ஆதித்தமிழன் வகுத்த வர்மக்கலை!
வர்மக் கலையினை ஆதி குருவான சிவனே தோற்றுவித்ததாக சித்தர் பெருமக்கள் தங்களின் பாடல்களில் பதிவு செய்திருக்கின்றனர். அவர் தனது இணையான சக்திக்கு இந்த கலையை உபதேசித்தாகவும், அவரிடம் இருந்து நந்தி தேவர் வழியே தனக்கு கிடைத்தாக அகத்தியர் தனது பாடல்களில் கூறியிருக்கிறார்.
இதனை அகத்தியர் தனது "ஒடிவு முறிவு சாரி" என்னும் நூலில் பின்வருமாறு சொல்கிறார்.
"பாதிமதி யணிபரமன் தேவிக்கிசைய
பணிவுடனே தேவியிடம் நந்தீசர்வாங்கி
மகிழ்வாக எந்தனக்கு சொன்னாரப்பா
வேதனை வாராமல் வர்மசூக்குமம்
விபரமுடன் உந்தனுக்கு உரைக்கக்கேளே"
- அகத்தியர்.
போகரும் தனது "போகர் வர்மசூத்திரம்" என்னும் நூலில் சிவன் அம்மைக்கு சொல்ல தாயான ஈஸ்வரி நந்திக்கு சொல்ல நந்தி தனக்கு சொன்னதாக சொல்கிறார்.
"தாரணிந்த ஈசன்று ஆயிக்குச் சொல்ல
தாயான ஈஸ்வரியும் நந்திக்குச் சொல்ல
பரிவுடனே நந்திசொன்ன மார்க்கம்
பாடினேன் வர்மசூத்திரம் பண்பாய்தானே"
- போகர்.
போகரின் சீடரான புலிப்பாணி சித்தர் தனது ”வர்ம காண்டம்” என்னும் நூலில் இது பற்றி பின்வருமாறு சொல்கிறார்.
"பதாரம்தனைப் பணிந்து வர்மகாண்டம்
பாடினேன் நாடிநரம்பு ஆனவாறும்
காதாரம் கொண்டுணர்ந்து என்னைஆண்ட
கடாட்சமது போகருட கருணை யாலே
வளமாகப் புலிப்பாணி பாடினேனே"
- புலிப்பாணி.
இந்த தகவல்களின் அடிப்படையில் ஆதிசிவன் இதனை உருவாக்கியிருந்தாலும், நந்தி தேவரின் வழியேதான் அவரது சீடர்கள் இந்த கலையினை கற்றுத் தேர்ந்திருப்பது தெளிவாகிறது. நந்தி தேவரின் காலம் இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்த வர்மக் கலை பற்றி பல்வேறு விதமான செவிவழிக் கதைகள் இருக்கின்றன. அவற்றின் நம்பகத் தன்மை கேள்விக்குரியது. எனினும் புராண இதிகாசங்களில் இந்த வர்மக் கலை பற்றி நேரடியான/மறைவான தகவல்கள் குறிப்பிடப் பட்டிருக்கிறது. மகாபாரதத்தில் பீமசேனன் துரியோதனின் தொடையில் கதையால் அடித்துக் கொன்றதை ஒரு உதாரணமாகச் சொல்லலாம்.
முன்னாளில் வர்மக் கலையானது தமிழர்களின் வாழ்வியல் கலையாகவும், குருமுகமாய் எவரும் பயிலக் கூடியதாக இருந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தமிழர்களின் மீது அன்னியர்களின் ஆதிக்கம் உருவான போது இந்த கலை மறைவாகவும், இரகசியமாகவும் வைக்கப் பட்டு, கால ஓட்டத்தில் அழிந்தே போய்விட்டது என்று சொன்னால் மிகையில்லை.
via தமிழ்ச் சித்தர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக