சகல லோகத்திலும் வெற்றி தரும் மஹா மந்திரம் ஓம் நமசிவாய பஞ்சாக்ஷர மந்திரம்.
சகல லோகத்திலும் வெற்றி தரும் மஹா மந்திரம் ஓம் நமசிவாய பஞ்சாக்ஷர மந்திரம்.
உபமன்யு முனிவரை நோக்கி, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கேட்கிறார் “ஞானங்கள் யாவற்றுக்கும் பிறப்பிடமாகிய மாமுனிவரே! பஞ்சாக்ஷர மந்திர மகத்துவத்தை விசாரித்தறிய விருப்பமுள்ளதால் அதை எனக்கு உபதேசித்தருள செய்ய வேண்டும்” என்று கேட்டார். உபமன்யு முனிவர் சொல்லத் துவங்கினார்.,“ யாதவ குல திலகனெ! பஞ்சாக்ஷர மந்திரத்தின் மகிமையைச் சொல்ல ஒரு கோடி வருஷங்களாகும். ஆனாலும் சுருங்கச் சொல்கிறேன்.“இந்தப் பஞ்சாக்ஷரமே பிரணவத்துடன் கூடிச் சடாக்ஷரமாக இருக்கும் என்று வேத சிவாகமங்கள் கூறும். இது மந்திரங்களிலெல்லாம் ராஜமாகும். இது சில எழுத்துக்களே ஆயினும் விஷேச அர்த்தமுடையது. சிவ பக்தர்கள் இரவு உச்சரிப்பதால் முக்தி நிலை கிடைக்கும். எல்லா மந்திரங்களுக்கும் ஆதி மந்திரமாயுள்ளது. பயனைச் சந்தேகமன்றி கொடுக்கவல்லது. இந்த மந்திரமே சிவ சொரூபமாயுள்ளது. அனேகம் சித்திகளை அளிக்கவல்லது. மங்களகரமானது. மக்களின் சித்தத்துக்கு ரஞ்சகமானது. சுகமாக உச்சரிக்கத்தக்கது, சர்வக்ஞனான சிவபெருமானால் எல்லா ஜீவர்களுக்கும் இதம் உண்டாகும்படி ஆலமரத்தின் இலை, கிளை, காய், கனி முதலியவற்றுக்கெல்லாம் சிறுவிதை காரணமாக இருப்பதுபோல எண்ணிறந்த பொருள்களுக்கு எல்லாம் இடமாகவுள்ள இந்த பஞ்சாக்ஷர மந்திரம் உண்டாக்கப்பட்டது.வாச்சியன் சிவன், வாசகம் மந்திரம் இவ்விரண்டுக்கும் சம்பந்தம் அநாதியாக இருக்கிறது. சம்சாரம் அநாதியாக இருப்பது போல அதற்கு நிவாரண ஆகிய பரமசிவன் அநாதியாக இருக்கிறான். அமிழ்தங்கள் வியாதிக்கு விரோதமாக இருப்பதுபோலவே சிவபெருமான் பிறவிச்சுழல் என்னும் நோய்க்கு விரோதியாக இருக்கிறான். சூரியன் இல்லாவிட்டால் உலகம் முழுவதும் இருள்மயமாகி அல்லலுறும் அல்லவா? அதுபோல ஈஸ்வரன் இல்லாவிட்டால் உலக சிருஷ்டியும் அஞ்ஞானத்தில் மயங்கி அழியும். பிரகிருதி புருஷர்களால் சிருஷ்டி நடவாதோ என்று கேட்பாயாயின் சிருஷ்டி என்பது புத்திமானால் செய்யத்தக்கது. பிரகிருதி அசேதனமானது, புருஷன் கிஞ்சிக்ஞன். ஆகையால் சிருஷ்டி நடவாது என்று தெரிந்து கொள்வாயாக, தர்மா தர்மங்களும் பந்தமோஷ விசாரணையுஞ் செய்யச் சர்வேஸ்வரனேயல்லாமல் வேறு காரணமில்லை. வைத்தியன் இல்லாவிட்டால் நோயாளிகள் இறப்பதுபோல சர்வேஸ்வரன் இல்லாவிட்டால் உலகம் முழுவதும் வருந்தி ஒழியும். ஆகையால் அநாதியும் ஆதியும், சர்வக்ஞனும் பரிபூரணசொரூபியும் மங்களகரனும், யாவரையும் சம்சார பந்தத்திலிருந்து காப்பவனும் ஆதிமத்தியாந்தமற்றவனும் விமலனும் சிவாகமங்களாலறியத் தக்கவனுமாகிய சிவபெருமான் உளன் என்று வேதங்கள் முறையிடுவது உண்மை.அத்தகைய சர்வேசனை அறிந்து சொல்லத்தக்க மந்திரம் இந்தப் பஞ்சாக்ஷர மந்திரமேயாகும். இதன் பொருள் அந்தப் பரமேசனேயாகும். அர்த்தமில்லாமல் சப்தமில்லை சப்தமில்லாமல் அர்த்தமில்லை என்னும் அபிதான அபிதேயத்தால் அம்மந்திரமே பரமசிவன். இதுவே சிவஞானம். இதுவெ பரமபதம் இந்தப் பஞ்சாக்ஷர வாக்கியம் சிவ சம்பந்தமான விதுவாக்கியமன்றிச் சிவ சம்பந்தமான அர்த்தவாத வாக்கியம் அல்ல. ஏனென்றால் சர்வக்ஞனும் சர்வ பரிபூரணனும் சுபாவ விமலனுமாகிய ஈஸ்வரன் உலக அநுக்கிரக காரணமாக குணதோஷமுடைய பொருட்களை அக்குணதோஷங்களுடன் உண்மையாகக் கூறுவன் அன்றிப் பொய்யாகக் கூறமாட்டான்.ஆனால் இராகத்துவேஷாதிகளுடையவர்களே அங்ஙனம் கூறுவார்கள். கேட்ட மாத்திரத்திலேயே காமக்குரோதாதிகளை ஒழித்துக் கீர்த்தியை கொடுக்கத்தக்க மந்திரம் எதுவோ அதுவே பரமமங்களமானது. மந்திரங்கள் அநேகம் இருந்தாலும் சாம்பவமூர்த்தியால் சொல்லப்பட்ட நிர்மலமான இந்த மந்திரத்திற்கு ஒப்பான மந்திரம் வேறொன்றுமில்லை. வேத வேதாங்கம் முழுவதும் இந்த ஒரு மந்திரத்திலேயே விளங்கும். எவனுடைய இதயத்தில் பிரணவசகிதமான பஞ்சாக்ஷர மந்திரம் இருக்கிறதோ அவன் எல்லா சாஸ்திரங்களையும் கேட்டவன். சிவாய என்ற மூன்று எழுத்துக்கள் எவனுடைய நாவில் எப்போதும் விளங்குமோ அவன் வாழ்வே உயிர் வாழ்வு. நீசனாயினும் அதமனாயினும் மூர்க்கனாயினும் பண்டிதனாயினும் பஞ்சாக்ஷர நிஷ்டையுடையவனாயினும் பாவ பஞ்சரத்தில் இருந்து விடுபடுவான் என்று சிவபெருமான் உலகத்தாருக்கு நன்மையுண்டாகும்படி பூர்வம் உமாதேவியாருக்குச் சொல்லி அருளினார். அவ்வாறு சொல்லிய சர்வேசனை நோக்கி, “ஸ்வாமி! கலியுகம் பாவமுடையதல்லவா? அக்காலத்தில் மனிதர்கள் அஞ்ஞானமும், பாவமும் அடைந்து வர்ணாசிரமதர்மங்களை விட்டுச் சர்வஜாதிகளும் சங்கரமாகி யாவரும் மந்திராதிகளாக இருத்தலின், குருசிஷ்ய சிரமம் இல்லாமையால் உம்முடைய பக்தர்கள் எப்படி முக்தியடைவார்கள்?” என்று உமாதேவி கேட்க, சங்கரபகவான் பின்வருமாறு கூறினார்.“பார்வதி என் சம்பந்தமான சிறந்த பஞ்சாக்ஷர வித்தையை அனுசரித்து பக்தியுடன் இருக்கும் கலிகாலபக்தர்கள் முக்தியையே அடைவார்கள். மனவாக்கு காயங்களால் செய்த தோஷங்களால் தூஷிக்கத்தக்கவர்களும் தயையே சிறிதும் இல்லாதவர்களும் சப்தர்களுமாகிய துஷ்டமனமுடைய பாவிகளும் என்னிடத்தில் பக்திமட்டுமே உடையவர்களாயின், என்னுடைய பஞ்சாஷர வித்தையே அவர்களை எல்லாப் பாவங்களிலிருந்தும் விலக்கும் என்று இந்த பூவுலகில் நான் பலமுறை பிரதிக்ஞை செய்திருக்கிறேன். பதிதனாயினும் என் பக்தனாகிப் பஞ்சாக்ஷரோபாசனை செய்தால் முக்தனாவான்” என்று கூறினார்.உமாதேவியார் சுவாமி! பதிதன் என்பவன் எப்போதும் கர்மங்களைச் செய்வதற்க்கு அயோக்கியன் அல்லவா? அத்தகையவன் எத்தகைய கர்மத்தைச் செய்தாலும் அதன் பயனை அடையாமலே நரகத்திற்க்கு ஏதுவானவன் அல்லவா? அவ்வாறு இருக்கப் பதிதன் இந்தப் பஞ்சாக்ஷர மந்திரத்தால் எப்படி முக்தனாவான் என்பதையும் எனக்குக் கூற வேண்டும் என்று கேட்டார்! அதற்கு சிவபெருமான் “பெண்ணே! நல்ல கேள்வி கேட்டாய்! இதன் பதில் இரகசியமானது பதிதன் தன்னைப் புனிதனாகக் கருதி, வேத மந்திரங்களால் என்னைப் பூஜிப்பானாயின் தயையின்றி நரகத்தையே அடைவான்.ஆனால் பஞ்சாக்ஷர மந்திரத்தால் என்னைத் தியானிப்பானாயின் மோஷத்தை அடைவான். உதகபக்ஷணமும் வாயுபக்ஷமும் செய்து கொண்டு எண்ணற்ற விரதங்களைச் செய்து உடலைச் சோஷிக்கச் செய்து பல மந்திரங்களால் என்னைத் தியானஞ்செய்தாலும் என்னுடைய லோகத்தையடையச் சந்தேகமில்லை.ஆகையால் தவம், யாகம், நியமம் முதலிய யாவும் பஞ்சாக்ஷர மந்திர உபாசனைக்குக் கோடியமிசத்தில் ஓர் அமிசத்திற்க்கு நிகராகாது. பாசபக்தனாயினும் முக்தனாயினும் எவன் பஞ்சாக்ஷர மந்திரத்தால் என்னை பூஜிப்பானோ அவனே ஐயமின்றி முக்தியடைவான்.சிவபக்தியுடையவனாயினும் சிவபக்தியில்லாதவனாயினும் பதிதனேயாயினும் மூடனாயினும் ஒருமுறை என்னைப் பஞ்சாக்ஷர மந்திரத்தால் பூஜித்தால் அவன் முக்தனாகிறான். பஞ்சாக்ஷரங்களாலாவது, சடாக்ஷரங்களாலாவது என்னைப் பக்தியோடு ஜபித்தால் முக்தனாகிறான். குருமுகத்தால் உபதேசம் பெற்றாவது. உபதேசிக்கப் பெறாமலாவது இந்தப் பஞ்சாக்ஷர மந்திரத்தால் என்னைப் பூஜித்தவன் என் பக்தன், உபதேசம் பெறாதவனைவிட உபதேசம் பெற்றவன் கோடிப் பங்கு அதிகம், ஆகையால் என்னுடைய பஞ்சாக்ஷர மந்திரத்தை குருமுகமாக உபதேசிக்கப் பெற்றுக் கொண்டே உபாசிக்க வேண்டும். குருமுகமாக உபாசிக்கப் பெற்று பஞ்சாக்ஷர உபாசனை செய்யும் பிரம்மச்சாரி என்னுடைய சாரூப்பியத்தை (இறைவனுருவை) அடைவான். சிறப்பாகச் சொல்ல வேண்டியதென்ன என்னுடைய பக்தர்கள் யாவரும் இந்த மந்திர உபாசனைக்கு அதிகாரிகள், அதில் குருபதேசம் பெற்றவன் உயர்ந்தோன். இந்தப் பஞ்சாக்ஷர பிரபாவத்தாலேயே உலகங்கள், வேதங்கள், மாமுனிவர், தர்மங்கள், தேவர்கள், எல்லா ஜகத்தும் யாவும் சாசுவிதமாக நிலைத்துள்ளன. பிரளயம் நிகழ்ந்த காலத்தில், தாவர ஜங்கமங்கள் யாவும் நசிக்கையில் யாவும் பிரகிருதியில் அடங்க, அப்பிரகிருதி என்னிடத்தில் லயமடையவும் அப்போது நான் ஒருவனே இருப்பேன்.எனக்கு இரண்டாவதாக ஒருவனும் இருக்கமாட்டான். அப்போது வேதங்கள், சாஸ்திரங்கள், வித்தைகள் யாவும் பஞ்சாக்ஷர மந்திரத்தில் இருக்கும்படி என் சக்தியால் செய்கிறேன். அவை என்னுடைய சக்தியால் நாசமடையாது இருக்கும். படைப்புத்துவக்கமும் என்னாலேயே பிரகிருதி புருஷ பேதத்தால் செய்யப்பட்டது. அப்போது கடல் நடுவே சேஷசயனத்தில் மாயனாகிய நாராயணன் துயில் செய்தனன். அவனது நாபியிலிருந்து தோன்றிய பிரம்மன் ஈகாமியமில்லாமல் மூவுலகங்களையும் படைக்கச் சக்தியற்று மஹாதேஜஸ் உள்ள பத்து முனிவர்களைப் படைத்து அவர்களுக்குச் சிருஷ்டி செய்யும் ஆற்றலை உண்டாக்க வேண்டும் என்று விருப்பங்கொண்டு, அவர்களுடன் என் அருகில் வந்து, “ஜகதீசா! என் மக்களான இவர்களுக்கு படைப்புத்திறன் உண்டாகத் தயை புரியவேண்டும்! என்று வேண்டினான்.நான் ஐந்து திருமுகங்களுடன் விளங்கி ஐந்து முகங்களால் ஐந்து எழுத்துக்களை பிரம்மதேவனுக்கு உரைக்க, அவன் ஐந்து முகங்களால் அவ்வைந்து எழுத்துக்களையும் கிரகித்துக் கொண்டு வாச்சிய வாசக சம்பந்தத்தால் சர்வேசனான பரமாத்மா யான் என்பதை உணர்ந்து அந்த மந்திர விநியோகத்தையும் உணர்ந்து அந்தப் பத்து முனிவர்களுக்கும் விதிப்படி உபதேசித்தான். அவர்கள் அந்த மந்திரத்தை அடைந்து தங்கள் தந்தையின் கட்டளைப்படி என் ஆராதனையில் மிகவும் விருப்பமுடையவர்களாகி, மேருமலைச் சிகரத்திலுள்ள எனக்குப் பிரியமான முஞ்சவான் என்ற சிகரத்தையடைந்து அதன் உச்சியில் உலக சிருஷ்டியை விரும்பி, ஆயிரத்தேவ ஆண்டுகள் காற்றைப்புசித்துக் கொண்டு பஞ்சாக்ஷர மந்திர ஜபத்துடன் உக்கிரமான தவத்தை மெச்சிய நான் காட்சியளித்து படைப்புத் தொழில் விருத்தியடையும்படி அந்த ரிஷிகளுக்கு பஞ்சாக்ஷர மந்திரத்தில் ருஷி, சந்தஸ், கீலம், பீஜம், சந்தி, தெய்வதம், நியாசம், ஷடங்க திக்பந்தரம், விதி யோகம் முதலியவற்றை உபதேசிக்கும் போது, அவர்கள் அந்த மந்திர மகிமையால் அதிக தவ சம்பன்னர்களாய் தேவ; அசுர, மனிதர்களின் படைப்பைச் செய்தார்கள்.சுந்தரீ! பரமவித்தையாகிய இந்த பஞ்சாக்ஷர மந்திர ஸ்வரூபத்தை இப்போது சொல்கிறேன் கேட்பாயாக, முதலில் நம: என்னும் பதத்தை உச்சரிக்கவேண்டும். பிறகு சிவாய என்னும் பதத்தை உச்சரிக்கவேண்டும் "நமசிவாய" இவ்வைந்து எழுத்துக்களே சங்கிரகமாகவுள்ள பீஜம். அது முதலில் என்னாலேயே சொல்லப்பட்டது. அது எனக்கே வாசகமாக இருக்கிறது. அந்தப் பஞ்சாக்ஷரி புடமிட்டெடுத்த பொன்மயமும் பூரித்துயர்ந்த கொங்கைகளும் ஆறு சிரங்களும் கரங்களில் பதுமம், உற்பவம் வாதம் அபயங்களும் சர்வ லக்ஷணங்களும் விசேஷ ஆபரண பூஷிதமும் புண்டரீகாசனமும் கரிய சுருண்ட மயிர்களும் கொண்டு விளங்குவதை பரமஞானிகளே உணர்வார்கள். இவ்வைந்து எழுத்துக்களும் முறையே மஞ்சள் நிறம், கருநிறம், புகைநிறம், பொன்னிறம், செந்நிறங்களாக விளங்கும். இந்த ஐந்து "நமசிவாய" எழுத்துக்களையும் விந்து நாதங்களுடன் கூட்டி உச்சரிக்கவேண்டும்.விந்து அர்த்தசந்திர ஸ்வரூபமானது. நாதம் தீப சிகையைப் போன்றது, இரண்டாம் எழுத்து பீஜம். நான்காம் எழுத்து தீர்க்கபூர்வமானது. ஐந்தாம் எழுத்து சக்தி. இந்த மந்திரத்திற்கு வாமதேவன்.. ரிஷி பங்க்தி சந்தஸூ, தேவதை சிவனாவான். இவ்வைந்து எழுத்துக்களுக்கும்,கௌதமன், அத்திரி, விசுவாமித்திரன். ஆங்கிரசு, பரத்துவாஜர் முதலியோர் முறையே ரிஷிகள், காயத்திரி அனுஷ்டிப்பு திரிஷ்டிப்பு சந்தஸூ: பிரஹதி விராட் என்று சொல்லப்படும் இந்திரன், உருத்திரன், விஷ்ணு, பிரம்மன், குமாரஸ்வாமி இவர்கள் தேவர்கள் இவ்வைந்து "நமசிவாய" எழுத்துக்களும் என் ஐந்து முகங்களிலேயே பொருந்தியிருக்கும்.அவற்றுள் கிழக்கு முகத்தில் நகாரமும், தெற்க்கு முகத்தில் மகாரமும், மேற்கு முகத்தில் சிகாரமும், வடக்கு முகத்தில் வகாரமும், ஊர்த்துவத்திளுள்ள ஈஸான முகத்தில் யகாரமும் பொருந்தும். அவற்றுள் முதல் எழுத்தும், நான்காவது எழுத்தும் உதாத்தம், இரண்டாம் எழுத்தும், ஐந்தாம் எழுத்தும் ஸ்வரிதம், மூன்றாம் எழுத்து அறுதாத்தம். இந்த ஐந்து எழுத்துக்களும் மங்களகரமாகக் கோர்வை செய்யப்பட்டுள்ளன. இதுவே மூலவித்தை என் ஸ்வரூபமான இவற்றின் பெயர்கள் தெரியத்தக்கவை. நகாரம் சிவன், மகாரம் சிகை, சிகாரம் கவசம், வாகாரம் நேத்திரம், யகாரம் அஸ்திரம் நம: ஸ்வாஹா வஷட்ஹீம் வெளஷட்பட் என்னும் இவை அவற்றின் இறுதியில் கூட அங்கத்துவமடைகிறன.பெண்ணே! இந்தப் பஞ்சாக்ஷர மந்திரத்தின் ஐந்தாவது எழுத்தாகிய யகாரத்தை பன்னிரண்டாவது ஸ்வரமாகிய ஐகாரத்துடன் சேர்த்து உச்சரித்தால் (சிவை) உனக்கு மூல மந்திரமாகும். ஆகையால் இந்த மந்திரத்தால் மனவாக்குக் காயங்களால் நம்முடைய இருவர் பூஜையையும் ஜபஹோமாதிகளையும் ஞானத்தோடும் சிரத்தையோடும் காலத்தில் பக்தி பூர்வமாகச் சக்திக்கு ஏற்ப, சம்பத்து முதலியவற்றை மதியாமல், அன்புடன் செய்யத்தகும். ஒருவன் எவ்விடத்திலாவது எந்தக் காலத்திலாவது பக்தியுடனும், நம்மைப் பூஜிப்பானாயின் முக்தியடைவான். என் பக்தர்களுக்காகவே சாஸ்திர நியமங்கள் செய்யப்பட்டுள்ளன. இனி மந்திரத்தை கிரகிக்க வேண்டிய முறையைக் கூறுகிறேன். குரு உபதேசம் இல்லாமலும் கிரியா பூர்வம் இல்லாமலும் சிரத்தை இல்லாமலும் குருதக்ஷிணை கொடாமலும் பெற்ற மந்திரத்தை எப்பொழுதும் ஜபித்தாலும் பயன் உண்டாகமாட்டாது. குரு உபதேசம் பெற்று கிரியா பூர்வமாகச் சிரத்தையுடன் குருதக்ஷிணை கொடுத்து என் ஸ்வரூபமான மந்திரத்தைப் பெற்று ஜபித்தால் பெரும் பயன்களைக் கொடுக்கும்.ஆசாரிய ஸ்தானத்திற்கு யோக்கியதையும் வேத வேதாங்க உணர்ச்சியும் ஜபசீலமும் நற்குணமும் தியானயோகத்தில் விடாத சித்தமுமுடைய உத்தம அந்தணனாகிய குருவின் சந்நிதியை அடைந்து , பக்தியுடன் மனவாக்கு காயங்களால் பூஜித்து மகிழ்ந்து ஆசிரிய பக்தி வகிக்க வேண்டும். ஆசாரியனுக்கு யானை, குதிரை, தேர், இரத்தினம், நிலம், வீடு, அணிமணி ஆடை, தானியம், தனம் முதலியவற்றைத் தத்தம் சக்திக்கு ஏற்ப வஞ்சனையில்லாமல் குருதக்ஷிணையாகக் கொடுக்க வேண்டும். மந்திர சித்தி உண்டாக வேண்டும் என்று கருதுவோன் தன்னிடமுள்ள பொருளை ஆசாரியனுக்கு மறைக்கக் கூடாது. அவ்வாசிரியனுக்கு தன் உடல் பொருள் ஆவி மூன்றினையும் ஒப்புவிக்கவேண்டும். இப்படி ஆசாரியணை மகிழுச்சியடையச் செய்து, அவன் மூலமாக மந்திரத்தையும் ஞானத்தையும் முறைமையாகக் கிரகிக்க வேண்டும். அவ்வாறு மகிழ்ந்த குருவானவன் தன்னை ஓராண்டுக் காலம் பணிவிடைச் செய்துவந்து அகங்காரம் ஒழிந்து பரிசுத்தனாய் உபவாசாதி விரதங்களை அனுஷ்டிக்கும் மாணவனை மந்திரபூர்வமாகப் பூரண கும்பத்தால் ஸ்நானம் செய்வித்து, கந்தம், புஷ்பம்,ஆடை, ஆபரணம் முதலியவற்றால் அலங்கரித்து புண்ணியமான வசனம் செய்வித்தும் பிராமண பூஜை செய்வித்தும் கடற்கரை நதிக்கரை, பசுக்கள் தங்குமிடம் சிவாலயம், புண்ணியபூமி, தன் வீடு ஆகிய இடங்களில் ஓரிடத்தில் சுபநட்சத்திரமும் சுபயோகமும் சுபகரணமும் கூடிய ஒரு காலத்தில் ஏகாந்தமாக இருந்து, மகிழ்ச்சியுள்ளத்துடன் பஞ்சாக்ஷர மந்திரத்தை உதாத்தாதி வாயுக்தமாக உபதேசித்து அவனை அவ்வகையே சிரமமாக உச்சரிக்க வல்லவனாகச் செய்து “உனக்குச் சுகமுண்டாகுக நீ யாவருக்கும் பிரியவனாகுக!” என்று வாழ்த்த இவ்வகையாக மந்திரத்தைக் கொடுக்க வேண்டும். அவன் நடந்துகொள்ள வேண்டிய செயல்களைக் குறித்து ஆக்ஞை செய்யவேண்டும்.இவ்வகையாக குருவினால் மந்திரத்தையும் ஆக்ஞையையும் அடைந்த ஜீவன், நாள்தோறும் சங்கற்பம் செய்து, தான் பிழைத்திருக்கும் வரையில், ஆயிரத்தெட்டுமுறை மந்திர ஜபஞ் செய்தால் அவன் உத்தமகதியை அடைவான். இந்த மந்திரத்தின் ஒவ்வொரு அக்ஷரத்திற்கும் நான்கு லக்ஷம் ஜபம் செய்துகொண்டு இரவில் மட்டும் உணவருந்தி வருபவன் (புனஸ்சரணை) நியமமாக ஜபம் செய்தவன் எனப்படுவான். புனஸ்சரணை செய்தபிறகும் ஜபத்தை நிறுத்தாமல் மேலும் செய்துகொண்டு வருபவனுக்குச் சமமான மந்திரசித்தியுடையவன் ஒருவனுமில்லை. நீராடித் தூய்மையான ஓர் இடத்தில் ஆசனத்தில் வடக்கு முகமாகவாவது கிழக்கு முகமாகவாவது இருந்து ஏகமனதாக உன்னையும் என்னையும் ஆசாரியனையும் தியானித்து, பஞ்சபூதங்களையும் தஹனபலாலனாதிகளால் சுத்திசெய்து, நியாசங்களைச் செய்து, பிராணாயாமம் முடித்து ஆசாரியனால் உபதேசிக்கப்பட்ட மந்திரம், ருஷி, சந்தஸ், அதிதேவதை, பீஜம் சக்தி முதலியவற்றுடன் ஸ்மரணைசெய்து பஞ்சாக்ஷர ஜபம் செய்யவேண்டும்.மானஸமானஜபம் உத்தமம், மெல்லப் பிறர் கேளாத வகையில் செய்யும் ஜபம் மத்திமம், யாவருக்கும் கேட்க்கும்படியாக உயர்த்தி ஜபித்தல் அதமம், மேற்கூறிய மூவகைகள் ஜபபேதத்தால் உண்டாகுமிடத்து உத்தமத்திற்க்குத் தெய்வம் உருத்திரனும் மத்திமத்திற்க்கு விஷ்ணுவும், அதமத்திற்க்குப் பிரமனுமாவர். உதாத்தாறுதாத்த ஸ்வரிதஸ்வரங்களுடன் மந்திராக்ஷரங்களை உச்சரித்து செய்யும் ஜபம் வாசிகம், நாக்கை மட்டும் அசைத்து செய்யும் ஜபம் உபாம்ஸூ (இரகசியம்) மனதிலேயே தியான ரூபமாக ஜபித்தல் மானசீகம். வாசிகத்துக்கு ஜபித்த அளவே பயன். உபாம்சு ஒன்றுக்கு ஆயிரம் வாசிக பலன் உண்டாகும். ஆதியந்தங்களில் பிராணாயாமங்களை உடைய ஜபம் அகர்ப்பம் என்றும் சொல்லப்படும். பிராணாயாமமாவது நேசக பூரகங்களைச் செய்து, நாற்பதுரு ஜபிக்கும் வரை வாயுபந்தனம் செய்வதாகும். அசக்தனாக இருப்பவன், நாற்பதுரு ஜபிக்கும் வரையில் நிறுத்தக்கடமையால் ஐந்துரு மூன்றுரு அல்லது ஒருருவாவது ஜெபிக்கும் அளவுகாலம் வாயுவைச் சிந்தித்தலும் பிராணாயாமம் என்பர். ஸகர்ப்ப அகர்ப்பங்களில் ஸ்கர்ப்பமே சிறந்தது. ஸ்கர்ப்பத்தைவிட ஸத்தியானம் ஆயிரம் பங்கு சிறப்புடையது. இவ்வகையான ஜபங்களில் தன் சக்திக்கு ஏற்ப ஒரு வகையான ஜபத்தைச் செய்யவேண்டும்.பார்வதி! ஜபம் செய்யும்போது விரலாற் கணக்கிடுதல் அவ்வளவு பயனேயே தரும், விரல் ரேகையால் அளவிடுதல் எட்டுப் பங்கு அதிகம், புத்திர ஜீவமணியால் ஜபித்தால் பத்துப் பங்கு அதிகம், பவளத்தால் ஜபித்தால் அதில் ஆயிரம் மடங்கு அதிகம், ஸ்படிக மணியால் ஜபித்தால் அதில் பதினாயிரம் மடங்கு அதிகம், முத்து மணியால் ஜபித்தால் அதில் இலக்ஷம் பங்கு அதிகம், தாமரைமணியால் ஜபித்தால் அதில் பத்து லக்ஷம் பங்கு அதிகம், பொன்னாற் செய்த மணியால் ஜபித்தால் அதில் கோடிப் பங்கு அதிகப்பயணுண்டாகும். உருத்திராக்ஷ மணியாலாவது தர்ப்பை முடியிலாவது ஜபிக்கும் பயனுக்கு அளவு சொல்லி முடியாது.இனி ஜபமாலை முப்பது மணிகள் கொண்டதாயின் ஐசுவரியம் உண்டாகும். இருபத்தேழுக்கு புஷ்டியும், இருபத்தைந்துக்கு முக்தியும், பதினைந்துக்கு அபிசார் மந்திர சித்தியும் உண்டாகும். அங்குஷ்ட (பெரு) விரலால் ஜபித்தால் முக்தி உண்டாகும், தர்ஜனி (சுட்டு) விரலால் ஜபித்தால் சத்துரு நாசம் உண்டாகும், மத்திம (நடு) விரலால் ஜபித்தால் பொருள் உண்டாகும், அநாமிகை (மோதிர) விரலால் ஜபித்தால் சாந்தி உண்டாகும், கனிஷ்டிகை (சிறு) விரலால் ஜபித்தால் யாவும் உண்டாகும், பெருவிரலைக் கூட்டாது ஜபித்தால் நிஷ்பலமாம். வீட்டில் ஜபிப்பதைவிட பசுமந்தை தங்குமிடத்தில் ஜபித்தால் அதைப்போல் நூறு பங்கும், நந்தவனத்தில் ஜபித்தால் அதி ஆயிரம் பங்கும், புண்ணிய பர்வதங்களில் ஜபித்தால் அதிலும் ஆயிரமும், நதிகளில் லக்ஷமும் தேவாலயத்தில் கோடியும் நமது சந்நிதியில் அநந்தமுமாக விசேஷ பயனையளிக்கும். சூரியன், சந்திரன், ஆசாரியன் விளக்கு,ஜலம், வேதியர்,பசு இவற்றின் முன்னர் ஜபித்தல் நலம். கிழக்கு முகம் பார்த்து ஜபித்தால் வசியமும் தக்ஷிணம் அபிசாரமும், மேற்கு தனமும் உத்தரம் காந்தியும் உண்டாகும். சூரியன், அக்கினி, குரு,பிராமணர், பெரியோர் வந்தால் அவர் முன்னிலையில் இருத்ததன்றி அவர்களை விலகி ஜபிக்கக்கூடாது. ஜபம் செய்யும்போது, தலைமீது துகில் சுற்றியும், உடலை வஸ்திரத்தால் போர்த்தியும் தலைமயிரை விரித்துக்கொண்டும் திகம்பரனாயும் (நிர்வாணமாகவும்) பவித்திரமணியாமல் இருந்தும் ஜபம் செய்யக்கூடாது வார்த்தையாடிக் கொண்டும் புனித மில்லாமலும் கோபம், சாந்தம், தும்முதல்,கொட்டாவி விடுதல் உமித்தல் முதலியன செய்யாமலும் புலையர் நாய் முதலிய அசுத்தங்களைப் பாராமலும் ஜபம் செய்யவேண்டும். தும்மல், இருமல் முதலியன தேகதர்மங்கள்.ஆகையால் அத்தகைய உடற்குற்றங்கள் சம்பவித்தால் மும்முறை ஆசமனீயம் செய்து, என்னையும் உன்னையும் தியானிக்க வேண்டும், அல்லது சூரியன், அக்கினி தீபம் இவற்றில் ஒன்றைப் பார்க்கவேண்டும், அல்லது பிராணாயாமம் செய்யவேண்டும். ஆசனமில்லாமலும் சயனித்தும், நடந்தும்,நின்றும்,கால் நீட்டியும், குக்குடாசானமிட்டும் வாகனமீதமர்ந்தும், கட்டிலிலிருந்தும் மனதில் சிந்தனையுற்றும், தெரு, அசுத்தமான இடம், இருள் முதலியன இடங்களிலும் மந்திரத்தை ஜபிக்கக்கூடாது, சக்தியிருக்கும் வரையில் இந்த நியமங்களைக் கவனிக்கவும். சக்தியில்லா விட்டால் சக்திக்குத் தக்கவாறும் ஜபிக்கலாம். விசேஷமாகச் சொல்ல வேண்டியதில்லை. ஒரே வாக்கியம் சொல்லுகிறேன்.சதாசார சம்பன்னனாய், சுத்தமாக மந்திர ஜபம் செய்பவனுக்கு எல்லா மங்களங்களும் சித்திக்கும். ஆசாரமே முதலான தர்மம் ஆசாரமே உத்திருஷ்டமான தனம். ஆசாரமே மேம்பாடான வித்தை, ஆசாரமே உயர்வானகதி, ஆசாரமற்றவன் பூவுலகில் நிந்திக்கப்படுவான். பரலோகத்திலும் சுகமடையமாட்டான். ஆகையால் மந்திரம் ஜபிப்பவன் ஆசாரத்துடன் இருக்க வேண்டும். எவனுக்கு வேத சாஸ்திரங்களில் எவ்வெக்கருமங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றனவோ அவற்றைக் கடைப் பிடிப்பதே சதாசாரம். ஏனயவை சமாசாரமாகமாட்டாது. சத் புருஷர்களால் ஆசரிக்கப்படுவதால் சதாசாரம் எனப்படும். சதாசாரத்திற்கு மூல காரணம் ஆஸ்திக்யம். ஆஸ்திகனாக இருந்து விதிவலியால் சதாசார அனுஷ்டானத்துக்கு இடையூறு சம்பவிக்குமானால் அவன் தூஷிக்கத் தக்கவனல்லன். ஆகையால் ஆஸ்திகனாக இருக்கவேண்டும். புண்ணிய பாவங்களால் இவ்வுலகத்தில் சுக துக்கங்களுண்டாவது போல, பரலோகத்திலும் சுக துக்கங்களை அநுபவிக்க வேண்டும் என்ற நம்பிக்கையுண்டாயிருத்தலே ஆஸ்திக்கியம்.பார்வதி! மிகவும் இரகசியமாகப் போற்றத்தக்க வேறொன்றையுஞ் சொல்லுகிறேன். அது நாஸ்திகர் முதலான பாவிகளுக்குச் சொல்லலாகாது. அது என்னவெனில் சதாசார மில்லாதவனாயினும் பதிதனாயினும் சண்டாளனாயினும் ஒருவனைக் காக்கத் தக்கது பஞ்சாஷர மந்திரத்தைவிட பிறிதொன்றில்லை. நடந்துகொண்டிருந்தாலும் நின்று கொண்டிருந்தாலும் தன் விருப்பத்தின்படி கஷ்டத்தனமான காரியங்களைச் செய்துகொண்டிருந்தாலும் அசுசியாயினும் சுசியாயினும் ஷடத்துவ பரிசோதனமில்லாமல் அநாசார முடையவனாயினும் இந்த மந்திரம் குருவால் உபதேசிக்கப்படினும் உபதேசிக்கப்படாவிட்டாலும் சிறிது ஜபித்தாலும் பெரும் பயனைக் கொடுக்கும், எல்லாத் தோஷங்களையுடையவனாயினும் என்னிடம் பக்தி என்பது ஒன்றுமட்டும் இருக்குமானால் அவனுக்குச் சந்தேகமில்லாமல் மந்திர சித்தியுண்டாகும்.அத்தகைய பக்தனுக்கு லக்கினம், திதி, வாரம், யோகம், நட்சத்திரம் முதலியவை நன்றென்றும் தீதென்றும் அவசியம் இல்லை. அவன் நித்திரை செய்யும்போது விழித்துக் கொண்டிருப்பவனே யாவான். ஒருவனுக்கும் அவன் ஒரு காலத்திலும் பகைவனாக மாட்டான். மந்திரசித்தியடைந்த குருவை அடுத்து உபதேசம் பெற்றவன் சித்தன் பரிசுத்தமுள்ள குருவையடுத்து உபதேசம் பெற்றவன் சித்தன். உபதேசை இல்லாமல் செரிப்பவன் சாத்தியன். என்னிடத்தில் மந்திரத்தினிடத்தும் குருவிடத்தும் சிரத்தைபக்தியுடையவர்கள் இதர மந்திரங்களை விடுத்து, பஞ்சாஷர மந்திரத்திலேயே நிர்விக்கினமாக மனதைச் செலுத்தி ஜபிக்கவேண்டும். மற்ற மந்திரங்கள் சித்தித்தாலும் இந்த மந்திரம் சித்திக்கமாட்டாது. இந்த மந்திரமே சித்திக்குமாயின் எல்லா மந்திரங்களுஞ் சித்தியடைந்தனவேயாகும்.அநேக தேவர்கள் சுவாதீனர்களாயினும் நான் ஒருவனே சுவாதீனமாகாதவன். நானே ஸ்வாதீனமாவேனாயின் எல்லாத் தேவர்களும் சுவாதீனமாவார்கள். பிற மந்திரங்களுக்குள்ள தோஷங்கள் ஒன்று இந்த மந்திர சித்திக்கு கிடையாது இந்த மந்திர அனுஷ்டானத்திற்கு ஜாதி நியமங்களும் இல்லை. ஆகையால் சண்டாளர் முதலிய யாவரும் இதை ஜபிக்கலாம். ஆகையாலேயே இந்த மந்திரம் பிரபலமானது அகண்டபயனைக் கொடுப்பதுமாகும்” என்று உமாதேவிக்கு சர்வலோக நாயகனாகிய பரமசிவன் கூறினார் என்று உபமன்யு முனிவர் கிருஷ்ணமூர்த்திக்குக் கூறினார். இந்த மந்திரத்தை பக்தியுடன் ஜபித்தவனும் சொன்னவனும் கேட்டவனும் சகல பாவங்களும் ஒழிந்து உத்தம பதவியை அடைவார்கள்.
நன்றி: பிரேமா பிரசுரம் சென்னை.
சிவமஹாபுராணம் பதிப்பில் இருந்து
www.omnamashivaayaa.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக