை எதிர்கொள்ளக் கூடிய இரும்பாலான அவரது உருக்குச் சட்டைக் கூட ஒரு யூதனிடம் அடகு போனது. கடைசிவரை அதை மீட்காமலேயே மரணித்தவர் அவர். நாயகம் நற்பண்புகளின் தாயகமாக விளங்கியவர்.
எதிரிகள் நோயுற்ற போதிலும் விசாரிக்கச் செல்வார். சாதாரண ஏழை இறந்தாலும் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வார். நாயகத்தைக் காணும் தோழர்கள் எழுந்து நிற்பதைக் கூட அவர் அனுமதிக்கவில்லை.
மனிதர்களின் நடைமுறை வாழ்வுக்கு ஒத்துவராத எதுவும் திருக்குர்ஆனிலும் இல்லை; நபிகள் நாயகத்தின் வாழ்வியலிலும் இல்லை.’’
நபிகளாரைப் பற்றியும், அவர் போதித்த இஸ்லாத்தைப் பற்றியும் இவ்வளவு ஆழமாக நீளும் இந்த ஆய்வுரையைப் படித்ததும், இந்தக் கருத்துக்களுக்கு உரியவர் யாரோ ஒரு இஸ்லாமிய மார்க்க அறிஞராகத்தான் இருக்க முடியும் என்ற எண்ணமே ஏற்படும். அல்லது இஸ்லாமிய சமூகத்தில் பிறந்த ஏதேனும் ஒரு சிந்தனையாளரின் கருத்தாகக் கூட இருக்குமோ என்ற ஐயமும் எழும். ஆனால், இந்தக் கருத்துக்களுக்கு உரியவர் முன்னாள் சபாநாயகரும், மறைந்த தலைவருமான டாக்டர் கா.காளிமுத்து அவர்கள்.
காளிமுத்து திராவிட இயக்க அரசியல் பட்டறையிலிருந்து உருவானவர். திராவிட இயக்கத்திற்கும் முஸ்லிம்களுக்குமான உறவு நீண்ட நெடும் வரலாற்றைக் கொண்டது. இன இழிவு நீங்க இஸ்லாமே அருமருந்து என்று தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தவர் தந்தைப் பெரியார்.
தாயைப் பிரிந்த குழந்தை மீண்டும் தாயைப் பார்த்தால் எப்படி தாவி அணைத்துக் கொஞ்சுமோ அதைப்போல இஸ்லாத்தை தமிழகம் ஏற்றுக்கொண்டது என்று சொன்னவர் பேரறிஞர் அண்ணா. நபிகள் நாயகம் பிறந்தநாள் விழாக்களிலும், முஸ்லிம்களின் இல்ல நிகழ்ச்சிகளிலும் தொடர்ச்சியாகப் பங்கேற்று அரசியல் உறவை வலுப்படுத்திக் கொண்டவர் கலைஞர்.
தி.மு.க.விலிருந்து பிரிந்து ம.தி.மு.க கண்ட வைகோ, நபிகளாரின் வாழ்வியலை மட்டுமல்ல இஸ்லாமிய வரலாற்றின் நாயகர்களாக விளங்கும் கலீபாக்களின் வாழ்வியலையும் ஆழமாகப் பேசக்கூடியவர். தமிழக முஸ்லிம்களின் தன்னிகரில்லாத தலைவராக விளங்கும் காயிதே மில்லத்தின் முழு வரலாற்றையும் கைவசம் குறிப்புகள் ஏதும் இல்லாமல் விவரிக்கக் கூடியவர் அவர்.
'முஸ்லிம் நண்பர்கள் பலர் எனக்கு கடன் கொடுத்து உதவி இருக்காங்க. ஆனால், ஒருத்தர் கூட வட்டி வாங்கியது கிடையாது. எத்தனை லட்சம் கடன் கொடுத்தாலும் வட்டி வாங்கக் கூடாது என்ற கொள்கையில் முஸ்லிம்களுக்கு இருக்கிற பிடிவாதம் எனக்குப் பிடிச்சிருக்கு’ என்கிறார் ஒரு காலத்தில் தி.மு.க.வில் தீவிரமாக செயலாற்றிய டி.ராஜேந்தர்
தன் கட்சியின் பெயரில் திராவிடத்தை இணைத்திருக்கும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இப்படி சொல்கி்றார்; ‘என்னோட முஸ்லிம் நண்பர்களின் குடும்பத்தில் என்னைப் பிரிச்சுப் பார்க்க மாட்டாங்க. அவர்களில் ஒருவனாகத்தான் என்னை நினைக்கிறாங்க. நான் மதுரையில் இருந்தபோது தெற்குப்பள்ளிவாசலில் இருந்து ரம்ஜான் நோன்பு நேரத்தில் நோன்புக் கஞ்சி என்னைத் தேடி வந்து விடும். முஸ்லிம்கள் 30 நாள்கள் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட பருகாமல் நோன்பு இருக்கிறார்கள். இதில் ஒரு மருத்துவ முறை இருக்கு. அதனால் ஒவ்வொருவருடைய உடலும் உள்ளமும் தூய்மையாகுது. எனக்கும் என் முஸ்லிம் நண்பர்களுக்கும் இந்து – முஸ்லிம் என்கிற பாகுபாடே கிடையாது. எங்களுக்குள் இதுவரைக்கும் நடந்த, நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஒவ்வொரு நிகழ்ச்சியும் மறக்க முடியாதது, காலத்தால் அழிக்க முடியாதது’ என்கிறார்.
திராவிட அரசியலைத் தாண்டி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான மீட்சியையும், தமிழ்த்தேசிய எழுச்சியையும் முன்னிறுத்தி களமாடிவரும் தொல்.திருமாவளவன், இன்று முஸ்லிம்களின் மத்தியில் செல்வாக்கு மிகுந்த தலைவராகத் திகழ்கிறார். அரசியல் நிகழ்ச்சிகள் மட்டுமின்றி இஸ்லாமியப் பண்பாட்டு நிகழ்ச்சிகளுக்கும் அவர் முஸ்லிம்களால் விரும்பி அழைக்கப்படுகிறார்.
அரசியல் களம் என்றில்லை, இலக்கியத் தளத்திலும் முஸ்லிம்களுடன் நேசம் பாராட்டும் முஸ்லிமல்லாத உள்ளங்கள் ஏராளம் பேர் உள்ளனர்.
மறைந்த எழுத்தாளர் வலம்புரி ஜான் பேசாத முஸ்லிம் மேடைகள் இருக்க முடியாது. ‘நாயகம் ஓர் காவியம்’ எழுதியவர். ‘இஸ்லாம் இந்த மண்ணுக்கேற்ற மார்க்கம்’ எனும் நூலைத் தந்தவர். கிறித்தவரான அவர், இஸ்லாம் பற்றிய ஆய்வில் ஆழங்கால் பட்டவர். வலம்புரியார் சொல்கிறார்; ‘இஸ்லாமியர்களிடம் சன்னி, ஷியா என்ற கொள்கை அடிப்படையிலான பிரிவுகள் உண்டே தவிர, நம்மைப் பாழ்படுத்துகிற சாதிகள் இல்லை. ஓர் இஸ்லாமியரைப் பார்த்து நீங்கள் எந்தச் சாதியைச் சேர்ந்தவர் என்றால், அந்தக் கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை என்பது மாத்திரமல்லாமல், நமது கேள்வியே அவருக்குப் புரிவதில்லை. அந்த அளவுக்குச் சாதிகள் அற்ற ஒரு சமுதாயமாக இஸ்லாமிய மார்க்கம் அவர்களை உருவாக்கி வைத்திருக்கிறது’ என்கிறார்.
நாடறிந்த தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பன் சொல்கிறார்; ‘சென்னை மறைமலையடிகள் நூலகத்தின் மாடியில் உள்ள வள்ளலார் மணிமண்டபத்தில் முதன்முதலில் சீறாப்புராண தொடர் சொற்பொழிவை ஆற்றினேன். மறைமலையடிகளார் சீரிய சைவர். வள்ளலாரோ சமரச சுத்த சன்மார்க்கம் கண்டவர். அங்கு பேசிய இலக்கியமோ நபிகள் நாயகம் வரலாறு பற்றியது. இந்த நல்லிணக்கமே என் மனதுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்தது’ என்கிறார்.
மனித உரிமை ஆர்வலரும், ஆய்வாளரும் விமர்சகருமான பேராசிரியர் அ.மார்க்ஸ் ‘நான் புரிந்து கொண்ட நபிகள்’ எனும் நூலை எழுதியுள்ளார். மார்க்ஸ் ஒரு இடதுசாரிச் சிந்தனையாளர். கடவுள் மறுப்புக் கொள்கையுடையவர். அப்படிப்பட்டவர், நபிகள் பற்றிய நூலை எழுதும்போது, தாம் கண்ணீர் விட்டு அழுததாகக் கூறுறார்.
இவர்கள் மட்டுமல்ல; ஆன்மீகப் பெரியோர்களாக விளங்கும் குன்றக்குடி அடிகளாரும், மதுரை ஆதீனம் மற்றும் கிறித்தவப் பேராயர்களும், ஊடக அரங்கில் அடையாளம் பெற்றுள்ள சன்டிவி வீரபாண்டியன், புகழ்பெற்ற ஆவணப்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் போன்றோரும் இஸ்லாமிய கருத்தியல் பற்றியும், முஸ்லிம் அரசியல் பற்றியும் தொடர்ந்து முழங்கி வருகின்றனர்.
இவ்வாறு அரசியல், கலை, இலக்கியம், ஆன்மீகம், ஊடகம் என அனைத்துத் தளங்களிலும் முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாத நேச சக்திகளுக்குமான உறவு தொன்று தொட்டு தொடர்ந்து வருகின்றது. இங்கே பட்டியலிடப்பட்டுள்ள முகங்களைத் தாண்டி, ஒவ்வொரு ஊர்தோறும் ஆயிரமாயிரம் முகங்கள் அத்தகைய பிணைப்போடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இஸ்லாமியர்கள் அந்நியர்கள் அல்லர்; அவர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் என்ற உண்மையைப் புரிந்து கொண்டவர்களாக உறவைப் போற்றி வருகின்றனர்.
ஆனால், இத்தகைய சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும், முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாத மக்களுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்தும் வகையிலும் அண்மைக்காலமாக பல்வேறு அசம்பாவிதங்கள் இங்கே திட்டமிட்டு அரங்கேற்றப் படுகின்றன. வகுப்பு வெறியைத் தூண்டி அதன்மூலம் அரசியல் அறுவடை எடுத்துப் பழகியவர்கள், தமது அரசியல் லாபங்களுக்காக மீண்டும் அதே வழிமுறைகளைப் பின்பற்றத் தொடங்கியுள்ளனர். முஸ்லிம்களால் இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் பெரும் ஆபத்து வரப்போகிறது என்று அவதூறுகள் பரப்பி, அனைத்து மக்களையும் அச்சமூட்டி, முஸ்லிம்களை தனிமைப்படுத்தும் சதிகள் அரங்கேறுகின்றன.
முஸ்லிம்களால் ஒருபோதும் முஸ்லிமல்லாத மக்களுக்கு எவ்வித இடையூறுகளும் வந்ததில்லை என்பதே உண்மை. இங்கே யாருடைய வழிபாடும், யாருடைய பண்பாடும் யாருக்கும் குறுக்கே நின்றதில்லை. மாறாக ஒருவருக்கு ஒருவர் ஒத்திசைந்தே வாழ்ந்து வருகின்றனர். மயிலாப்பூர் கோயில் குளமும், ஸ்ரீரங்கம் கோயில் நிலமும் ஆற்காடு நவாபு மனமுவந்து கொடையளித்தவை என்பது வரலாற்று உண்மை.
பழனி முருகனுக்குச் செல்லும் பாதயாத்திரையோ, சபரிமலை அய்யப்பனுக்குச் செல்லும் ரதயாத்திரைகளோ இங்கே எந்தக் காலத்திலும் சர்ச்சையானதில்லை. முஸ்லிம்கள் நிறைந்து வாழும் பகுதிகளினூடாக அந்த யாத்திரைகள் காலம்காலமாக அமைதியான முறையில் கடந்து செல்கின்றன. வழிபாடு வழிபாடாக மட்டுமே இருந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை. வழிபாட்டுக்குப் பின்னால் அரசியல் வந்தால் பிரச்சனையும் கூடவே வந்துவிடுகிறது.
எனவே, நல்லிணக்கத்தை விரும்பும் ஒவ்வொருவரும் இந்த உண்மைகளைப் புரிந்து கொள்வோம். வகுப்புவாத வன்முறைகளை வேரறுப்போம்.
('புதிய தரிசனம்' ரமளான் சிறப்பிதழில் எழுதிய கட்டுரை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக