தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

தன்மேம்பாட்டுரையணி!!


அணியிலக்கணம் – தொடர்-47
*********************************
“தண்டியலங்காரம்” – பொருளணியியல்
****************************************

தண்டியலங்காரம் - மூலமும் பழைய வுரையும்
பொருளணியியல் - 23
*************************************

தன்மேம்பாட்டுரையணி
****************************
தண்டியலங்காரத்தில் பத்தொன்பதாவதாகக் கூறப்படும் அணி,
தன்மேம்பாட்டுரையணி ஆகும்.

ஒருவன் தன்னைத் தானே புகழ்ந்து சொல்லுவது தன்மேம்பாட்டு உரை என்னும் அணியாகும்.

புகழ்தல் = தன் மேம்பாடு தோன்றச் சொல்லுதல்.

“தான்தன் புகழ்வது தன்மேம் பாட்டு உரை”
(நூற்பா – 70)

“எஞ்சினார் இல்லை எனக்கு எதிரா இன்னுயிர்கொண்டு
அஞ்சினார் அஞ்சாது போய் அகல்க - வெஞ்சமத்துப்
பேராதவர் ஆகத்து அன்றிப் பிறர்முதுகில்
சாரா என் கையில் சரம்”

(வெஞ்சமம் - கொடிய போர்;
பேராதவர் - புறமுதுகு காட்டி ஓடாதவர்கள்;
ஆகம் - மார்பு; சரம் - அம்பு.)

கொடிய போரில் எனக்கு எதிராக நின்று போர் செய்து, தமது இனிய உயிரைக் காப்பாற்றிக்கொண்டு பிழைத்து மிஞ்சியவர் ஒருவரும் இல்லை.

ஆகவே அஞ்சியவர்கள் விலகிப் போவதற்குச் சிறிதும் அஞ்சாமல் விலகிச் செல்க. என் கையால் செலுத்தப்படும் அம்புகள் புறம் காட்டி ஓடாதவர்களின் மார்பில் பாயுமே அல்லாமல் புறம் காட்டி ஓடுபவர்களின் முதுகில் பாயமாட்டா.

இப்பாடலில், வீரன் ஒருவன் பகைவர் படைகளுக்கு முன் நின்று தன் ஆண்மைத் திறத்தைத் தானே புகழ்ந்து உரைக்கிறான்.

ஆகவே இது தன்மேம்பாட்டு உரை அணி ஆயிற்று.

இவ்வாறு வீரன் ஒருவன் தன்னுடைய ஆண்மையைத் தானே புகழ்ந்து கூறுவது புறப்பொருள் இலக்கணத்தில் 'நெடுமொழி கூறல்' என்றும், 'நெடுமொழி வஞ்சி' என்று கூறப்படுகிறது





*********************
ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
02/08/2013
 —

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக