தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 9 ஜூன், 2013

கம்பனும் அவன் இலக்கியத்தை ருசித்த கண்ணதாசனும்

கம்பனும் அவன் இலக்கியத்தை ருசித்த கண்ணதாசனும்

by Sakthi Sakthithasan (Notes) on Sunday, June 9, 2013 at 4:48pm
கம்பன் எனும் மாபெரும் கவிஞன் தந்த இனிய தமிழ் இலக்கியத்தை ஆழமாய்ப் படித்துச் சுவைத்து தன்னுள் முழுமையாக உள்வாங்கிக் கொண்டவர் எம்மினிய கவியரசர் கண்ணதாசன் அவர்கள். அதைப் படித்தது மட்டுமில்லாமல் அக்கம்பரசத்தின் சாரத்தை பாமர ரசிகர்களும் ரசிக்கும் படி எளிமையான தமிழில் எமக்கு இனிய திரை கானங்களாக்கித் தந்த கவிக் கோமகன் எமதினிய கவியரசர் என்று சொன்னால் அது மிகையாகி விடாது.

இதோ கவியரசர் கம்பனை ரசித்ததின் எமக்குக் கிடைத்த சில பொக்கிஷங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

"வியட்நாம் வீடு" எனும் திரைப்படத்தில் வரும் ஒரு பாடல் உங்களில் அநேகமானவருக்கு பரீட்சையமாக இருக்கலாம். “பாலக்காட்டுப் பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா " எனும் பாடல்.
அதிலே வரும் ஒரு பகுதியைக் கீழே பாருங்கள்,

பரமசிவன் சக்தியை ஓர் பாதியில் வைத்தான் அந்த 
 பரமகுரு ரெண்டு பக்கம் தேவியை வைத்தான் 
 பால் கடலில் மாதவனோ பக்கத்தில் வைத்தான் ராஜா  
 பத்மநாபன் ராணியைத் தன் நெஞ்சில் வைத்தான்.

எத்தனை எளிமையாக அருமையாக எங்களுக்கு ஒரு கணவன் தனது மனைவியின் மீது கொண்ட அன்பை எடுத்து விளக்கியுள்ளார். இதையே அவர் ரசித்த கம்பனின் வரிகளில் பார்ப்போமா ?

பாகத்தில் ஒருவன் வைத்தான் பங்கயத்து இருந்த பெண்ணை
  ஆகத்தில் ஒருவன் வைத்தான் அந்தணன் நாவில் வைத்தான் 
 மேகத்தில் பிறந்த மின்னை வென்ற நுண்இடையாளை 
 மாகத்தோள் வீர பெற்றால் எங்கனம்
வைத்து வாழ்தி!

கம்பனை ஆழப் படித்திராவிட்டால் எமது வித்தக கவிவேந்தனின் பார்வையில் இத்தகைய வரிகளில் பட்டிருக்குமா?

இதோ அடுத்தொரு ஆக்கத்தைப் பார்ப்போமா ?

தாடகை ஸ்ரீராமனைக் கண்ணுற்று உகுக்கும் வார்த்தைகளைக் கம்பன் தன் பாணியில் கூறுகிறார்,

மைவண்ணத் தரக்கி போரில் மழைவண்ணத் தண்ணலே 
 கைவண்ணம் அங்குக் கண்டேன் கால் வண்ணம் இங்குக் கண்டேன்

இவ்வரிகளில் தன் நெஞ்சத்தைப் பறிகொடுத்த கவியரசர் அதைத் தனது ரசிகர்களின் மத்தியில் எளிமையான தமிழில் எடுத்துப் போக அவாவுற்றார் . கிடைத்தது அவருக்கு ஒரு அரிய சந்தர்ப்பம். புரட்ச்சித் தலைவரின் "பாசம்" எனும் திரைப்படத்திற்காக எழுதிய ஒரு பாடலில் புகுத்துகிறார் அவ்வரிகளை, எங்கே பார்ப்போமா ?

ஆண் :பால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன் பெண் :கண் வண்ணம் அங்கே கண்டேன் கைவண்ணம் இங்கே கண்டேன் பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன் கார் வண்ண கூந்தல் தொட்டு தேர் வண்ண மேனி தொட்டு பூவண்ண பாடம் சொல்ல எண்ணம் இல்லையா?

என்னே என் கவித்தலைவனின் ஆற்றல் . எத்தனை உன்னிப்பாக கம்பனின் இலக்கியரசத்தை உள்வாங்கி இப்பாடல் வரிகளை ஆக்கியிருப்பார் எமது அமரகவி.

கவியரசர் கண்ணதாசனின் அழகுக்
கைவண்னத்தைக் கண்ணுற்று
என்வண்ணம் இருந்த மனத்தை
அவன் வண்ணம் இழந்திட்ட ஒரு
பொன்வண்ணப் பொழுதினிலே
உம் வண்ணம் என் சிந்தையை
தரும் வண்ணம் என்விரல்கள்
வண்ணமாய்க் கவியரசர் பெருமை தீட்டியதே

அன்புடன்
சக்தி சக்திதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக